தமிழர் தாயக தலைநகரை சிங்களமயப்படுத்திய சூழ்ச்சித் திட்டங்கள் -அன்பன்

தமிழர் தாயகத்தின் தலைநகரான  திருகோணமலை, இலங்கைத் தீவின் கிழக்கு மாகாணத்தில் உள்ளது. மூன்று மலைகளால் சூழப்பட்டிருப்பதாலும், வரலாற்றுத் தொன்மை மிக்க ‘கோணேஸ்வரம்’ என்ற சிவாலயம் இங்கு காணப்படுவதாலும் இந்தப் பகுதி ‘திரிகோணமலை’ எனப் பெயர் பெற்று இன்று திருகோணமலையாக மருவியுள்ளது.

கோணேஸ்வரர் ஆலயம் கி.பி. 6ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவபக்தரான திருஞானசம்பந்த நாயனார் அவர்களால் பாடல் பாடப்பெற்றுள்ளதும், இந்த மாவட்டத்தில் அமைந்திருக்கும் ‘குளக்கோட்டன்’ என்ற தமிழ் மன்னனால் கட்டப்படட ‘கந்தளாய் குளமும்’ இலங்கையை ஆண்ட இராவணேஸ்வரன் என்ற தமிழ் மன்னனால் உருவாக்கப்பட்டதாக கருதப்படும்.

‘கன்னியா வெந்நீரூற்றுகளும்’  இன்னும் இங்குள்ள திருகோணமலைக் கோட்டையை ஐரோப்பியர்கள் நிர்மாணித்த போது அதிலுள்ள கல்தூண்களில் காணப்படும் தமிழ் மன்னர்களான பாண்டியர்களின் சின்னமான ‘இரட்டை கயல்மீன்’ சின்னமும், இம்மண்ணின் வரலாற்றை எடுத்துக் கூறும். ‘கோணமலை அந்தாதி’, ‘கோணேஸ்வர பதிகம்’ மற்றும் ‘திருகோணாசலப் புராணம்’, ‘வெருகலம்பதி வரலாறு’ ஆகிய வரலாற்று நூல்களும், இந்த மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கண்டெடுக்கப்பட்ட பல்வேறு கல்வெட்டுக்களும், பல வரலாற்று குறிப்புகளும் இந்த மாவட்டத்தின் தொன்மையை எடுத்துக் காட்டுவதோடு, இந்த மண் தமிழர் தாயக பூமி என்பதையும் தெளிவாக நிரூபித்துள்ளது.

இந்தப் பகுதி 1020 சதுர கிலோமீற்றரை மொத்த நிலப்பரப்பாகக் கொண்டுள்ளது. இலங்கை சுதந்திரமடைந்த போது இம்மாவட்டத்தின் பிரிவுகள் யாவும் ‘பற்றுக்கள்’ என்ற தமிழ்ப் பெயரில் அமைந்திருந்ததும், இந்த மாவட்டத்தில் 98.5 % சதவீதத்திற்கு மேல் தமிழர்களே வாழ்ந்தனர் என்பதையும் இலங்கை முழுவதையும் ஆக்கிரமித்து ஆட்சி புரிந்த பிரித்தானியர்களால் 1181ஆம் ஆண்டிலிருந்து 1946ஆம் ஆண்டு வரை  வெளியிடப்பட்ட குடித்தொகைப் பதிவுகள் இந்த மண் தமிழர் தாயகப் பகுதி என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் இப்பதிவுகளில் இந்த மாவட்டம் ‘திருகோணமலை பட்டணம் சூழலும் பற்று’, ‘கட்டுக்குளம்பற்று’, ‘கொட்டியாரப்பற்று’, ‘தம்பலகாமம் பற்று‘ என்ற நான்கு தமிழ்ப் பற்றுக்களாக இருந்ததை எடுத்துக் காட்டியுள்ளது. மேலும் இங்கு  1 %இற்கும் குறைவாக வாழ்ந்த சிங்களவர்கள் மீன்பிடி, விவசாயம் தொழில் காரணமாக இந்த மண்ணில் குடியேறி தொழில் செய்து வந்ததையும் தெளிவுபடுத்தி உள்ளது.

ஆனால் இந்த நிலைமை இலங்கை சுதந்திரமடைந்த 1948ஆம் ஆண்டு முதல் இன்று வரை இலங்கையை ஆட்சி புரியும் சிங்கள இனவாத அரசுகளின் சூழ்ச்சிச் செயற்திட்டங்களால் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டங்கள் இம் மாவட்டத்தை சிங்களக் குடியேற்றங்களால் சிங்களமயப்படுத்துவதையும், இந்த மாவட்டத்தின் எல்லைத் தமிழ் மாவட்டங்களான மட்டக்களப்பு, முல்லைத்தீவு மாவட்டங்களை இந்த மாவட்டத்திலிருந்து பிரிக்கும் சூழ்ச்சியையும், இம் மாவட்டத்துடன் இணைந்ததாக சிங்கள மாவட்டங்களை ஒன்றிணைப்பதையும், தமிழ் மக்களை  இந்த மாவட்டத்தில் சிறுபான்மையினராக்கி, தலைநகரை சிங்கள மாவட்டமாக்கி தமிழர் தாயக கோட்பாட்டை அழித்து, இம்மாவட்டத்தின் வரலாற்றை திரித்து தமிழர் தேசியத்தை சிதைக்கும் சூழ்ச்சியையும் கொண்டிருந்தன.

kanniya trinco தமிழர் தாயக தலைநகரை சிங்களமயப்படுத்திய சூழ்ச்சித் திட்டங்கள் -அன்பன்இந்த நிலை இம்மாவட்டத்தின் பூர்வீகக் குடிகளான தமிழர்களின் வாழ்வு நிலை, வாழ்வு இயக்கத்தையே சீர்குலைத்தது. இச் சூழ்ச்சித் திட்டங்களின் விளைவுகளையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புக்களையும் நாம் அறிய வேண்  டியுள்ளது. அவையாவன:

  • இன்று இந்த மாவட்டத்தின் மொத்த நில்பரப்பில் 60% சதவீத நிலப்பரப்பிற்குமேல் தமிழர் தாயக பூமி. இது சிங்கள இனவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. இம் மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பான 1020 சதுர கிலோமீற்றரில் 500 சதுர கிலோமீற்றருக்கு மேல் சிங்களமாகியுள்ளது.
  • இந்த மாவட்டத்தில் 98.5 %சதவீதத்திற்கு மேல் வாழ்ந்த தமிர்களின் சதவீதம் 30 %சதவீதத்திற்கும் கீழ் குறைவடைந்துள்ளது. ஆனால் 1 %சதவீதத்திற்கும் குறைவாக வாழ்ந்த சிங்களவர்களின் வீதம் 35% இற்கு மேல் அதிகரித்துள்ளது.
  • இம் மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளையும், உள்பகுதிகளையும், கரையோரப் பகுதிகளையும் தமிழர்கள் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
  • ‘பற்றுக்கள்’ என்ற தமிழ்ப் பெயரில் அமைந்திருந்த 4 தமிழ்ப் பிரிவுகள் இன்று 11 பிரிவுகளாக மாற்றப்பட்டு அதில் 6 பிரிவுகள் சிங்களப் பிரிவுகளாக்கப்பட்டுள்ளன. இந்த ஆறு பிரிவுகளும் சிங்களப் பெயரில் உருவாக்கப்பட்டுள்ளன. (சேருவில, தம்பலகமுவ, கந்தளாவ, மொரவேவ, கோமரங்கடவல, பதவி சிறிபுர)
  • இந்த மாவட்டத்திலிருந்து தமிழர்கள் மட்டுமே பாராளுமன்றத்திற்கு செல்லும் நிலை மாற்றிமைக்கப்பட்டு, இந்த மாவட்டத்திலிருந்து சிங்களவர்களும் பாராளுமன்றம் செல்லும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்த மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட 6 சிங்களப் பிரதேச செயலர் பிரிவுகளையும் ஒன்றிணைத்து ‘சேருவில’ என்ற சிங்களப் பாராளுமன்றத் தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது. இத்தேர்தல் தொகுதி இம்மாவட்டத்தின் எல்லைகளான சிழக்கு, வடக்குப் பகுதிகள் முழுவதையும் உள்ளடக்கியதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • தேர்தல் தொகுதிகளுக்கான நிலப்பங்கீட்டில் சிங்களத் தொகுதிக்கு கூடுதலான நிலப்பரப்பும், தமிழ்த் தொகுதிகளுக்கு குறைந்தளவு நிலப்பரப்பும் ஒதுக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் ‘சேருவில’ தொகுதிக்கு மட்டும் 574 சதுர கிலோமீற்றரும், தமிழ்த் தொகுதிகளான திருகோணமலை, மூதூர் தொகுதிகளுக்கு மொத்தமாக 446 சதுர கிலோமீற்றரும் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • இலங்கையில் தேர்தல் தொகுதி முறையில் 3பேர் (தமிழர், முஸ்லிம், சிங்ளவர் என தலா ஒருவர்) இம்மாவட்டத்திலிருந்து பாராளுமன்றம் செல்லும் நிலையை தற்போது நடைமுறையிலுள்ள விகிதாசாரத் தேர்தல் முறை மூலம் நான்கு பேர் செல்லும் நிலையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதில் இருவர் சிங்களவர் என்ற நிலை உருவாக்கப்பட்டு வருகின்றது.
  • இம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் செயற்திட்டங்களை இலகுவாக்கும் வகையில் 1948இலிருந்து இன்று வரை ‘மாவட்டத்தின் அரச அதிபர்’, ‘மாவட்ட இணைப்பதிகாரி’, ‘மாவட்ட அமைச்சர்’ என அனைவரும் சிங்களவர்களாக நியமிக்கப்பட்டனர்.
  • மேலும் இம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேசத்திற்கும் அரச அதிபருக்கு நிகரான அதிகாரம் கொண்ட ‘பிரதேச செயலர்கள்’ நியமிக்கப்பட்டனர். இப்பிரதேசங்களை அபிவிருத்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட ‘பிரதேசசபைச் சட்டம்’ இதற்கு பெரிதும் உதவியது.

இதற்கு ஏற்ப சிங்களப் பிரதேச செயலர் பிரிவுகள் குறைந்த சனத்தொகையையும், அதிக நிலப்பரப்பையும் கொண்டதாக அமைக்கப்பட்டன. ஆனால் தமிழ்ப் பிரிவுகள் குறைந்த நிலப்பரப்பில் அதிக குடித்தொகையைக் கொண்டதாக அமைக்கப்பட்டன. ஒவ்வொரு சிங்களப் பிரிவிற்கும் சிங்கள அதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்பட்டனர்.

  • இம்மாவட்டத்தின் சிங்களப்பிரிவுகளுடன் எல்லை சிங்கள மாவட்டமான அநுராதபுர மாவட்டப் பகுதிகள் இணைக்கப்பட்டு ‘ பதவிசிறிபுர’ என்ற பகுதி உருவாக்கப்பட்டு சிங்களவர் குடித்தொகை சதவீதம் அதிகரிக்கப்பட்டது.
  • இம்மாவட்டத்திலுள்ள காணிகள் திட்டமிட்டு சிங்களப் படைப்பிரிவுகளுக்கு (பொலிஸ், இராணும், விமானப்படை, கடற்படை) என ஒதுக்கப்பட்டது.
  • இம் மாவட்டத்தின் முக்கிய வீதிகளாக இருக்கும் திருமலை – கண்டி வீதி, திருமலை – முல்லைத்தீவு வீதி, திருமலை – மட்டக்களப்பு வீதி, திருமலை – அநுராதபுர வீதி ஆகிய நான்கு வீதிகளிலும் சிங்களக் குடியேற்றங்கள் உள்வாங்கப்பட்டு அதற்குப் பாதுகாப்பாக இராணுவ முகாம்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த மாவட்டத்தின் பொருளாதார செயற்பாடுகள் யாவும் சிங்கள ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
  • தமிழர்களின் நில உரிமைகளை அழிக்கும் வகையில் ‘நிலப்பத்திரங்கள்’ வைக்கப்பட்டிருந்த காணிக் கச்சேரி அலுவலகம் 1982ஆம் ஆண்டு காலப்பகுதியில் எரியூட்டப்பட்டது. இந்த அலுவலகம் முழுமையான இராணுவ பாதுகாப்பில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
  • இந்த மாவட்டத்தின் தமிழர் வரலாற்றுத் தொன்மையை சிதைக்கும் வகையில் பல பகுதிகளில் பௌத்த விகாரைகள் உருவாக்கப்பட்டு, அவ்விகாரைகளை மையப்படுத்தி சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு, இம்மண்ணின் வரலாறு திரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கென  ‘சேருவில விகாரை’, திருமலை நகரில் அமைக்கப்பட்ட ‘கோகர்ண விகாரை’ திரியாயில் அமைக்கப்பட்ட ‘திரியாய் விகாரை’ கன்னியாவில் அமைக்கப்பட்ட ‘வில்கம் விகாரை’ மற்றும் தம்பலகாமம், கந்தளாய் உட்பட பல பகுதிகளிலும் அமைக்கப்பட்ட விகாரைகள் பெரிதும் உதவின.

  • நீர்ப்பாசனத் திட்டங்களின் பெயரில் உருவாக்கப்பட்ட பெரும் திட்டங்கள் தமிழ்ப் பெயர்களை சிங்களப் பெயராக மாற்றப்பட்டு சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தின. ‘அல்லிக்குளம்’ ‘அல்லைத்’ திட்டமாகவும், ‘கந்தளாய் குளத்’ திட்டம் ‘கந்தாவ’ திட்டமாகவும், ‘முதலிக்குளம்’ ‘மொரவேவ’ திட்டமாகவும், ‘பெரியவிளாங்குளம்’ ‘மகாதிவுல்வெவ’, ‘குமரேசன்கடவை’ ‘கோமரங்கடவ’ திட்டமாகவும், ‘பதவிக்குளம்’ ‘பதவியா’ திட்டமாகவும், ‘யானை ஆறு’ ‘யான் ஓயா’ திட்டமாகவும் மாற்றப்பட்டது.
  • இம்மாவட்டத்தை சிங்கள மாவட்டமாக காட்டும் நோக்கில் திருகோணமலை நகர்ப்பகுதியையும், கடற்கரையோரப் பகுதிகளையும், மாவட்டத்தின் உள்பகுதிகளையும் சிங்களமயப்படுத்தி, தமிழர் பிரதேசங்களையும், துண்டாடும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில் தமிழ்ப் பெயர் பகுதிகள், சிங்களப் பெயர்களாக மாற்றம் செய்யப்பட்டன.

தொடரும்…