சீனாவின் ஆயுதங்கள், போர்விமானங்களுடன் தென்சீனக் கடலில் பாதாளச் சுரங்கம்

தென்சீனக் கடலில் பாதாளச் சுரங்கம் அமைந்திருப்பதை அமெரிக்க செயற்கைக் கோள் புகைப்படங்கள் ஆதாரப்படுத்தியுள்ளன.

தென்சீனக் கடலில் சீனா அணுஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை பதுக்கி வைத்திருப்பதாக இந்தியா குற்றஞ்சாட்டியிருந்தது. அது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவத்துள்ளது.

உலகின் மிக முக்கியமான கடற்படை வழித்தடமான தென்சீன கடல் பகுதி முழுவதும் தனக்கே சொந்தம் என்று சீனா கருதி வரும் நிலையில், இந்த நிலைப்பாட்டை அமெரிக்கா, தைவான், மலேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன. இதனால் தென்சீன கடல் பகுதியில் பதற்றம் நிலவுகின்றது.

தென்சீனக் கடல் பகுதியில் உள்ள தீவுகள் இயற்கை வளம் நிறைந்தவை.  இந்தப் பகுதிதான் உலக நாடுகளின் வர்த்தக ரீதியான கடல்வழி பயணத்திற்கு முக்கியமான வழித்தடமாக உள்ளது. இதன் காரணமாகவே சீனா இந்தக் கடற்பகுதியை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிக்கின்றது.

ஹொங்கொங்கிலிருந்து 470 கி.மீற்றர் தூரத்தில் தென்சீன கடற்பகுதியில் உள்ள ஹைனான் தீவில் மிகப் பெரிய யுலின் கடற்படைத் தளத்தை சீனா அமைத்துள்ளது. அங்கு சீனா தனக்குச் சொந்தமான போர்க்கப்பல்கள், அணுஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை பதுக்கி வைத்துள்ளது. இந்தக் கப்பல்கள் எதுவும் அமெரிக்க ராடர் பார்வையில் சிக்கியதில்லை.

சீனா தென்சீனக் கடற்பகுதியில் பாதாளம் அமைத்து அங்கு கடற்படைத் தளத்தை உருவாக்கியிருக்கும் என்று இந்தியா சந்தேகம் தெரிவித்திருந்தது. இதை தற்போது இங்கிலாந்தும், அமெரிக்காவும் முன்வைத்துள்ளன. தற்போதைய செயற்கைக் கோள் படங்கள் இதை உண்மை என நிரூபித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பிளனட் லேப் என்ற தனியார் செயற்கைக் கோள் நிறுவனம் யுலின் கடற்படைத் தளம் அருகே சீனா பாதாள கடற்படைத் தளத்தை அமைத்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளது. இந்த பாதாள சுரங்கத்திற்குள்ளே சாங் 093 நீர்மூழ்கிக் கப்பல் நுழைவதை செயற்கைக் கோள் மூலம் படம் பிடித்துள்ளது.