ஜெனீவா ஆலோசனை நாட்டின் இறைமைக்கான சவால் கோத்தபாயா ராஜபக்ஸ

ஜெனீவா ஆலோசனை நாட்டின் இறைமைக்கான சவால் என சிறீலங்கா ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போதே மேற்படி கருத்தைத் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த கோத்தபாயா ராஜபக்ஸ,

ஜெனீவா யோசனை நாட்டின் இறைமைக்கும் அபிமானத்திற்குமான சவாலாகும். தமது பாதுகாப்புப் படையினர் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டதாக ஏற்றுக் கொண்ட வரலாற்றில் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இதுவே நாம் இணை அனுசரணையிலிருந்து விலகியதற்கான காரணமாகும். நாம் இப்பிரச்சினையின் ஆரம்பத்திற்குச் செல்ல வேண்டும். பொருளாதார பின்னடைவை பற்றிக் கூறியவண்ணமே உமா மகேஸ்வரன் தமது அரசியல் செயற்பாட்டை ஆரம்பித்திருந்தார். பின்னர் அந்த உண்மையை மறைத்து பிரிவினைவாதத்தை முன்னெடுத்திருந்தார். நாம் உண்மையான பிரச்சினைக்குத் தீர்வு வழங்க வேண்டும்.

நாம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு நாட்டின் நலனைக் கருத்திற் கொண்டு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவ்வேலைத் திட்டங்கள் நாட்டின் எதிர்காலத்திற்காகவே முன்னெடுக்கப்படுகின்றன. தேர்தல் காலத்தில் தனது பிரதான எதிர்த் தரப்பு வேட்பாளரின் பெயரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நான் குறிப்பிடவில்லை. எதிரான கருத்துக்களை விமர்சிக்கவில்லை.

எனக்கு கொள்கையே முக்கியம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரிப்பதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமித்துள்ளது. அதன் இரண்டு இடைக்கால அறிக்கைகள் எனக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன.

இறுதி அறிக்கை கிடைத்தவுடன் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளுக்கமைய அவசியமான நடவடிக்கைகள் எடுக்க முடியும். தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்ற தெரிவுக்குழு அறிக்கையிலும் முக்கிய பல முன்மொழிவுகள் உள்ளடங்கி உள்ளன. அவை அனைத்தையும் கருத்திற் கொள்ளவுள்ளோம். தற்போது இடம்பெறுகின்ற விசாரணை தொடர்பாக பேராயர் கர்தினால் மல்க்கம் ரஞ்சித் ஆண்டகையும் திருப்தியடைந்துள்ளார்.

பல நிறுவனங்களின் உயர் பதவிகளுக்கு வழங்கிய நியமனங்கள் தொடர்பாக திருப்தி கொள்ள முடியும். சில நியமனங்கள் தொடர்பாக பிரச்சினை இருக்கின்றது. உயர் பதவிகளுக்கு நியமனம் பெற்றவர்கள் குறித்த காலத்திற்குள் சிறந்த பெறுபேறுகளை காட்ட வேண்டும். அப்படியில்லை எனில் அவர்கள் தொடர்பாக தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டி ஏற்படும்.

மக்கள் பிரதிநிதிகளை ஜனாதிபதி தெரிவு செய்வதில்லை. அதன் பொறுப்பு முழுமையாக மக்களிடமே உள்ளது. அவர்கள் மிகத் தகுதியான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.