மலையக மக்களுக்கு 1000 அல்ல ரூபா 2000 வழங்கப்பட வேண்டும் – சுமந்திரன் கருத்து

மலையக தோட்ட தொழிலாளரின் 1,000 ரூபா சம்பள உயர்வு தொடர்பாக நீண்ட காலமாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில்,    அதிகரிக்கும் வாழ்க்கை செலவுடன் நோக்குகையில் தற்போது இது 2,000 ரூபாயாக இருத்தல் வேண்டும் என நாடாளுமன்றத்தில் சுமந்திரன் உரையாற்றுகையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்  மலையக தோட்ட தொழிலாளரின் 1,000 ரூபா சம்பள உயர்வு தொடர்பாக மேலும் உரையாற்றுகையில்,

“அநேக காலமாக ரூபா1,000 அடிப்படை சம்பள உயர்வுக்காய் கோரிக்கை முன்வைத்தபோதும் அதிகரிக்கும் வாழ்க்கை செலவுடன் நோக்குகையில் தற்போது இது 2,000 ரூபாயாக இருத்தல் வேண்டும், இருப்பினும் அந்த 1,000 ரூபாய் உயர்வு கூட இன்னும் வழங்கப்படாதிருக்கின்றது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான நடை பயணத்தில் நாம் 10 கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைத்திருந்தோம். அவற்றுள் இந்த 1,000 ரூபா சம்பள உயர்வும் ஒன்றாகும். தகவலின் திரிபுகளை தவிர்க்கவும், பதிவு செய்துகொள்ளும் நோக்கத்திற்காகவும் அந்த 10 கோரிக்கைகளையும் வாசிக்கிறேன்.

*தொடர்ச்சியான நில அபகரிப்பு மற்றும் இந்து கோவில்களை அப்புறப்படுத்தி அதில் பௌத்த விகாரைகளை அமைத்தலின் மூலம் தமிழர்களின் வரலாற்று பகுதிகளை சிங்கள மயமாக்கல்

*யுத்தம் நிறைவுற்று 10 வருடங்களுக்கு மேலானாலும் இன்னமும் தமிழர் பகுதிகளில் இராணுவ மயமாக்குதல் மற்றும் தமிழரின் பிரதேசங்களை பௌதீக ரீதியில் சிங்கள மயமாக்க அரச திணைக்களங்களை விசேடமாக தொல்பொருள் திணைக்களத்தினை உபயோகித்தலும் அரச அனுசரணையுடன் சிங்கள குடியேற்றங்களை முன்னெடுத்தலும்.

*மனித உரிமை மீறல் தொடர்பாக வெளிச்சத்துக்கு கொண்டுவரும் ஊடகவியலாளர் மற்றும் மனித உரிமை துஷ்பிரயோகம் தொடர்பாக எதிர்க்கும் சிவில் சமுக ஆர்வலர்களையும் அரசு தொடர்ந்தும் இலக்கு வைத்தல்

*தமிழ் பண்ணையாளர்கள் தமது பசுக்களை கொண்டு செல்லும் மேய்ச்சல் தரையினை சிங்கள பண்ணையாளர்கள் ஆக்கிரமித்தல் மற்றும் பசுக்கள் கொல்லப்படல் போன்ற பிரச்சினைகள்

*மரித்த தமது உறவுகளை தமிழர்கள் நினைவு கூறும் உரிமை மறுக்கப்படுத்தல் மேலும், கல்லறைகள் மற்றும் நினைவு தூபிகள் என்பன அழிக்கப்படல்.

*கோவிட் – 19 தொற்றினால் மரணிக்கும் முஸ்லீம்களின் ஜனாஸா அவர்களது குடும்பத்தின் விருப்புக்கும் சமய நம்பிக்கைக்கு எதிராகவும் வலுக்கட்டாயமாக எரிக்கப்படல்.

*தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு எவ்வித வழக்குகளும் பதியப்படாது 40 வருடங்களுக்கு அதிகமாக தடுப்பில் இருக்க பயன்படுத்தப்பட்ட பயங்கரவாத தடுப்பு சட்டம் இன்று முஸ்லீம் இளைஞருக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகின்றமை

*அரசாங்கம் சிங்கள கைதிகளை கிராமமான முறையில் விடுதலை செய்து வருகின்ற போதும் எந்த ஒரு தமிழ் அரசியல் கைதியும் விடுதலை செய்யப்படாமலும், வழக்குகள் விசாரணைகளின்றியும் இருத்தல்.

*காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் தொடர்ச்சியாக தமது உறவுகளுக்கான தீர்வினை வேண்டியும் அரசாங்கம் அவர்களுக்கான பதிலினை வழங்காதுள்ளமை.

*மலையக தோட்ட தொழிலாளர் 1000 ரூபா சம்பள உயர்வினை கோரினாலும் அரசாங்கம் அதற்கு பதில் வழங்காதுள்ளமை.

இவையே 01.02.2021 திகதியிடப்பட்ட வடகிழக்கு சிவில் சமூகத்தின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த கோரிக்கைகளாகும்.

இந்நடை பயணமானது சிவில் சமூகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு எமது கட்சியினாலும் ஆதரிக்கப்பட்டது. இவை நியாயமான கோரிக்கைகளாகவும் நீதிக்கான விடயங்களாகவும் காணப்பட்டதோடு, ஜனநாயக முறையில் எமது எதிர்ப்பினை நாம் தெரிவித்திருந்தோம்.

இப்பேரணி சமாதானமான முறையில் நடைபெற்றதோடு அநேகர் திரண்டு வந்து தமது ஆதரவினை தெரிவித்து இதனை வெற்றிகரமாக நிறைவு செய்தனர். எனவே இவர்களின் கோரிக்கைகளை கவனத்தில் எடுத்து வடக்கு கிழக்கு மக்களுக்கு பதிலளிக்க வேண்டுமென அரசாங்கத்தினை கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.