ஜோர்டான் ட்ரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் பலி – பதிலடி கிடைக்கும் என பைடன் எச்சரிக்கை

b2ee328b bcb4 4420 b562 5f50bddbbb1c ஜோர்டான் ட்ரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் பலி - பதிலடி கிடைக்கும் என பைடன் எச்சரிக்கைசிரிய எல்லைக்கு அருகில் ஜோர்டான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் நடந்த ட்ரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் மேலும், இதில் 25 வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆனால், மூன்று அமெரிக்க வீரர்கள் உயிரிழந்த ட்ரோன் தாக்குதல் தங்கள் நாட்டின் எல்லையில் நடக்கவில்லை என்று ஜோர்டான் கூறியுள்ளது. இது குறித்து ஜோர்டான் அரசு செய்தித் தொடர்பாளர் முஹன்னத் முபைதீன் செய்தியாளர்களிடம், “அமெரிக்கப் படைகளைக் குறிவைத்த தாக்குதல் ஜோர்டானில் நடக்கவில்லை. இது சிரியாவில் உள்ள அல்-டான்ஃப் என்ற தளத்தில் நடந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலை ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் நடத்தியதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம்சாட்டியுள்ளார். அதோடு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றமான சூழலே நிலவி வருகிறது. அங்குள்ள பல்வேறு பயங்கரவாத குழுக்கள் சில தொடர்ச்சியாக ட்ரோன்கள், ராக்கெட்டுகள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஆகியவற்றின் மூலம் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. கடந்த சில மாதங்களில் மட்டும் ஈராக், சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களில் சுமார் 90 முறை தாக்குதல்கள் நடந்துள்ளன. இதுவரை உயிரிழப்புகள் ஏதும் நேராத நிலையில் தற்போது ஜோர்டான் எல்லையில் நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் இறந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் உள்ளிட்ட அதிகாரிகள் அதிபர் பைடனுக்கு விளக்கமளித்துள்ளார். மேலும் பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் இது குறித்து, “எங்களுடைய வீரர்களின் நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்” என்றார்.

தென் கரோலினாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிபர் ஜோ பைடன் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட அமெரிக்க வீரர்களுக்காக சிறிது நேரம் மௌன அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர், “நாங்கள் இதற்கு பதிலளிப்போம்” என்றார். மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில், “இது வெறுக்கத்தக்க மற்றும் முற்றிலும் அநீதியான தாக்குதல். இந்தத் தாக்குதல் குறித்த தகவல்களை நாங்கள் சேகரித்து வருகிறோம், இது சிரியா மற்றும் ஈராக்கில் இயங்கும் தீவிர ஈரான் ஆதரவு போராளிக் குழுக்களால் நடத்தப்பட்டது என்பது எங்களுக்குத் தெரியும். இந்தத் தாக்குதலுக்கு அவர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும். இந்த தாக்குதலில் உயிரிழந்தோருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் நெருக்கடி வளர்ந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை காசாவில் 26,422 பேர் உயிரிழந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.