சில்லறைச் சலுகைகளுக்கு அடிபணியாமல் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் – சம்பந்தன்

நாம் சில்லறை சலுகைகளுக்கு அடிபணியாமல் இலக்கை நோக்கிப் பயணிப்பதன் ஊடாக மாத்திரமே வெற்றியடைய முடியும் எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், அனைத்து மக்களுக்கும் இன, மத பேதமின்றி சகல விதமான சலுகைகளும் வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 44 ஆவது நினைவுதினம் திருகோணமலையிலும் நேற்றுத் திங்கள்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. இதில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

“நாட்டில் பாரிய ஆட்சி மாற்றமொன்று ஏற்பட வேண்டும். அனைத்து மக்களுக்கும் இன, மத பேதமின்றி சகல விதமான சலுகைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணத்திலேயே தந்தை செல்வா 1949ஆம் ஆண்டு எமது கட்சியை ஆரம்பித்தார். நாங்களும் அவரது கொள்கைகளுக் கமையவே கடந்த 70 வருடங்களாக பயணித்து வருகின்றோம். அதிகளவான கட்சிகள் அவரது நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளன.

அந்தவகையில் நாமும் அவைகளை அடையக்கூடிய நிலையிலேயே தற்போதும் இருக்கின்றோம். சில பிரச்னைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் பெரும்பாலான பிரச்னைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்து இருக்கின்றோம். எதிர்வரும் காலங்களிலும் எங்களது இலக்கிலிருந்து விலகாமல், சில்லறை சலுகைகளுக்கு அடிபணியாமல் இலக்கை நோக்கிப் பயணிப்பதன் ஊடாக மாத்திரமே நாம் வெற்றியடைய முடியும்” என்றார்.