சீன உயர் மட்டக் குழு ஒன்று அவசரமாக கொழும்பு வருகின்றது; ஜனாதிபதி, பிரதமருடன் மட்டும் சந்திப்பு

சீனாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினருமான Yang Jiechi தலைமையிலான உயர் மட்டக்குழு ஒன்று திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை வியாழக்கிழமை கொழும்பு வருகின்றது.

இக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரை மட்டும் சந்திக்கும் எனவும், சர்வதேச தொற்று நோயாக உருவெடுத்துள்ள கொரோனாவை எதிர்கொள்வது மற்றும், பொருளாதார உறவுகளைப் புதுப்பிப்பது போன்ற இரு தரப்பு விடயங்களையிட்டு ஆரபாய்வதற்காகவே இந்தக் குழு இலங்கை வருகின்றது.

நாளை மறுதினம், ஜனாதிபதியையும் பிரதமரையும் இக்குழுவினர் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பைத் தவிர வேறு இடங்களுக்கு இவர்கள் செல்லமாட்டார்கள் எனவும், ஜனாதிபதி, பிரதமரைத் தவிர வேறு சந்திப்புக்களில் ஈடுபடமாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார அமைச்சினால் தெரிவிக்கப்படும் கடுமையான சுகாதாரக் கட்டுப்பாடுகளுடனேயே இவர்களுடைய விஜயம் இடம்பெறும். கொரோனா தொற்று பரவத் தொடங்கியதையடுத்து இலங்கைக்கு வரும் முதலாவது வெளிநாட்டு உயர்ட்டக்குழு இது என்பது குறிப்பிடத்தக்கது.