தமிழர்களின் காணி உறுதிப் பத்திரங்களை கையளிக்க கால அவகாசம் கோரும் அரசாங்கம்

உயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்த தமிழர்களின் காணிகளில் கையளிக்கப்பட்ட 50 வீதமான காணிகளின் உறுதிப்பத்திரங்களை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாக  அரசாங்கம் உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்தள்ளது.

உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படுவது தொடர்பாக 2003ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அவர்களால் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது.

உயர் பாதுகாப்பு வலயங்களுக்காக சுமார் 3640 ஏக்கர் காணிகள் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டிருந்தும் அதில் 50 வீதமானவை மீள பொது மக்களிடம் கையளிக்கப்பட்டதாக அரசின் சார்பில் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டது.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான வஜித் மலலகொட, முர்து பெர்னான்டோ உள்ளிட்ட நீதியரசர்கள் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது மாவை சேனாதிராசா சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் ஆஜரானார்.

மக்களிடம் கையளிக்கப்பட்ட 50 வீதமான காணிகளுக்கான உறுதிப் பத்திரங்கள் இதுவரை மக்களிடம் கையளிக்கப்படவில்லை என்பதை சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

மேலும் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான உறுதிப் பத்திரங்களை வழங்குவதுடன், விடுவிக்கப்படாதிருக்கும் ஏனைய 50 வீதமான காணிகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுமந்திரன் மேலும் கேட்டுக் கொண்டார்.