டெங்கு நோயினால் சிறீலங்காவில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிப்பு

சிறீலங்காவில் வேகமாகப் பரவிவரும் டெங்கு நோயினால் இதுவரையில் 100,493 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொற்று நோய்க்கு உள்ளாகியவர்களில் 125 பேர் இதுவரையில் பலியாகியுள்ளனர். கடந்த 10 வருடங்களில் இரண்டு தடவைகள் பாதிப்புக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளது.

2017 ஆம் ஆண்டு 186,101 பேர் டெங்கு நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது பரவிவரும் டெங்கு நோயின் தாக்கத்தில் சிறீலங்காவின் தலைநகர் கொழும்பே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் கொழும்பில் 20,183 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் மட்டும் 21,183 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தமது வாழ்விடங்களையும், பணியிடங்களையும் சுத்தமாக வைத்திருக்குமாறும், நோயை பரப்பும் நுளம்புகள் பெருகுவதை தடுக்குமாறும் சிறீலங்கா சுகாதாரத் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுள்ளது.

இதனிடையே, தமிழீழ நடைமுறை அரசு இயங்கிய காலத்தில் அவர்களின் நிலப்பரப்பில் டெங்கு நோய் முற்றாக ஒழிக்கப்பட்டிருந்ததும், அதற்கு உரிய பணிகளை தமிழீழ சுகாதார திணைக்களம் மக்களுடன் இணைந்து மேற்கொண்டிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.