டக்ளஸ் தேவானந்தாவின் கருத்து மீனவர்களிடையேயான மோதலுக்கே வழிவகுக்கும் – அன்டனி யேசுதாசன்

இலங்கையின் குறிப்பாக வடபகுதி கடற் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதும் அவர்களை சிறீலங்கா கடற்படையினர் தாக்குவதும், படுகொலை செய்வதுமான சம்பவங்கள் பல தசாப்தங்களாக இடம்பெற்று வருகின்றன. இதுவரையில் சிறீலங்கா கடற்படையினரின் தாக்குதல்களால் 500 இற்கு மேற்பட்ட அப்பாவித் தமிழக தமிழ் மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நீதி கூட இன்னும் கிட்டவில்லை. 

இந்த நிலையில் இந்திய மீனவர்களை இலங்கை கடற்பகுதியில் சில கட்டுப்பாடுகளுடன் மீன் பிடிக்க அனுமதிப்பது என சிறீலங்கா அரசின் ஆதரவு அமைப்பான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் இலங்கை கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அண்மையில் தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் இலங்கை தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தைச் சேர்ந்த வடக்கு மாகாண இணைப்பாளர் அன்டனி யேசுதாசன் இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய கருத்தை இங்கு தருகின்றோம்.

இந்திய மீன்பிடி படகுகள், இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடியில் ஈடுபடுவதனால், வடபகுதி மீனவர்கள் சமூக, பொருளாதார, கலாசார மற்றும் அரசியல் ரீதியில் பல வருடங்களாக பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.

அதே நேரம் பல போராட்டங்களை நடத்தியிருக்கின்றார்கள். பல கலந்துரையாடல்களை நடத்தியிருக்கின்றார்கள். கடந்த 2020, டிசம்பர் 15ஆம் திகதி, முல்லைத்தீவு மாவட்டத்திலே பல மீனவர்கள் இணைந்து இந்தியப் படகுகளுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினார்கள்.

 மேலும் சத்தியாக்கிரக போராட்டத்தையும் ஆரம்பித்தார்கள். அதன் போது அங்கே வந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வை விரைவாக வழங்குவதாக கூறினார். இவ்வாறு கூறிய அமைச்சர், இந்திய படகுகளை இலங்கை கடற்பரப்புக்குள் வருவதற்கு அனுமதி அளிப்பதாகவும் அவர்கள் ஒரு கொள்கைக்குள்ளே இங்கே வருவதற்கான ஏற்பாடுகளை  செய்வதற்கான முயற்சிகளை எடுப்பதாகவும் கூறியிருந்தார்.

அதற்குப் பிறகு சமூகத்தில் ஏற்பட்ட சில அழுத்தங்கள் காரணமாக, ஊடகங்கள் வாயிலாக இந்தியாவினுடைய நாட்டுப்படகுகளை இலங்கைக்குள்ளே அனுமதிப்பதற்னான திட்டங்களை இந்திய அரசுடன் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அவருடைய இந்த கருத்து இலங்கை மீனவர்களைப் பொறுத்தளவிலே  ஒரு பாரதுாரமான விடயமாக இருக்கின்றது.

ஏற்கனவே இந்திய இழுவைப் படகுகள் இங்கு வந்து தொழில் செய்வதனால் ஏற்பட்ட பிரச்சனைக்கு சாதகமான தீர்வை தேடிக்கொண்டிருக்கும் வேளையில், இந்திய படகுகள் (அது நாட்டுப்படகாக இருக்கலாம், விசைப்படகுகளாக இருக்கலாம்- அவ்வாறெனில் ஆயிரக்கணக்கான படகுகள் வரும்)  சர்வதேச எல்லையைத் தாண்டி எமது கடல் பகுதிக்குள் தொழிலில் ஈடுபடும் போது, எம்முடைய மீனவர்கள் போரால் பாதிக்கப்பட்டவர்கள். இன்னும் அதிலிருந்து மீளமுடியாதவர்களாக இருக்கிறார்கள்.

இந்நிலையில், இவர்கள் எங்கள் கடற்பரப்புக்குள் தொழில் செய்யும் போது, எம்முடைய மீனவர்களின் வாழ்வாதாரம் மறுக்கப்பட்டு மீனவர்களுடைய பொருளாதாரம் பாதிக்கப்படும். அத்தோடு எமது வளங்கள் அழிவடையும். எனவே அமைச்சருடைய இந்த முடிவானது மிகவும் மோசமான ஒரு முடிவு. மேலும் இது அவருடைய தனிப்பட்ட முடிவல்ல. இதற்குப் பின்னணியிலே அரசாங்கத்தினுடைய நிகழ்ச்சி நிரல் இருக்கின்றது.. அதாவது அரசாங்கம் இந்தியாவை பகைத்துக்கொள்ளாமல்  வடபகுதி மீனவர்கள்தான் இந்தியாவை பகைக்கின்றார்கள் என்ற மாயையை உருவாக்குகின்றனர். ஆகவே இது தொடர்பான பிரச்சினையை கவனத்தில் கொண்டு, இருநாட்டு மீனவர் பிரச்சனைக்கும் ஒரு நிரந்தரமான தீர்வை தேடுவதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.