ஞானசார பௌத்த மதகுருவின் விடுதலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்

ஞானசார பௌத்த மதகுருவை விடுவிப்பதற்கு சிறீலங்கா அரச தலைவர் அனுமதி வழங்கியதற்கு தமிழ்த் தேசிக் கூட்டமைப்பு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று (23) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

சிறீலங்கா அரச தலைவர் ஞானசார பௌத்த மதகுருவிற்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வது கண்டிக்கத்தக்கது. இதன் மூலம் தனது பதவியின் அதிகாரத்தையும், நாட்டின் சட்டத்தையும் அரச தலைவர் தவறான வழியில் பயன்படுத்தியுள்ளார்.

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளரான பௌத்த மதகுரு பௌத்த மதம் அல்லாதோர் மீது மேற்கொண்ட வன்முறைக்காக சிறைக்குச் சென்றவர். அவரின் உயர் நீதிமன்ற மனுவும் நிராகரிக்கப்பட்டிருந்தது.

சிறீலங்கா அரசு எல்லா மத வன்முறையாளர்களையும் ஒரே மாதிரியாக நடத்த வேண்டும். மத வன்முறைகளை நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நிலையில் இது அவசியமானது. ஆனால் பௌத்த மதகுருவுக்கு வேறு ஒரு நீதியும், ஏனைய மதத்தவர்களுக்கு வேறு நீதியும் வழங்குவது நாட்டு மக்களுக்கு தவறான தகவலை வழங்கும்.

சிறீலங்கா அரச தலைவரின் இந்த நடவடிக்கையை நாட்டு மக்கள் அனை-வரும் கண்டிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.