தமிழரசுக் கட்சியின் வடக்கு வேட்பாளர்கள் தெரிவு பூர்த்தி; கிழக்கில் இழுபறி நீடிப்பு

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளர் நியமனக் கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதன்போது கிழக்கு மாணத்தின் வேட்பாளர் தெரிவு இறுதி செய்யப்படவில்லை. வடக்கு மாவட்டங்களின் வேட்பாளர்களும் சிக்கலின்றி இறுதிசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பிலுள்ள இரா.சம்பந்தனின் இல்லத்தில் வேட்பாளர் நியமனக் குழுவின் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, அம்பாறை மாவட்ட வேட்பாளர்கள் பெரும்பாலும் இறுதி செய்யப்பட்டனர். மட்டக்களப்பு சிறிய இழுபறியில் இருப்பதாகத் தெரிகின்றது,

யாழ்ப்பாணத்தில் – புளொட் சார்பில் த.சித்தார்த்தன், பா.கஜதீபன், ரெலோ சார்பில் சுரேன் குருஸ்வாமி ஆகியோர் பங்காளிக்கட்சிகள் சார்பில் களமிறங்கவுள்ளனர். தமிழ் அரசுக் கட்சியின் ஏனைய ஏழு வேட்பாளர்கள் வெள்ளியிரவு இறுதி செய்யப்பட்டனர். தற்போது எம்.பிக்களாக உள்ள மாவை சேனாதிராசா, சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன் ஆகியோருடன் புதிய வேட்பாளர்களாக வேதநாயகன் தபேந்திரன், சசிகலா ரவிராஜ், அம்பிகா சற்குணநாதன் ஆகியோர் தெரிவு செய்
யப்பட்டனர்.

வன்னி மாவட்டத்தில் – புளொட் சார்பில் ஜி.ரி.லிங்கநாதன், ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம் மற்றும் ஒருவர் களமிறங்கவுள்ளனர். தமிழ் அரசு கட்சி சார்பில் சார்ள்ஸ் நிர்மலநாதன், சி.சிவமோகன், சாந்தி சிறீஸ்கந்தராசா மற்றும் பா.சத்தியலிங்கம் ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் இரா.சம்பந்தன், குகதாசன், இளங்கோ ஆகியோர் களமிறங்கவுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டம் – மட்டக்களப்பு மாவட்டமே பெரும் இழுபறியில் இருந்தது. தமிழ்அரசு கட்சி சார்பில் ஐவர் களமிறக்கப்படவிருக்கிறார்கள். முன்னாள் அரசாங்க அதிபர் மா.உதயகுமார், இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், நிலோஜினி ஆகியோர் இறுதிசெய்யப்பட்டனர். இருந்த பொதிலும் மட்டக்களப்பில் இறுதி முடிவு எட்டப்படவில்லை.