தமிழர் பிரதேச மயானத்தில் தீவிரவாதியின் உடல் அடக்கம் கிளர்ந்தெழுந்த மக்கள்

கடந்த ஏப்ரல் 21 தற்கொலைத் தாக்குதலில் பலியான தீவிரவாதியின் உடல் இரசாயனப் பகுப்பாய்வின் பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மட்டக்களப்பு  ஆலையடிச்சோலை இந்து மயானத்தில் அடக்கம் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதையடுத்து, அந்தப் பிரதேச மக்கள் பெரும் எதிர்ப்பைத் தெரிவித்து, கண்டன ஊர்வலம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த ஊர்வலம் நேற்று (11) நடைபெற்றது. ஆர்ப்பாட்டக்காரர் இறுதியில் மயானத்தை அடைந்து அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழரது புனித மயானத்தில் ஐ.எஸ் தீவிரவாதிக்கு இடமளிக்காதே என்றும், ஆலயப் பகுதியின் புனிதத்தைக் குலைக்காதே, மக்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்கவும் போன்ற பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்திய வண்ணம் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும் பங்குபற்றியிருந்தார். நிலைமையை அறிந்து அந்த இடத்திற்கு வந்த மட்டக்களப்பு பொலிசார் பொது மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இங்கு சடலம் புதைக்கப்பட மாட்டாது என  நாடாளுமன்ற உறுப்பினரிடம் உறுதிமொழி வழங்கினார்.