சீனாவில் உருவாகிய இரண்டாவது அலையில் உருமாறிய கொரோனா வைரஸ் தடுமாறும் மருத்துவர்கள்

சீனாவில் உருவாகியுள்ள கொரோனா வைரஸின் இரண்டாவது அலையில் வைரஸின் உருவம் மாற்றம் பெற்றுள்ளதால் மருந்து கண்டு பிடிப்பதில் சீன மருத்துவர்கள் சவாலை எதிர்நோக்கியிருக்கின்றனர். சீனாவின் வூஹான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது.

இதுவரை 50 இலட்சத்திற்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 இலட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதேவேளை கொரோனா வைரஸ் தன்னை உருமாற்றத் தொடங்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் அதற்கு தடுப்புசி கண்டுபிடிப்பது சவாலாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

வூஹானில் முதல் தோன்றிய வைரஸ் நோயாளர்களுடன் ஒப்பிடுகையில் தற்போது நோயாளிகள் குணமடைய அதிக நேரம் எடுத்துக் கொள்வதாகவும், முதல் இருந்த வைரஸை விட பாதிப்பு அதிகமாக உள்ளதாகவும் சீன மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

வூஹானை ஒப்பிடும் போது வடகிழக்கு பகுதியில் கொரோனா நோய்க்கான அறிகுறிகள் தெரிய அதிக நேரம் எடுப்பதாக சீன மருத்துவர் கியூ ஹைபோ தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார். இதனால் கொரோனா பாதிப்பை கண்டறிவதில் அதிகாரிகளுக்கு கடினமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.