சென்னையில் தொடரும் கனமழை – வெள்ளக்காடாக மாறிய சாலைகள்

சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் தேங்கி உள்ளது.

புரெவி புயல் வலுவிழந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டுகிறது. இதனால் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன.

சாலைகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சில பகுதிகளில் மழை நீர் வடிந்து இயல்பு நிலைக்கு திரும்பியது. ஆனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மழைநீர் வடியாமல் உள்ளது.

இந்நிலையில், அடுத்த 12 மணி நேரத்திற்கு தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் புவியரசன் கூறியதாவது, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது, இது அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில நீடிக்கக்கூடும்.” என்று தெரிவித்துள்ளர்.

இந்த சூழலில் சென்னையில் இன்று மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் காலை முதலே விட்டு விட்டு கனமழை பெய்கிறது. இதனால் சாலைகளில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.