டெங்கு நோயினால் நாட­ளா­விய ரீதியில் 56 பேர் உயி­ரி­ழப்பு , சுமார் 38,180 பாதிப்பு

இலங்கையில் டெங்கு நோய்த் தாக்­கத்­தினால் இவ்வருடம் ஜன­வரி முதல் ஆகஸ்ட்  16 ஆம் திகதி வரை­யான காலப்­ப­கு­தியில் நாட­ளா­விய ரீதியில் மொத்தம் 56 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும், சுமார் 38,180பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் சுகா­தார அமைச்சின் தக­வலில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

குறித்த காலப்­ப­கு­தியில் மேல் மாகா­ணத்தில் மாத்­திரம் 17,069 பேர் டெங்­கினால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் கொழும்பு மாவட்­டத்தில் மாத்­திரம் 8,052 பேர் டெங்கு நோயினால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் சுகா­தார அமைச்சு மேலும் தெரி­வித்­துள்­ளது.

தற்­போ­தைய மழையுடன் கூடிய கால­நி­லையைத் தொடர்ந்து டெங்கு நோய் தொடர்பில் எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் கொழும்பு, கம்­பஹா, களுத்­துறை, இரத்­தி­ன­புரி, காலி, மாத்­தறை ஆகிய ஆறு மாவட்­டங்கள் டெங்கு வலயங்களாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

டெங்கு நோய் தொடர்பில் பொது­மக்கள் எப்­போதும் அவ­தானம், முன்­னெச்­ச­ரிக்­கை­யுடன் நடந்துகொள்ள வேண்டும் என வைத்­தி­யர்கள் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர். காய்ச்சல் ஏற்­பட்­ட­வுடன் தாம­தி­யாது அரு­கி­லுள்ள அரச வைத்­தி­ய­சா­லையில் அல்­லது தர­மான வைத்­தி­ய­ரிடம் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்­டு­மென பொது­மக்கள் கேட்டுக்கொள்ளப்­பட்­டுள்­ளனர்.

அத்­துடன், சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குண­ம­டை­யாது இரண்டு நாட்­க­ளுக்கு நீடிக்­கு­மானால் முறை­யான இரத்தப் பரி­சோ­தனை அவ­சி­ய­மெ­னவும், வீட்டு வைத்­தியம் வேண்­டா­மெ­னவும் பொது­மக்கள் மேலும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளனர்.

குறிப்­பாக கர்ப்­பிணித் தாய்­மார்கள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்த வேண்­டு­மெ­னவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. கர்ப்­பி­ணித் தாய்மார் காய்ச்­ச­லினால் பாதிக்­கப்­படும் முதல் நாளே வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட வேண்டும் எனவும் ஆலோ­சனை தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

காய்ச்சலினால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் வைத்­தி­ய­ரினால் சிபார்சு செய்­யப்­பட்ட மருந்து மாத்­தி­ரை­களை மாத்­திரம் உட்­கொள்­வ­துடன், வேலைத்­த­ளங்கள், பாட­சா­லைக்குச் செல்­லாது, வீட்டில் ஓய்­வெ­டுக்க வேண்டும் எனவும் வைத்­திய ஆலோ­சனை தெரி­விக்­கின்­றது.

அனைத்­து­வி­த­மான டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் தொடர்பில் பொது மக்கள் விஷேட அவ­தானம் செலுத்த வேண்­டு­மெ­னவும், வீடுகள், அலு­வ­ல­கங்கள், பாட­சா­லைகள் மற்றும் சுற்­றுப்­புறச் சூழலை, சுத்தம் சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுள்ளனர். குறைந்தது வாரமொன்றிற்கு 30 நிமிடங்களை டெங்கு ஒழிப்பு துப்புரவுக்காக ஒதுக்கி, பணியில் ஈடுபட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.