தமிழர்களின் ஆமையன் குளம் ”கிரி இப்ப வெவ” ஆனது முல்லைத்தீவில் பறிபோகும் தமிழர் பகுதிகள்

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் முல்லைத்தீவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அதன் போது, மகாவலி L  வலய அபிவிருத்தி தொடர்பான சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

இதன் போது, தமிழ் மக்களின் ”ஆமையன் குளம்” அபிவிருத்தி தொடர்பாகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் போது ஆமையன் குளத்திற்கு ”கிரி இப்ப வெவ” என சிங்களப் பெயர் சூட்டப்பட்டது. அத்துடன் இந்த குளம் மகாவலி L வலய அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட எல்லைக்குட்பட்ட கிராமமான மணலாறு என்ற கிராமம் ”வெலி ஓயா” என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அங்கு சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்டனர்.

இதே போன்று 1984இல் முல்லைத்தீவு – திருகோணமலை எல்லைக் கிராமங்களிலிருந்து தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டு, சிங்களவர்கள் குடியேற்றப்பட்டனர்.

இதேபோன்று கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், நாயாறு போன்ற தமிழ்க் கிராமங்கள் இன்று பெயர் தெரியாத அளவு உள்ளன. இவை சிங்களப் பெயர்கள் சூட்டப்பட்டு, சிங்கள பாதுகாப்புப் படைகளின் குடும்பங்களின் குடியேற்றத் திட்டங்களாக மாற்றப்பட்டு, (பெரும்பாலும் ஊர்காவல் படையினரின் குடும்பங்கள் இங்கு குடியமர்த்தப்பட்டுள்ளன) இங்கு வசித்த தமிழர்கள் துரத்தப்பட்டு கிராமங்கள் சிங்களமயப்படுத்தப்பட்டன.