ஜெனிவா தீர்மானத்தில் முன்னேற்றம் இல்லை – இலங்கை குறித்த பிரதான நாடுகளின் குழு

“ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்திலுள்ள முக்கியமான விடயங்களில் முன்னேற்றம் ஏற்படவில்லை” என ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான முக்கிய நாடுகளின் குழு கவலை தெரிவித்திருக்கின்றது.

கனடா, ஜேர்மனி, பிரிட்டன், வட மசிடோனியா, மலாவி, மொன்ரிகுறோ ஆகிய நாடுகளின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்க் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறப்பட வேண்டும், சிறுபான்மை மதத்தவர்கள் உள்ளிட்டவர்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அதன் 46/1 தீர்மானம் இலங்கையைக் கோரியிருந்தது. மார்ச் மாத ஜெனிவா கூட்டத் தொடரில் இது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 47 ஆவது கூட்டத் தொடர் நேற்று முன்தினம் ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில், இலங்கை குறித்த பிரதான நாடுகளின் (Core Group) சார்பில் விரிவான அறிக்கை ஒன்று நேற்று வெளியிடப்பட்டது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

“பொறுப்புக் கூறல் , மனித உரிமைகளைப் பாதுகாப்பது போன்ற விடயங்களில் முன்னேற்றம் ஏற்படாததையிட்டு நாம் கவலையடைகின்றோம். இதனைவிட மேலும் பல கரிசனை செலுத்தப்பட வேண்டிய நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இலங்கை அரசாங்கம் தனிநபர்களுக்கு எதிராக தன்னிச்சையான குற்றவியல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இது முழுமையான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணைகளுக்கான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அழைப்பை மீறுவதாக உள்ளது.

அத்துடன், குற்றப் புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சானி அபேசேகரவின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பயன்பாடு மற்றும் போதிய நீதித்துறை மேற்பார்வை இல்லாத புனர்வாழ்வு செயல்முறையை அறிமுகப்படுத்துவதற்கான அரசின் சமீபத்திய நோக்கம் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்.

மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாஃப் ஜஸீம் ஆகியோர் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடைச் சடத்தின் கீழ் சிறுபான்மை சமூகங்களைச் சோ்ந்தோர் மற்றும் அரசியல் எதிரிகளைக் கைது செய்யும் நடவடிக்கை தொடர்கிறது.

அத்துடன், போரில் இறந்தவர்களை தமிழர்கள் நினைவு கூருவதற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம்.

மேலும் பொலிஸ் காவலில் இடம்பெற்ற சமீபத்திய மரணங்கள் குறித்து சுயாதீனமான மற்றும் பக்கச் சார்பற்ற விசாரணைகளை கோருவதில் இலங்கையின் சட்டத்தரணிகள் சங்கத்துடன் நாங்களும் இணைகிறோம்.

காணாமல் போனோர் அலுவலகத்திற்கான நியமனங்கள் குறித்தும் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். நீதி கிடைக்க சுயாதீனமான மற்றும் நம்பகமான செயன்முறைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்தை நிறைவேற்றுவதில் பேரவையுடன் ஒத்துழைத்துச் செயற்படுமாறு இலங்கையை நாங்கள் ஊக்குவிக்கிறோம்” எனவும் பிரதான நாடுகள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.