தமிழர் தொல்குடி வரலாற்றுத்தேடல்- நேற்றும் இன்றும்- தேடல் 11 -புலவர் நல்லதம்பி சிவநாதன்

இலங்கைத்தீவில்…

தமிழர் தேசம் ‘அரசற்ற தேசமல்ல; ஓர் அரசிழந்த தேசமே!’

எனது சொந்த அனுபவத்தில் 1974இன் தமிழாராய்ச்சி மாநாடு எமது தேசம், தேசியம் பற்றிய ஓர் அக்கினிப் பிரவேசமாகவே என்னால் உணரப்பட்டதெனலாம்!

‘ஓர் அழகிய தீவினிற் பிறந்தோம்! ஆண்டாண்டு காலமாய் வாழ்ந்தோம்’ என்று நம்பிய என் போன்றவர்களின் தேச, தேசிய நம்பிக்கைகள் மௌ்ள மௌ்ளக் கரைந்து கனவாகத் தொடங்கிய நாட்களிவையென்பேன்!

1960களின் நடுப்பகுதியென எண்ணுகின்றேன்! வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் நான் படித்துக்கொண்டிருந்போது, கல்லூரி மாணவர்களுக்கான ஒரு சுற்றுலாவில் நானும் கலந்துகொண்டு, இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்றிருந்தேன்! அச்சுற்றுலாவில் பொலனறுவவை, அநுராதபுரம், சிகிரியா ஆகிய பகுதிகளையும் சென்று பார்க்கும் வாய்ப்பு எமக்குக் கிட்டியது! எமது சரித்திரபாட ஆசிரியர் ‘திரு நீலகண்டசிவம் மாஸ்டர்’ தான் அந்தச் சுற்றுலாவிற்குத் தலைமைதாங்கி எம்மை அழைத்துச் சென்றதாக ஞாபகமிருக்கிறது! அவர் அநுராதபுரத்திலும், பொலனறுவையிலும் உள்ள சிவன் கோவில்களைப் பற்றியும், அவை சார்ந்து தமிழ் மன்னர்களின் வரலாறு பற்றியும் எமக்குக் கூறியபோது, எமக்குள் எம்மையறியாமலேயே ஒரு பெருமிதமும், மகிழ்ச்சியும் உருவாகியதை நான் ஒருபோதும் மறந்ததில்லை! எமது முன்னோர் இலங்கைத்தீவின் முதற்குடியாக வாழ்ந்தவர்களென்ற ஓரெண்ணமும், எனது ஆழ்மனதில் வித்திடப்பெற்ற காலமும் இதுவாகும்! இலங்கைத் தமிழர்களுக்கும், தென்னகத் தமிழர்களுக்குமிடையிலான ஒரு மிகவும் பூர்வீகத் தொடர்பொன்று இருந்திருக்க வேண்டுமென்ற ஒரு பிடிவாதமான நம்பிக்கை மட்டும் எனக்கு அன்றிலிருந்தே துளிர்த்ததென்பது ஓர் உண்மையாகும்! அதேவேளை குமரிகண்ட வரலாறு பற்றி நான் அப்போது அறிந்திருக்க  நியாயமில்லை  என்பதும் ஓருண்மையாகும்!

இயக்கர், நாகர் பற்றியும் பழைய கற்காலம், புதிய கற்காலம், குறுணிக் கற்காலம், பெருங்கற்காலம் பற்றியும், கற்காலச் சின்னங்கள் பற்றியும் அவ்வப்போது பாட நேரங்களில் நுனிப்புல் மேயும் பாணியில் அறிந்து வந்திருக்கிறேனேயொழிய, அவற்றையெல்லாம் கூர்ந்து சிந்திக்கும் வரலாற்றுத் தேடல் அப்போதெல்லாம் என் போன்றவர்களுக்கு இருக்கவில்லையென்றே கூறுவேன்! நான் முன்னர் குறிப்பிட்டது போல எமது இளமைக் காலங்களில் எமது தமிழர்  வாழ்ந்த பிரதேசங்களையெல்லாம் பார்க்கக்கூடிய வாய்ப்புகள் எமக்குப் பெரிய அளவில் இருந்ததாகச் சொல்வதற்கில்லை! ஆக மிஞ்சிப்போனால் கலைப்பிரிவு மாணவர்கள் அதுவும் குறிப்பாகப் பல்கலைக்கழகப் பட்டதாரி வகுப்பு மாணவர்கள் தமது பாடத்திட்டத்தில் இவைபற்றி ஓரளவு அறிந்து, தெரிந்து வைத்திருப்பார்களேயொழிய மற்றப்படிக்கு சாதாரண தமிழ் மக்களிடையே தமிழர் தொல்குடி வரலாறு பற்றிய தெளிவும் விழிப்புணர்வும் பெரிய அளவில்இருந்ததென என்னாற் கூறமுடியாது!

நான் நகைச்சுவையாக அடிக்கடி ஒன்றைச் சொல்லி வந்திருக்கிறேன்!

‘நாம் தமிழர்’ என்ற எண்ணமும், எழுச்சியும் எம்மிடையே அக்காலங்களில் இருந்ததாகச் சொல்வது ஒரு வரலாற்றுத் தவறெனவே நான் கூறுவேன்! எம்மைத் தமிழர்களாக ஒன்றிணைத்த பெருமை சிங்கள பௌத்த இனவாதிகளையே சாரும் என் நான் சொல்வதுண்டு!

‘நான் யாழ்ப்பாணத்தான்!’ ‘நான் மட்டக்களப்பான்!’ ‘நான் திருகோணமலையான்!’ ‘நான் வன்னியான்!’ ‘நான் கொழும்பான்!’ ‘நான் மலைநாட்டான்!’   ‘நான் இந்தச் சாதியான் அவன் அந்தச் சாதியான்’ ‘நான் இந்த ஊரான் அவன் அந்த ஊரான்’ ‘நான் இந்தக் குறிச்சியான் அவன் அந்தக் குறிச்சியான்’ என்று பிளவுபட்டுப் பிணி கொண்டு பிரிந்து கிடந்த தமிழரை ‘தெமிலு பள்ளா’ என ஒன்றாகச் சுட்டியழைத்த சாதனை, சிங்களப் பௌத்த இனவெயறியாளர் ஈட்டிய சாதனையே என்றால் அது மிகையாகாது!

மேலும் தொடர்ச்சியாகப் பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்த  காலங்காலமான அந்நிய ஆக்கிரமிப்புகளினாலும், ஆதிக்க நடவடிக்கைகளாலும் 1947இலிருந்து ‘சனநாயகப் பாராளுமன்றம்’ என்கின்ற போர்வைக்குள் நிகழ்ந்த படிப்படியான திட்டமிடப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகளாலும், முகமும் அகமும் சிதைத்துச் சின்னாபின்னப்படுத்தப்பட்டு வந்த தமிழர் தேச வரலாறானது, ஒரு மீட்பிற்கும், மீளுருவாக்கத்திற்கும் உட்படுத்தப்பட வேண்டும் என்ற தீவிரமான நிலைப்பாடு எமது இளைய சமுதாயத்தின் மத்தியில் வேரூன்றி விழுதுவிட்ட காலம், 1974இன் நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டினைத் தொடர்ந்து வந்த காலமெனவே எண்ணத் தூண்டுகிறது!

இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் மற்றும் ஏனைய தமிழர் தாயகப் பிரதேசங்களிலும் தமிழருக்கான ஒரு பாதுகாப்பான இருப்பினையும், வரலாற்றுத் தொன்மையின் தொடர்ச்சியையும், தேசிய இறைமையையும் பேணக்கூடிய சட்டம் நீதி வரம்புக்குட்பட்ட ஓர் அரசியல், சமூக பொருளாதாரச் சூழலமைவு சமகாலத்திலும், எதிர்காலத்திலும் ஏற்படும் என்ற நம்பிக்கை அறவே விலகிவிட்ட காலமாகவும் இதனை எம்மாற் பார்க்க முடியும்!

இலங்கைத் தீவிலிருந்து தமிழர்களை விரட்டித் துரத்தியடிப்பதே தமிழருக்கான ஓர் அரசியற் தீர்வு என்ற ‘இனவாத’ அரசியலை மையப்படுத்திய சனநாயகப் பாராளுமன்ற அமைப்பே தலைதூக்கித் தாண்டவமாடுகின்ற ஒரு நிலையை உருவாக்குவதில் சிங்களப் பெரும்பான்மையினத்தினைத் தயார் செய்கின்ற பணியிலேயே சிங்கள  அரசியற் கட்சிகளும், பௌத்தமத பீடங்களும் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வந்ததை அவதானிக்க முடிந்தது! இந்நிலையை எதிர்த்துக் கருத்து வெளியிடக்கூடிய  அங்கிருந்த சிங்கள ஊடகங்ளும் சரி, இடதுசாரிக் கட்சிகளும் சரி, தொழிலாளர் மேம்பாட்டினை நோக்கி இயங்கிய நிறுவன அமைப்புகளும் சரி ‘வலுவற்ற’ நிலையிலேயே அக்காலகட்டங்களில் வலம் வந்தன எனலாம்! தமிழருக்காகக் குரல் கொடுத்தால் அவர்கள் அரசியற் களத்திலும் சரி, அன்றாட வாழ்வியற் களத்திலும் சரி நின்று பிடிக்கக்கூடிய நிலைப்பாடு அங்கு இருந்திருக்கவில்லை!

இந்நிலையில் ‘இழந்த தாயக தேசத்தை மீட்பதே’ இலங்கைத் தீவில் வாழக்கூடிய தமிழ் மக்களுக்கான அரசியல் இலக்கு என்ற சிந்தனைக் கருத்தாக்கம் எமது இளைய சமுதாயத்தின் உள்ளங்களில் மிகவும் ஆணித்தரமாகவும், மிகவேகமாகவும் வேரூன்றத் தொடங்கியதில் எதுவித ஆச்சரியமும் இருக்கவில்லை! எமது இளைய சமுதாயத்தின் கரங்களில் ஆயுதத்தைத் திணித்தமைக்கான முழுப் பொறுப்பும் தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்ட அநீதியான அடக்குமுறையையும்  அவற்றின் மூலம் ஏற்படுத்தப்பட்ட இன அழிப்பினையுமே சாரும் என்பதை மறுப்பதற்கில்லை!

உண்மையைக் கூறப்போனால்..

இவ்வேளையிற்றான் ‘ஆண்ட பரம்பரை மீண்டுமொருமொரு முறை  ஆள நினைப்பதில் என்ன குறை?’ என்ற உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களுடைய கவி வரிகளின் கருவூலமானது.  உணர்ச்சிபூர்வமாகவும், தத்துவார்த்தமாகவும் தமிழ் மக்களிடையே உருவாக்கம் பெற்று  ‘தமிழீழம்’ என்கிற பெருவிருட்சம் தமிழிளைஞர்கள் மத்தியில் ஒரு பெருவெளியையும், பேரொளியையும் தோற்றுவித்ததெனலாம்!

‘தமிழீழம்’ என்பது ‘ஈழத்தமிழர் பிறரிடம் இழந்த தேசம்’  ‘தமிழர்கள் மீண்டும் போராடி மீட்கப்பட வேண்டிய தேசம்’ என்ற தாகத்துடன் இளைஞர்களும், யுவதிகளும் அணிதிரள வேண்டிய உளவியல் அரசியற் சூழலையும் அப்போராட்டத்திற்கான சிந்தனைத் தளங்களையும், செயற்பாடுகளையும் இக்காலகட்டம் எமது தாயக பூமியில் உருவாக்கியது!

1956இலிருந்து இலங்கையில் நிகழ்ந்த இனக்கலவரங்கள், இனஅழிப்பு நடவடிக்கைகள், அரச பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் தாமடைந்த தொடர்ச்சியான இழப்புகளையும், இன்னல்களையும், துன்பங்களையும், துயர்களையும் கண்டும் கேட்டும் படித்தும் வந்த மக்கள் அகிம்சை, சத்தியம் எனும் அறவழி அன்புவழிப் போராட்டங்களை நம்பி வந்த மக்களின் மடியிற் தவழ்ந்த அவர்தம் குழந்தைகள்; தங்கள் கரங்களில் ஆயுதமேந்திப் போரடி  இரத்தம் சிந்துகின்ற ஒரு வரலாற்றுப் பயணத்தில் அடியெடுத்து வைக்கும் அறிகுறிகளை அவதானிக்கத் தொடங்கினர்!

தாய் மொழியையும், கலையையும், பண்பாட்டையும், தங்கள் தாய் நிலத்தையும் அழிவிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுவதற்கான ஒரே மொழி ஆயுத எழுத்துத்தான் என்ற யதார்த்தத்திற்கு எமது தாயகம் உள்ளானது!

பள்ளிப் படிப்பையும், பாடப் புத்தகத்தையும், பட்டம் பதவிகளையும், குடும்பம் பிள்ளை குட்டிகளையும் வட்டமிட்டுக் கொண்டிருந்து, தமிழர் வரலாறு கொள்ளி வைக்கவும் பிள்ளைகளில்லாத ஒரு புதிய சகாப்தத்திற்குத் தன்னைத் தயார்ப்படுத்தலானது!

தோட்டத்துப் பூக்களுக்கு நீர் வார்த்த மென்மைக் கரங்கள் கோயிற் தீச்சட்டிக்கு நெய்வார்த்த அன்புக் கரங்கள் தோட்டாக்களுடன், குண்டுகளுடன் உறவாடப் புறப்படும் பயணத்திற்குத் தம்மைத் தயார் செய்யத் தொடங்கின!

சங்க இலக்கியத்திலும், சரித்திர நாவல்களிலும் கண்கள் குவித்தவர்கள் வங்க வரலாற்றை மாற்றும் வாழ்வுக்கு வழிதேடி நின்றார்கள்!

இப்போதும் கூட நான் கிளிநொச்சி உருத்திரபுரம் மகாவித்தியாலயத்தில் கணிதத்தையும், விஞ்ஞானத்தையும், தமிழையும் அங்குள்ள மாணவச் செல்வங்களுக்குக் கற்பித்துக் கொண்டிருந்தேன்! அவ்வப்போது ஆங்காங்கே நிகழ்ந்து வந்த அதிரடித் தாக்குதல்கள் பற்றிப் பத்திரிகைகள் வழியே அறிந்து வந்தேன்!  கிளிநொச்சி, பளை, பரந்தன் ஆகிய பகுதிகளில் எனது கவிதை, நாடக முயற்சிகள் தொடர்ந்த வண்ணமேயிருந்தன! அப்போதெல்லாம் எமது இலக்கியப் படைப்புகள் அநேகமாக எமது தமிழர் சமூகத்திடையே மலிந்து கிடந்த சாதி, மத, இட ஏற்றத்தாழ்வுகள், சீர்வரிசைக் கொடுமைகள் மூடக் கொள்கைகளைச் சாடுவனவாகவே ஒலித்து வந்தனவெனினும், அவ்வப்போது அரங்குகளில் எமது தாய்மொழி, தாயகம், எமது கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு என்பன எதிர்கொண்டுள்ள சாவால்கள் பற்றியும், அவற்றைக் காத்துப் பேண வேண்டியதன் அவசியம் பற்றியும்,  தாயக தேசத்தின் இறையாண்மை பற்றியும் தர்மாவேசத்தோடு ஓசையெழுப்பி வந்தோம்!

தொடரும்….