சீனாவில் செவிலியர்களுக்கு பதிலாக ரோபோக்கள்;கொரோனா தொற்றை குறைக்கும் முயற்சி

சீனாவில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருவதையடுத்து, மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு மருந்து, உணவுகளைச் செவிலியர்கள் வழங்குவதற்குப் பதிலாக ரோபோக்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.

சீனாவை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸுக்கு இதுவரை அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளார்கள், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார். 25 நாடுகளுக்கும் மேலாக அந்த வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வைரஸ் பரவும் வேகம் அதிகமாக இருப்பதால், இனிவரும் காலத்தில் அதிகமானோர் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக சீனாவில் பல மருத்துவமனைகள் ரோபோக்களை பணிக்கு அமர்த்தியுள்ளன.

செவிலியர்கள் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை, உணவுகளை வழங்குவதற்கு பதிலாக ரோபோக்கள் வழங்கும். இதன் மூலம், நோயுற்றவர்களுடன் அதிகமான நேரத்தைச் செவிலியர்கள் செலவு செய்ய வேண்டியதில்லை, அவர்களுக்கு கரோனா வைரஸ் பரவும் வாய்ப்பில் இருந்து காக்கலாம் என்ற நோக்கில் இந்தமுறை பல மருத்துவமனைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.