தமிழர் தாயகத்தில் முழுமையடையாமல் உள்ள வீடமைப்பு திட்டம் குறித்து விசேட கவனம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முழுமையடையாமல் கைவிடப்பட்டுள்ள அரசாங்க வீடமைப்புத் திட்டங்கள் குறித்து அரசாங்கம் புதிய கணக்கெடுப்பொன்றை ஆரம்பித்துள்ளது.

கடந்தகால அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களின் கீழ் சுமார் ஆறாயிரம் வீடுகளின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக வீடமைப்பு, நிர்மாண மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் T.P. சரத் குறிப்பிட்டார்.

எனினும், குறித்த வீடுகளில், அநேகமானவற்றின் நிர்மாணப் பணிகள் ஆரம்ப கட்டத்திலேயே, கைவிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இடைநிறுத்தப்பட்டுள்ள இந்த வீடமைப்புத் திட்டங்களை விரைவாகப் பூர்த்தி செய்து, பயனாளிகளுக்கு நிரந்தர வீடுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், குறித்த வீடுகளின் உரிமையாளர்கள் தொடர்பான தரவுகள் சேகரிக்கப்படுவதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

இந்தநிலையில், 2027 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் வீடமைப்புத் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டை இரண்டு மடங்காக அதிகரிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

அதற்கமைய, ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டுள்ள ஆறாயிரம் வீடுகளில், மூவாயிரம் வீடுகளுக்கான நிர்மாணப்பணிகளை, அடுத்த வருடத்தின் இறுதிக்குள் முழுமையாக நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தவர்களில் சுமார் 13 ஆயிரம் குடும்பங்களுக்கான வீட்டுத் தேவை உள்ளதாக ஏற்கனவே அறிக்கையிடப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

இந்தநிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் வீட்டுத் தேவைக்கான உண்மையான இற்றைப்படுத்தப்பட்ட தரவுகளை மாவட்ட செயலாளர்களிடம் கோரியுள்ளதாகவும் பிரதி அமைச்சர் கூறினார்.

மாவட்ட செயலாளர்களிடமிருந்து கிடைக்கும் தரவுகளுக்கு அமைய, வீடமைப்புத் திட்டங்களை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வீடமைப்பு, நிர்மாண மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் T.P.சரத் சுட்டிக்காட்டியுள்ளார்.