தமிழர்களுக்கு ஒருநீதியும், சிங்களவர்களுக்கு ஒரு நீதியுமா? இராணுவத் தளபதியிடம் வினவும் க.விஜிந்தன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் எந்த அதிகாரிகளுக்கும் அறிவிக்காமல் பிரித் ஓதுதல் நிகழ்வு எந்த நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டது என இராணுவத் தளபதியிடம் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன் ஊடகங்கள் ஊடாக கேள்வி எழுப்பியுள்ளார்.

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் க.விஜிந்தன் அவர்கள் இன்று (11.05.21) அவரது அலுவலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தியுள்ளார்.

இராணுவத் தளபதியால் ஒரு அறிக்கை விடப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்குபற்றினால் சுகாதார நடைமுறையினை கருத்தில் கொண்டு அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இது நல்ல விடயம் நேற்று(10) இரவு எங்கள் முல்லைத்தீவு பகுதியில் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட குருந்தூர் மலைப்பகுதியில் 30 இற்கும் மேற்பட்ட புத்த பிக்குகளும், இராணுவத் தளபதிகள், பல நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு பிரித் ஓதுதல் என்ற சமைய நிகழ்வு நடைபெற்றிருக்கின்றது.

நாங்கள் இராணுவத் தளபதியிடம் கேட்கின்ற விடயம் முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்க அதிபர் உள்ளிட்ட எந்த அதிகாரிகளுக்கும் அறிவிக்காமல் பிரித் ஓதுதல் நிகழ்வு எந்த நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.