பிரச்சனைகளுக்கு நியாயமான தீர்வு காணப்பட்டிருப்பின் விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்றம் பெற்றிருக்காது

முதல் மூன்று தசாப்தங்களின்போது தமிழர் பிரச்சினைக்கு நியாயமானதொரு தீர்வுகாணப்பட்டிருப்பின், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒருபோதும் தோன்றியிருக்காது என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் இதுபற்றி தெரிவிக்கையில்,

ஜனநாயக வழியிலானதும், சமாதானமானதும் வன்முறையற்றதுமான தமிழர் போராட்டம் தொடங்கி ஒரு 30 ஆண்டு காலப்பகுதியின் பின்னர், தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் 70 களின் பிற்பகுதியிலும், 80 களின் தொடக்கத்திலும் தமது ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்

அகிம்சை வழியில் பற்றுறுதிகொண்டிருந்த தமிழ்த் தலைவர் செல்வநாயகத்தோடு செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகளையும் ஒப்பந்தங்களையும்; பெரும்பான்மை இனத் தலைவர்கள் அமல்படுத்தத் தவறிமையே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாவதற்கு வழிவகுத்தது.

2009 ஆம் ஆண்டுவரை நீடித்த ஆயுதப் போராட்டக் காலத்திலும்கூட அமைதி வழி தமிழர் போராட்டம் தொடர்ந்தது. இன்னும் தொடர்கிறது.

கடந்த பல தசாப்தங்களாக தமிழ் மக்கள் பலவழிகளிலும் பெருமளவில் துன்பம் அனுபவித்துள்ளனர்.தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்றம் பெறுவதற்குமுன்னரும் தமிழ் மக்கள் இன அழிப்புக்கு ஆளாகியிருந்தனர்.

ஒருபெரும் எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் நாட்டை விட்டுத் தப்பியோடியுள்ளனர். தேசியப் பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதொரு தீர்வு மாத்திரமே தமிழ் மக்களுக்கு நிரந்தர சமாதானத்தையும், நிம்மதியையும் தரும்.” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.