ஜெனீவா விவகாரத்தை நட்பு நாடுகளுடன் இணைந்து எதிர்கொள்வோம் – மகிந்த

நட்பு நாடுகளுடன் இணைந்து ஜெனீவா விவகாரத்தை எதிர்கொள்வோம் என சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு ஒன்று இன்று(14) காலை அலரிமாளிகையில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜெனீவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான விவகாரத்தை நட்பு நாடுகளுடன் இணைந்து எதிர்கொள்வோம்.

இது குறித்து நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எவ்வாறாயினும் இம்மாதம் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள அமர்வில் இலங்கைக்கு எந்தவித சவால்களும் இல்லை.

இலங்கையில் பொதுத் தேர்தல் ஒன்று நடைபெறவுள்ளமை காரணமாக இலங்கை விவகாரம் குறித்து ஜெனீவாவில் பேசப்படாது என எதிர்பார்க்கின்றோம்  எனக் குறிப்பிட்டார்.

மேலும் அரசாங்கத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான இடைவெளிக்கு தமிழ் ஊடகங்களே காரணம் எனவும் குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக மேலும் கருத்துக் கூறுகையில்,

தமிழ் மக்களுக்கு தேவையான அரசியல் தீர்வினை இந்தியாவே பெற்றுக் கொடுக்க வேண்டும் என சில தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் தமிழர்களுக்கான தீர்வை இலங்கை அரசாங்கத்தினால் மட்டுமே வழங்க முடியும்.

சில தமிழ் ஊடகங்கள் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களையே தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றன. இதுவே தமிழ் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான இடைவெளியை அதிகரிக்க காரணமாகின்றது.

இனிவரும் காலங்களில் இச்செயற்பாட்டை தமிழ் ஊடகங்கள் தவிர்க்க வேண்டும். தமிழ் மக்கள் வாக்களித்தாலும், வாக்களிக்கா விட்டாலும் அவர்களுக்கு தேவையானவற்றை அரசாங்கம் தொடர்ந்தும் செய்யும். 13 பிளஸ் குறித்த எனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்பதை நான் கூறிக்கொள்கின்றேன்.. தமிழ் மக்களினால் கொண்டுவரப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை.

அதேபோன்று வடக்கில் உள்ள தமிழ் மக்கள் தற்போது பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். குறிப்பாக இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் காரணமாக வடக்கில் உள்ள மீனவர்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

இது குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஒப்படைத்துள்ளேன். அத்துடன், எனது இந்திய விஜயத்தின் போதும் நான் இந்திய – இலங்கை மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளேன்.

இதேவேளை, பௌர்ணமி தினத்தன்று சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 34 அரச புலனாய்வாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியில் உண்மையில்லை. அதேபோன்று சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அவர்களின் விபரங்கள் கோரப்பட்டுள்ளது. குறிப்பாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்கள், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள கால எல்லை என்பன குறித்து அறிக்கை கோரியுள்ளேன். சில தமிழ் அரசியல் கைதிகள் பாரதூரமான குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளனர். எனவே அறிக்கை கிடைத்ததன் பின்னரே அவர்கள் குறித்து தீர்மானிக்க முடியும் என்றும் கூறினார்.