சிறீலங்கா விவகாரத்தை ஐ.நாவில் விரிவாக ஆராய,சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வலியுறுத்தல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் போது சிறீலங்காவில் இடம்பெற்ற திட்டமிட்ட குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், வலிந்து காணாமல் ஆக்கப்படல், வலுவிழந்துள்ள சட்டத்தின் ஆட்சி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட வேண்டும் என சர்வதேச  உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வலியுறுத்தியுள்ளது.

எதிர்வரும் ஐநாவின் 46ஆவது கூட்டத்தொடரில், சிறீலங்கா தொடர்பாக விசாரிக்கப்படவேண்டிய விடயங்கள் தொடர்பான அறிக்கையினை சிறீலங்காவில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்புடன் இணைந்து சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வெளியிட்டுள்ளது.

திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் அவை தொடர்பில் விசாரணை செய்வதில் தோல்வியடைந்த கட்டமைப்புக்கள், தற்போது இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் ( வன்முறைகள், தன்னிச்சையான கைது நடவடிக்கைகள், தடுத்துவைக்கப்பட்டுள்ளபோது இடம்பெறும் இறப்புக்கள்) வலிந்து காணாமல் ஆக்கப்படல், கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி, முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் ஆகிய விடயங்கள் தொடர்பில் மேற்படி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மையில் ஐ.நா மனித உரிமை ஆணையாளரினால் சிறீலங்கா தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பாரிய மனித உரிமை மீறல் குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதற்கான 30|1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் கடப்பாட்டிலிருந்து சிறீலங்கா தவறியுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

மேலும் சர்வதேச சட்டங்களுக்கு முரணான குற்றங்கள் தொடர்பில் நீதியையும் பொறுப்புக் கூறலையும் உறுதி செய்யாமை மாத்திரமின்றி, சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்றமை குறித்தும் கூறப்பட்டுள்ளது என்று குறித்த இரு அமைப்புக்களும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.