ஜெனிவாவில் புதிய பிரேரணையை தோற்கடிப்பது கடினம் – சிறிலங்கா அமைச்சர் சொல்கின்றார்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய பிரேரணையை தோற்கடிப்பதென்பது கடினமாக செயலாகும் என்று பிராந்திய கூட்டுறவு இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.

ஜெனிவாத் தொடரில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள பிரேரணையை தோற்கடிப்பதற்கு 24 நாடுகளின் ஆதரவு அவசியம். அதற்கான சாத்தியம் உள்ளதா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:

“தற்போதைய பூகோள அரசியலின் அடிப்படையில் இது கடினமான செயலாகும். போர்க்காலத்தில் நடந்த சம்பவங்களை மட்டும் அடிப்படையாகக்கொண்டு பிரேரணை வந்திருந்தால் 24 அல்ல 47 நாடுகளின் ஆதரவைக்கூட பெற்றிருக்கலாம்.

குறிப்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரால் வெளியிடப்பட்ட பதினான்கரை (14.5) பக்கங்கள் கொண்ட அறிக்கையில், பதினொன்ரரை (11.5) பக்கங்களில் கடந்த ஓராண்டு காலப்பகுதிக்குள் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலேயே விவரிக்கப்பட்டுள்ளது.

இதனால் பூகோள அரசியல் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். எதுஎப்படி இருந்தாலும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு தொடர்பில் முடிவொன்றை காணவேண்டும் என ‘கோகுறூப்’ நாடுகளிடம் தெரிவித்துள்ளோம். இப்பிரச்னையை அடுத்த தலைமுறைக்கு விட்டுவைக்ககூடாது. இதற்கு மேற்குலகம் உடன்படுமா என்பது எமக்கு தெரியாது.

இணை அனுசரணை வழங்குமாறு இம்முறையும் இலங்கையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை நாம் ஏற்கவில்லை. பிரேரணை. தீர்மானம் என்னவாக இருந்தாலும், அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மன் ஆகிய நாடுகளுடன் இலங்கைக்கு பொருளாதார ரீதியில் சிறந்த உறவு இருக்கின்றது. எனவே, பொருளாதாரத் தடை உட்பட கடுமையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது என நம்புகின்றோம்.

பொருளாதாரத் தடைவிதிப்பதாக இருந்தால்கூட அதனை ஐ.நா. பாதுகாப்பு சபை ஊடாகவே முன் னெடுக்கவேண்டும். அதேவேளை, அரபுலகம் இலங்கைக்கு ஆதரவு வழங்கும். இந்தியாவும் நேசக்கரம் நீட்டும் என நம்புகின்றோம்” என்றார்.