‘தடையை நீக்கினால் தடம் பிறக்கும்’ -முனைவர் ஆ. குழந்தை

பிரித்தானிய நடுவர் மன்றம் கடந்த அக்தோபர் திங்கள் தமிழீழ விடுலைப் போராளிகளைக் கொண்ட விடுதலைப்புலி இயக்கத்திற்கு தடை விதித்திருப்பது தவறு என்ற தீர்ப்பு வழங்கியது. அதன் பிறகு சிங்கள பேரினவாத, பௌத்த இராணுவ அரசு தடையை நீக்கக் கூடாதென இங்கிலாந்து அரசை வலியுறுத்துகிறது.

இந்திய அரசின் ஆதரவையும் பெற முயற்சிக்கிறது. 15. 11. 2020 ஞாயிறு அன்று கனடாவில் உள்ள ஒந்தாரியோ கொள்கை ஆய்வு மையம் தடையை நீக்குவதால் வரும் கற்பனை செய்யப்பட்ட ஆபத்துகளைப்பற்றி கருத்தரங்கு நடத்தியது. அதில் பிரகாசு ஆ. ஷா, மிசுக்கா குவ்சுகா, மனிசு ஆப்ரேட், நேவில் கேவாசு ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர்.

தடையை நீக்கவேண்டுமென்று தமிழர்கள் இணைய தளத்தின் வழியாக கையெழுத்து வேட்டை நடத்தினர். அந்த இணையதளத்தை தடைசெய்ய பல்வேறு முயற்சிகள் செய்து வருகின்றனர். தடையை நீக்குவதற்கு ஆதரவாக நடத்தப்படும் முகநூல், இணையதளம், துண்டறிக்கைகள் போன்ற ஊடக வழிகளை தடைசெய்வதற்கு தொடர்ந்து முயற்சி எடுக்கின்றனர். இவர்கள் விடுதலைப்புலிகள் இயக்கம் ஓரு தீவிரவாத அமைப்பு என்று ஆதாரமற்ற தரவுகளை முன்வைக்கின்றனர்.

தங்களது தீவிரவாத செயல்களை மூடிமறைப்பதற்காக தமிழர்களையும் அவர்கள் சார்ந்த போராளி இயக்கங்களையும் தடைசெய்து, பிரித்து அடிமையாக்கி, அச்சத்தை உருவாக்கி, தாங்கள் செய்த இனஅழிப்புக்கான தடயங்களை அழித்து, புதிய வடிவமான பயங்கரவாத செயல்களை செய்கிறது. நினைவு நாளை அனுசரிக்கும் உரிமையை பறித்து, மறுத்து பாசிச பயங்கரவாத அரசாக செயல்படுகிறது.

தடைக்கு ஆதரவாக இருக்கும் அனைவரும் விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம் என்ற பொய்யைச் சொல்லி பரப்புரை செய்து வருகின்றனர். இலங்கையில் கோப்பாய், யாழ்ப்பாணம் காவல்துறையினர் விடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பு என்றும், அந்த அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதை சட்டவிரோதம் என்று யாழ் நடுவர் மன்றத்தில் 20. 11. 2020 அன்று வழக்கு தொடர்ந்தனர்.

இதை மறுத்து விடுதலைப்புலிகள் நமது உரிமைப் போராளிகள், விடுதலைப் போராட்ட வீரர்கள், சுதந்திர ஈகிகள் என்று உண்மை வரலாற்றை உலகறிய தொடர்ந்து பரப்பி இந்த தடையை நீக்க வேண்டும்.

தடைக்கு  தரமற்ற காரணங்கள்

71789274 facebookonmobilephone 'தடையை நீக்கினால் தடம் பிறக்கும்' -முனைவர் ஆ. குழந்தை

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் சார்ந்த உள்ளடக்கங்களை பதிவிட்டதற்காக முகநூல் பதிவுகள், கணக்குகள், முகநூல் பக்கங்களும் நீக்கப்பட்டன. அதற்கு பிபிசி தமிழ் நேரடியாக முன்வைத்த வினாக்களுக்கு பொதுப்படையான பதிலை முகநூல் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கீழ்கண்டவாறு தருகிறார்: “மக்கள் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்தவும் முக்கியமான பண்பாட்டு, குமுக, அரசியல் நகர்வுகள் குறித்த கருத்துகளை வெளிப்படுத்தவும் முகநூலுக்கு வருவதை நாங்கள் மதிக்கிறோம். எனினும் வெளிப்படையாக வன்முறையான திட்டத்தை அறிவித்த அல்லது வன்முறையில் ஈடுபட்ட குழுக்கள், தலைவர்கள் அல்லது தனிநபர்களை பாராட்டும் அல்லது ஆதரிக்கும் பதிவுகளை முகநூல் தொடர்ந்து நீக்கும்”. வெறுப்பையோ, வன்முறையையோ பரப்பும் வகையில் முகநூல் பயன்படுகிறதென எவர் கூறியதை இந்த நிறுவனம் நம்புகிறது.

சிங்கள பேரினவாத அரசும், ஆட்சியாளர்களும் செய்த வெறுப்பும், தீவிரவாத செயல்களும் பரப்பப்படுவதற்கு இந்த முகநூல் துணை போகிறது. நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை என்ற போர்வையில் தமிழர்களின் உரிமைகளைப் பறித்து, அடிமையாக்கி, கொலை, கொள்ளை செய்து வருகிறது சிங்கள பேரினவாத இராணுவ அரசு.

மாற்றுக்கருத்தை கூறுபவர்களையும், உரிமைக்காக போராடுபவர்களையும் அறம் காக்க ஆர்த்தெழுபவர்களையும் தீவிரவாதிகளாக முத்திரை குத்தி கொன்றொழிக்கின்றனர். அந்த அரசை தடை செய்யாமல் விடுதலைப் போராட்ட அமைப்புகளை தடைசெய்வது சர்வாதிகாரம், பாசிசம், நாசிசம் ஆகியவை வளர்வதற்கு இந்த முகநூல் நிறுவனம் துணை போகிறது. அது ஊடக அறநெறியை மீறுகிறது.

மேலும் அவர் “ஆபத்தான அமைப்புகளை தடை செய்யும்போது அவற்றின் இருப்பையும் அகற்றுவது எங்களது நோக்கமாக உள்ளது. எங்களது முறைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள எடுக்கும் முயற்சிகளை தடுக்க தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்” என்று கூறினார்.

விடுதலைப்புலிகள் இயக்கம் ஓர் ஆபத்தான இயக்கம் என்று எதை வைத்து முகநூல் நிறுவனம் முடிவு செய்தது. கருத்துச் சுதந்திரத்திற்கு தடைசெய்வது அடிப்படை உரிமையை பறிப்பதற்கு சமம். தடைசெய்வதே ஒரு தீவிரவாத செயலாகும். இதற்கு சிங்கள பேரினவாத அரசும் பிரித்தானிய நடுவர் மன்றம் விதித்த தடையும் காரணங்களாக இருக்கின்றன.

அரசு தடை செய்தது. அதனால் நாங்களும் தடைசெய்கிறோம் என்பது சரியான, நயன்மையான செயல் அல்ல. அடிப்படையில் எல்லோரும் முன்வைக்கும் சொல் ‘தீவிரவாதம்’. தங்களது உரிமைக்காக போராடுவதில் தீவிரம் அல்லது ஆர்வம் காட்டுவது ஆக்கபூர்வமான தீவிரவாதமாகும். இந்த ஆக்கபூர்மான தீவிரவாதத்தை உயிர் வாழ உரிமை உள்ளவர்கள், சாதனை படைக்க விரும்புவர்கள், இனம் காக்க பாடுபடுபவர்கள் எல்லோரும் கடைபிடிக்க வேண்டிய அறநெறிச் செயல்பாடாகும்.  ஆனால் உரிமைக்காக தீவிரம் காட்டக்கூடாதென தடுப்பது அழிவுபூர்மான தீவிரவாதமாகும்.

இந்த அழிவுபூர்வமான தீவிரவாதத்தை ஆட்சியாளர்களும், பணமுதலைகளும், அதிகாரவெறி பிடித்தவர்களும் கடைபிடிக்கின்றனர். அரசும் ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கத்தினரும் உரிமைகளைப் பறிப்பதன்மூலம், வாழ்வாதாரங்களை அழிப்பதன்மூலம் ஆக்கபூர்வமான தீவிரவாதிகளை உருவாக்குகின்றனர்.

ஊடகத்தைப்போல பல்வேறு நாட்டின் அரசுகளும் சிங்கள பேரினவாத, இராணுவ அரசும் சிங்கள பேரினவாதிகளும் தரும் ஆவணங்களை வைத்துக்கொண்டு விடுதலைப் போராட்ட அமைப்பான விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்திருக்கின்றன. இந்த தடையை வைத்துக்கொண்டு உறவுகளின் நினைவு நாட்களை கொண்டாட முடியவில்லை.

இலங்கை தடை விதித்ததால் இலங்கையின் நட்பு நாடுகளும் தடைவிதித்திருக்கின்றன. தமிழீழ விடுதலைப்புலிகளின், தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தின் உண்மையான நோக்கத்தை புரியாமல் தடை விதித்திருக்கின்றன.

தங்களின் ஆதாயத்திற்காக தடை விதித்திருக்கின்றன. சீனா இந்தியப் பெருங்கடலில் இராணுவத் தளத்தை உருவாக்கி, தெற்காசிய நாடுகளை தனது கட்டுப்பாட்டில் வைக்கவும், மேலை நாடுகளின் ஆதிக்கத்தை தடுக்கவும், இலங்கையை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரவும் இலங்கையை ஆதரிக்கிறது.

விடுதலைப்புலிகளால் ஆபத்து என்ற பொய்யான பரப்புரையை நம்பி, சில நாடுகள் தடை விதித்திருக்கின்றன. சிங்களப் பேரினவாத அரசு தரும் ஆதாரமற்ற தரவுகளை பல நாடுகள் நம்புகின்றன. ஆனால் சிங்களப் பேரினவாதத்தால் பாதிக்கப்பட்ட தமிழீழ மக்கள் தரவுகளை ஏற்க மறுக்கின்றனர்.

சிங்கள பௌத்த பேரினவாத இராணுவ அரசை பாதுகாத்தல் உலக நாடுகளின் தீவிரவாதத்தை வெளிப்படுத்துகிறது. தீவிரவாதத்தை கடைபிடிப்பவர்கள் மற்றவர்களை தீவிரவாதிகள் என்று அழைப்பர். மஞ்சள் கண்ணாடி போட்டவர்களுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாக தோன்றும்.

அதுபோல தீவிரவாதிகளுக்கு பார்ப்பவர்கள் எல்லாம் தீவிரவாதிகள்தான். பகுத்தறிவோடு சிந்திக்க மறுக்கும் அரசுகள், தலைவர்கள், ஆட்சியாளர்கள் நாட்டை நாசமாக்குகின்றனர். சிங்கள பௌத்த பேரினவாத நாடாக இலங்கையை உருவாக்க பகுத்தறிவை இழந்து, மனிதத்தை அழித்து, தன்மானத்தை அடகுவைத்து, புத்தரின் போதனைகளைக் காற்றில் பறக்கவிட்டு, அழித்தலை தனது ஆயுதமாக ஏந்தி, செயல்படுகிற அரசு ஒரு பயங்கரவாத அரசாகும்.

அந்த பயங்கரவாதத்தை நியாயப்படுத்த இறையாண்மை, ஒற்றுமை, சமத்துவம் போன்ற புரியாத, புதிரான கருத்துகளைப் பயன்படுத்துகின்றனர்.

தடை நீக்கம் தரும் பணிகள்

ஒன்று.

தனிமனித அரசியல், பொருளாதார, பண்பாட்டு முன்னேற்றத்தை தமிழீழ முன்னேற்றமாக கருதுவது நமது அறியாமையைக் காட்டுகிறது. இனமாக, அமைப்பாக, குழுவாக முன்னேறுவதுதான் உண்மையான, ஆரோக்கியமான, நீண்டகால முன்னேற்றமாகும். தடையை நீக்குவது நம்மை அமைப்பு ரீதியாக முன்னேற்றுவதற்கு வழிவகுக்கும்.

இரண்டு.

தமது உரிமைகளை உலக அளவிலும், தமிழீழ அளவிலும் நிலைநிறுத்த இந்த தடைநீக்கம் பயன்படுகிறது. நினைவு நாளைக் கொண்டாடுதல், உரிமைகளை நிலை நிறுத்துதல், தமிழீழ விடுதலையின் நோக்கத்தை உலகறியச் செய்தல் போன்றவற்றை செயல்படுத்த உதவுகிறது. அதற்காக நமது தொல்லியல் ஆதாரங்களையும் வரலாற்று உண்மைகளையும் பாதுகாத்து உலகறிய பரப்ப வேண்டும்.

மூன்று.

தடையின் உள்நோக்கத்தை உலகறியச் செய்யவேண்டும். விடுதலைப் புலிகள் அமைப்பின் நற்பணிகளையும், எண்ணங்களையும், நோக்கத்தையும், காரணங்களையும் ஆதாரங்களுடன் வெளி உலகிற்கு தொடர்ந்து, பல்வேறு வழிகளில், வடிவங்களில் காட்ட வேண்டும்.

நான்கு.

தடை செய்யப்பட்ட நாடுகளில் தொடர்ந்து வழக்குகளைப் போட்டு, ஆட்சியாளர்களைத் தொடர்ந்து சந்தித்து, சரியான தரவுகளைக் கொடுத்து, விளக்கமளித்து, புரியவைத்து, தடையை நீக்க நாளும் செயல்பட வேண்டும். இந்த நாடுகள் ஊடகவியலாளர்களின் சந்திப்பில் தமிழீழப் பிரச்சினைப்பற்றி தரும் மேலோட்டமான உரைகளை ஒருபோதும் நம்பாமல், தனிப்பட்ட முறையில் சந்தித்து, நாடாளுமன்றத்தின் வழியாகத் தீர்மானத்தை கொண்டுவர உழைக்க வேண்டும்.

ஐந்து.

eu ltte 'தடையை நீக்கினால் தடம் பிறக்கும்' -முனைவர் ஆ. குழந்தை

தடை செய்த நாடுகளின் அரசுகளையும், நமது விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கும் நாடுகளைச் சந்திக்கும்போது சுவிட்சர்லாந்து நடுவர் மன்றம் தந்த தீர்ப்பையும், ஐரோப்பிய ஒன்றியம் தந்த தீர்ப்பையும், இத்தாலிய நடுவர் மன்றம் தந்த தீர்ப்பையும், கத்தலோனியா நாடு கொண்டு வந்த தீர்மானத்தையும், தமிழ்நாட்டு சட்டமன்றம் கொண்டுவந்த தீர்மானத்தையும், இலங்கை வடக்கு மாகாண அவை கொண்டுவந்த தீர்மானத்தையும் தக்க விளக்கங்களுடன் தொடர்ந்து எடுத்துரைக்க வேண்டும்.

இறுதியாக, விடுதலைப் புலிகள் தீவிரவாத அமைப்பு என்ற மாயையையும், தவறான கருத்தியலையும் மாற்ற நாம் அதிகமாக உழைக்க வேண்டும். அதற்கு தெருவில் நின்று கூக்குரல் எழுப்புவதோடு மட்டும் நின்று விடாமல் அறிவுத்தளத்தில் அமைப்பு ரீதியாக அணுகி, முடிவு எடுக்கும் அதிகாரமுள்ள அமைப்புகளோடும் அதிகாரிகளோடும் தொடர்பு வைத்து, உண்மையை புரிய வைக்க வேண்டும்.

சோர்ந்து விடாமல் தொடர்ந்து நம்பிக்கையுடன் ஆவணங்களையும், ஆதாரங்களையும் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து தடையை நீக்கும் செயற்பாட்டை அமைதியாக, விவேகமாக, விரைவாக செய்து முடிக்க வேண்டும்.