தமிழர் தொல்குடி வரலாற்றுத் தேடல் – நேற்றும் இன்றும் – தேடல் 6 – புலவர் நல்லதம்பி சிவநாதன்

தமிழர் தாயகத் தன்னாட்சிப் பிரகடனமும்,தமிழ்த்தேசிய எழுச்சியும்

யாழ்ப்பாணம் பஸ்தரிப்புநிலையமும் அதனைச்சுற்றிய தெருக்கள் வீதிகளும்ஒருகாலத்தில், ஒருசெய்திப்பரப்பு மையமாகச் செயற்பட்டதுண்டு!

நீலநிற அங்கியுடன் தமது அங்கியின் முன்னும் பின்னுமாக ‘வைரமாளிகை’ எனும் எழுத்துக்களைப் பதித்தவாறு தமது கமிபீரமான குரலில் மிகவும் நகைச்சுவையும், நளினமும் கலந்த சுவாரசியமான தொனியில் லொத்தர் சீட்டுகளை விற்றவாறு பதிரிகைகளில் வந்த அன்றாடத் தலைப்புச் செய்திகளை அறிவித்தவாறு சுற்றிவருவார் சற்று உயரமான கருமாநிறமுள்ள ஒரு முதுமைத் தோற்றமுள்ள பெரியவர்! ‘கோகிலாம்பாள் கொலைவழக்கு நடந்த காலங்களில் இவர்தான் யாழ்ப்பாணப் பயணிகளின் நடமாடும் செய்தி நிலையமாக இயங்கிவந்ததைப் பலரும் அறிவர்!

இலங்கை அரசியல் பற்றிய செய்திகளையும் அவர்மூலம் அறிவதில் ஒருவித மகிழ்ச்சியும், நெகிழ்சியும் எமக்கு ஏற்படுவதுண்டு! சுதந்திரன், தீப்பொறி போன்ற பத்திரிகைகளில் வரும் தலைப்புகளை இவர் வாயாற் கேட்பதில் ஒருசுகமும், சுவையும் இருக்கும்!

அன்றும் தமிழர் அரசியற் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழர் ஐக்கியக் கூட்டமைப்பு உருவாக்கம் பெற்ற செய்தி யாழ்ப்பாண நகரப் பயணிகள் செவிவழி நுழைந்து மக்கள் மத்தியிற் பரபரப்பாகப் பேசப்படத் தொடங்கியது.

14.05.1972இல் தமிழரசுக் கட்சியின் தலைவர் தந்தை செல்வா அவர்களின் தலைமையிலான ஓரமைப்புக் கட்டமைக்கப்பட்டதனைத் தொடர்ந்து 22.05.1972 இல் திறந்து வைக்கப்பட்ட இலங்கை தேச அரசபை (National State Assembly) யின் ஆரம்ப விழாவினை தமிழ்ப் பாராளுமன்ற அங்கத்தவர்கள் புறக்கணித்த செய்தி எமது செவிகளுக்கு எட்டியது.

இதுவே இலங்கையில் தமிழ்த் தேச, தேசிய வரலாற்றின் அரசியல் முன்னெடுப்புக்களில் முதன்மையானதாகப் பலராலும் கருதப்பட்டதெனலாம்.

1969, 70, 71களில் ஆங்காங்கே முகிழ்த்தெழுந்த தமிழ்த் தேச விடுதலைப் போராட்ட அலைகளுடன் 1972இல் தமிழர் அரசியல் பயணத்தின் புதிய போக்கும் எமது தாயகத்தின் எதிர்காலம் பற்றிய ஒரு புதிய பாதையையும், பயணத்தையும் திறந்து வைத்தன என்றே நம்ப வைக்கின்றன.

தங்கத்துரை, குட்டிமணி, சத்தியசீலன், பிரபாகரன், சிறீசபாரத்தினம் என்ற பெயர்களும் தமிழர் மாணவர் பேரவை போன்ற இளைய தலைமுறையினரின் தலையெடுப்புகளும் எமது தேச, தேசிய வரலாற்றில் இடம்பிடிக்கலாயின.

1972, 1973 களில் சிங்கள பௌத்த இனவெறி, அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டம் பற்றிய செய்திகள் இலங்கைத் தீவில் பொதுவாகவும், தமிழ் மக்களிடை குறிப்பாகவும், வேகமாக அடிபடத் தொடங்கின.

1973 புரட்டாதி மாதம் மல்லாகத்தில், தமிழர் ஐக்கிய முன்னணியினால் அதன் 12ஆவது மாநாட்டில் தமிழர் தன்னாட்சிப் பிரகடனம் செய்யப்பட்டதென நினைக்கிறேன். ஓர் இறையாண்மையுள்ள, தன்னாட்சித் தகைமையுள்ள தேசமாகத் தமிழர்கள் தம்மைப் பிரகடனப்படுத்திக் கொண்டு, தந்தை செல்வா அவர்களைத் ‘தேசத்தின் தந்தை’ எனத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டு இயங்க முற்பட்டனர்.

உண்மையில் தந்தை செல்வா அவர்களே ‘தமிழ் மக்களுக்கான தாயகம்’ என்னும் கொள்கையினை ஈழத் தமிழர் அரசியல் வரலாற்றில் இணைத்துக் கொண்டவர் என்றும்  கூறுவோர் உண்டு.

‘சமஷ்டி’ ஆட்சி பற்றிப் பேசி, அகிம்சைப் போராட்டங்களை நடத்தி, பற்பல உடன்படிக்கைகளை மேற்கொண்டு அத்தனையும் சிங்கள பௌத்த அரச பயங்கரவாதத்தின் முன்னர் தோற்றுப் போனதன் விளைவாக, தனிநாட்டுப் பிரிவினை கோரிக்கைக்கு தமிழினம் தள்ளப்பட்ட அதேவேளை, தொடர்ச்சியான இனக்கலவரங்கள், அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள், இராணுவ நகர்வுகள், பொலிஸ் அடாவடித்தனங்கள், காடையர் கொட்டங்கள் எனவும் சிங்கள மொழித் திணிப்பு, தரப்படுத்தல் போன்ற அதர்ம அரச நடவடிக்கைகள், தீர்மானங்கள், திட்டங்கள் எனவும் சிங்களக் குடியேற்றங்கள் தமிழர் சொத்துப் பறிப்புகள் எனவும் தொடர்ச்சியாக நிகழ்வுற்ற கொடுமைகளால் விரக்தியும், வெறுப்புமடைந்த இளைய சந்ததியினரின் ஆயுதப் போராட்ட உணர்வுகளும் தலைதூக்கத் தொடங்கின.

1972 அல்லது 1973 என நினைக்கிறேன். யாழ்ப்பாண நகர மண்டபத்தில் ஒரு கூட்டத்தில் நானும் பா்வையாளனாகக் கலந்து கொண்டேன். எனது பக்கத்தில் எமது தாயகத்தின் உணர்ச்சிக் கவிஞரும், எனது அன்புச் சகோதரருமான காசி ஆனந்தன் அவர்கள் தரையில் அமர்ந்திருந்தார்.

தந்தை செல்வா அவர்கள் மிகவும் ஆழமான நெஞ்சுறுதி மிக்க  அதேவேளை உருக்கமான ஒரு உரையை ஆற்றியதைக் கேட்டு நாம் அனைவரும் கண்கலங்கினோம். “இரத்தம் சிந்தியாவது எமது மக்களை மீட்போம்” என்ற தொனியல் அவர் பேசியது இன்றும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

ஒரு புல்லையும் நசுக்கும் தன்மையற்ற ஒரு மென்மையான மனிதர். ஒரு தலைவர். இரத்தம் சிந்தியாவது தனது இனத்தை மீட்க வேண்டுமெனக் கூறிய பொழுது, அவரது உள்ளம் எத்தகைய வேதனையில் தோய்ந்திருக்க வேண்டும் என்பதை எம்மால் உணர முடிகிறது.

“தமிழ் மக்களைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்” என்றும் இந்தத் தேசத் தந்தை தான் கூறியதாக நாம் அறிகிறோம்.

இவற்றை நான் இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம், தமிழ் மக்களைப் பொறுத்தவரை எமது தேசத்தினை, தேசியத்தினை, தேச, தேசிய வரலாற்றினை நாம் பேணிப் பாதுகாப்பதற்காக நாம் தொடர்ச்சியாக எடுத்த நகர்வுகள், முயற்சிகள், முனைப்புகள், முகங்கொடுப்புகள் அனைத்தையுமே முறியடித்து, எம்மை ஏதிலிகளாகவும், பாதுகாப்பற்ற பரதேசிகளாகவும், நலிவுற்ற அகதிகளாகவும் ஆக்க முயன்ற ஓர் அரச பயங்கரவாத ஆதிக்க வெறியாகவே சிங்களப் பௌத்த பெரும்பான்மையை எதிர்கொண்டு வந்துள்ளோம் என்றால் அது மிகையாகாது.

நான் முன்னர் குறிப்பிட்டது போல, அடித்தவனையும் திருப்பியடிக்கக் கூசும் சந்ததியிற் பிறந்த ஒரு சமுதாயத்தின் கையில் ஆயுதத்தினை ஏந்த ஆணையிட்ட அரசே, சிங்கள பௌத்த இனவாத அரசாகும்.

தாயையும், தாரத்தையும், சேயையும், சிறுவரையும், தங்கைகளையும், தம்பிகளையும், அண்ணன்களையும், அக்காமாரையும், ஊர்களையும், உறவுகளையும் துடிதுடிக்கப் பறிகொடுத்த ஒரு மக்களின் மனப் போராட்டத்தின் விளைவல்லவா எம் மண்ணில் எழுந்த ஆயுத விடுதலைப் போராட்டம்.

1972, 73, 74களில் நான் கிளிநொச்சியில் ஆசிரியனாகக் கடமையாற்றிய காலங்களில் செவியுற்ற செய்திகள் ஏராளம். அப்போதுகூட நாம் அரசியல் கட்சிகளையே நம்பியிருந்தோம். அவர்கள் பின் நிற்பதே அறிவுடைமை என்று அவர்களோடு பயணித்தோம்.

எனினும் இலங்கையைப் பொறுத்தவரை நாடாளுமன்றப் பிரிதிநிதித்துவத்தினை மையமாகக்கொண்ட பாராளுமன்ற சனநாயக அமைப்பு அங்கு வாழ்கின்ற வரலாற்றுத் தொன்மையும், தொடர்ச்சியும் வாழ்வியற்பண்பாடு, வழமைகளும் விழுமியங்களும் வழிபாட்டுச் செழுமைகளும் கொண்ட ஒரு தமிழ்த் தேசிய இனத்திற்கான உரிமைகளையோ இல்லைப் பாதுகாப்பையோ ஒருபோதும் வழங்கப் போவதில்லையென்ற ஓர் எண்ணப்பாடு, ஓர் உணர்வுநிலை, ஓர் உறுதிப்பாடு   எமது தாயக மக்களிடை அரசியல் பொருளாதார சமூக நிலைகளில் ஊன்றி, உருவாகி வேகமாகப் பரவத் தொடங்கியதெனலாம்! மனதளவில்  மௌன மொழியில் மக்கள் சனநாயகத்தின்மீதான நம்பிக்கையைப் படிப்படியாக இழக்கத் தொடங்கிய காலம் இதுவெனலாம்! இலங்கைத்தீவில் வாழும் தமிழர்களை அழித்து ஒழித்துக்கட்டுவதே சிங்களப் பௌத்தத்திற்கான அவர்தம் மதபீடங்களுக்கான கட்சி அரசியல் வெற்றிக்கான சனநாயக நெறி என்ற ஒருபார்வையே நிதர்சனக்காட்சியாக வெளிப்பட்டு விரிவடைந்து செயற்படுத்தப்பட்டதைத் தமிழினம் நன்குணரத் தொடங்கியது!

அந்நிய ஏகாதிபத்தியங்களின் ஆக்கிரமிப்பு ஊடுருவல்களின் விளைவாக எமது தமிழினம் படிப்படியாக இழந்த வரலாற்று அரச ஆட்சி இறைமையை, தேச தேசியப் பாதுகாப்பு உரிமைகளை அடிப்படை மனித உரிமைகளை மீட்பதற்கான மொழியும் வழியும் இதுவல்ல என்ற மனோநிலை எமது இளைய சமுதாயத்தின் மத்தியில் வெகுவாக உருவாக்கம்பெறத் தொடங்கியதெனலாம்!

கல்விகற்று அதன்மூலம் பட்டமும் பதவியும் பெற்றுத் திருமணவாழ்வு கண்டு குடும்பவாழ்வினை  அனுபவிப்பதே வாழ்வின் குறிக்கோள் என நம்பிய ஈழத்தமிழ் மக்களிடையே தாய் மொழ்க்காகவும், தாயகத்தின் விடுதலைக்காகவும் தமது உயிரையும் பணயம் வைப்போமெனும் ஒரு சந்ததி உதிப்பதற்கான அறிகுறிகள் ஆங்காங்கே தென்படத் தொடங்கின! தமிமீழம் எனும் பதம் வலுப்பெற்று ஒரு விருட்சமாக வளரத் தொடங்கிய காலமும் இதுவே!

‘இலங்கையில் தமிழர்கள் வந்தேறுகுடிகளல்ல! இவர்களே அத்தீவின் வரலாற்றுக் குடிகள்’ என்ற உண்மையைத் தேடும் முயற்சிகளுக்கான புறச்சூழலும் அகச்சூழலும் உருவாக்கம் பெறத் தொடங்கின!

Capture 1 3 தமிழர் தொல்குடி வரலாற்றுத் தேடல் – நேற்றும் இன்றும் - தேடல் 6 -	புலவர் நல்லதம்பி சிவநாதன்

இக்காப்பின்னணியிற்றான்  1974 சனவரி மாதம் மூன்றாம் திகதியிலிருந்து பத்தாம் திகதி வரை தமிழர்க்கான ஒரு பெருங் கொண்டாட்டம். தமிழுக்கான ஒரு பெருவிழா நடைபெறுவதற்கான திட்டங்கள், தமிழுள்ளங்களால் தமிழறிஞர்களால் தீட்டப்பட்டன.

ஆம்! ‘நான்காம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு’ எங்கள் உள்ளங்களை நிறைத்தது. எத்தனை எதிர்பார்ப்புகள்! ஏற்பாடுகள்!  எத்திசை திரும்பினும் இதே பேச்சு!. இதே மூச்சு! எண்ணற்ற ஆயத்த வேலைகள் ஆரம்பமாகின. எனினும் தடைகள், தடுப்புகள், தவிர்ப்புகள், எனச் சவால்களும் எழுந்தன.

(தொடரும்)