செய்தியாளர் சந்திப்பில் சமைக்காத மீனை உண்ட அமைச்சர்

மீன்கள் மூலம் கொரோனா பரவாது எனத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஒருவர் சமைக்காத மீனை செய்தியாளர்கள் சந்திப்பில் உண்டு காட்டியுள்ளார்.

மேலும் மக்கள் மீனை கொள்வனவு செய்யலாம்  என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட கோவிட் 19 தொற்று, பின்னர் பேலியகொட மீன் சந்தையில் பரவியிருந்தது.

இதன் ஊடாக இதுவரை சுமார் 6000திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கோவிட்-19 ஒழிப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

இந்த தொற்றின் பின்னர், நாட்டு மக்கள் மீன்களை கொள்வனவு செய்வதில் அச்சப்படுவதை காண முடிகின்றது.

இந்நிலையில்,கொழும்பில் இன்று  நடைபெற்ற செய்தியாளர்  சந்திப்பில் கருத்து வெளியிட்ட மீன்பிடித்துறையின் முன்னாள் அமைச்சர் திலீப் வெத ஆராச்சி ,மக்கள் மீன்களை கொள்வனவு செய்யாத காரணத்தினால் மீனவர்கள் பெரும் சிரமங்களை அனுபவிப்பதாக கவலை வெளியிட்டுள்ளார்.

மீன்களில் கொரோனா வைரஸ் இல்லை என்று கூறிய அவர் அதனை உறுதிப்படுத்தும்வகையில் செய்தியாளர்களின் முன்னிலையில் மீனை பச்சையாக சாப்பிட்டும் காட்டியுள்ளார்.