‘சிறீலங்கா அரசு பன்னாட்டு சமூகத்தின் கண்காணிப்பிலிருந்து மறைந்து போகாது தடுப்பது எப்படி?’ – யஸ்மின் சூக்காவுடன் ஒரு நேர்காணல்

தென்னாபிரிக்க நாட்டைச் சேர்ந்த யஸ்மின் சூக்கா (Yasmin Sooka), கடந்த பல ஆண்டுகளாக சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக உரத்துக்குரல் கொடுத்து வரும் ஓர் மனித உரிமை ஆர்வலர் ஆவார்.

அவரது தலைமையில் இயங்குகின்ற உண்மைக்கும் நீதிக்குமான பன்னாட்டுத் திட்டம் (International Project for Truth and Justic – ITJP) என்ற அமைப்பு, சிறீலங்காவின் இறுதிப்போரின் போதும், அதன் பின்னரும் அங்கே மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தி பன்னாட்டுச் சமூகத்தில், தமிழ் மக்கள் சார்பாகக் குரலெழுப்பி வருகிறது.

கடந்த ஆண்டு (2019) மே மாதம் சிறீலங்காவில் போர் முடிந்து 10 வருடங்கள் கடந்த நிலையில், இலக்கு அவருடன் ஒரு நேர்காணலை மேற்கொண்டிருந்தது. அந்த நேர்காணலின் ஒரு பகுதியை கீழே தருகிறோம்:

கேள்வி:

சிறீலங்காவில் உள்நாட்டுப் போர் நடைபெற்று, 10 ஆண்டுகள் கடந்துவிட்ட இத்தருணத்தில், அந்த நாட்டில் நடைபெற்ற போரிலே பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளும் பயணத்தில், உலகம் பூராவும் இருக்கின்ற பல்வேறு தமிழ் அமைப்புகள் இதுவரை மேற்கொண்ட முயற்சிகளை நீங்கள் எவ்வாறு ஆய்வு செய்கிறீர்கள்?

உண்மையில் இவ்விடயம் தொடர்பாகப் பல பக்கங்களைப் பார்க்கலாம். புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் நீங்கள், மிகவும் சக்தி வாய்ந்த ஒரு சமூகமாக இருக்கிறீர்கள். ஆனால் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஒருவர் மற்றவருடன் இணைந்து பணியாற்றத் நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? என எனக்குத் தெரியவில்லை.

யார் பெயரெடுப்பது என்று, பொதுவாக அமைப்புகளிடையே போட்டி மனப்பான்மை இருப்பதாக எனக்குப் படுகிறது. உண்மையில் இப்படிப்பட்ட மனப்பாங்கு எமது பொதுவான இலக்கை அடையும் செயற்பாட்டை பாதிக்கக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. இலங்கை அரசு பன்னாட்டுச் சமூகத்துக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் செய்வதே எங்களது பொதுவான இலக்கு என்று வைத்துக்கொண்டால், என்னைப் பொறுத்த வரையில், புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள், தாம் வாழுகின்ற நாடுகளில் உள்ள அரசுகள் சரியான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அவற்றின் மீது இன்னும் பலமான அழுத்தத்தைப் பிரயோகிக்கலாம்.

ஆனால் அவர்கள் தங்களுக்கு இருக்கும் இந்த சக்தியைப் பிரயோகிக்கிறார்களா? அல்லது தங்களுக்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது என்பதை இனங்கண்டு கொள்கிறார்களா? என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

உதாரணமாக போர் மிகவும் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், ரொறொன்ரோ போன்ற ஒரு மாநகரத்தை ஸ்தம்பிதம் அடையச் செய்யக்கூடிய ஆற்றலும், வல்லமையும் அவர்களுக்கு இருந்தது. அப்படியென்றால் தாம் வாழும் நாடுகளிலுள்ள கனேடிய, பிரித்தானிய, அமெரிக்க அரசுகள் மீது இன்னும் அதிகமான அழுத்தத்தை அவர்கள் ஏன் பிரயோகிக்கவில்லை என்று கேட்பது நியாயமான தொன்றாகவே எனக்குத் தெரிகிறது.

உண்மையில் ஐ.நாவுக்குப் போய் ஒளிப்படங்களை எடுத்தால் மட்டும் போதாது. இந்த அமைப்புகள் தாங்கள் செய்ய வேண்டிய செயற்பாடுகளை உண்மையில் செய்தார்களா என்பது எனக்குத் தெரியவில்லை.

மற்றைய விடயம் என்னவென்றால், ஒரு கட்டத்தில் புலம்பெயர் அமைப்புகள் சிறீலங்கா அரசுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளில் ஈடுபட்டன. அந்த நேரத்தில், அந்த அரசுக்கு அவர்கள் போதிய அழுத்தத்தை கொடுத்தார்களா என்பது தெரியவில்லை. அரசு மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகளைச் சரியாகச் செய்ததா என்று பார்க்க வேண்டும். அமைப்புகள் அனைத்தும் ஒன்றாக வந்து, ஆக்கபூர்வமாகச் செயற்படுவதென்றால், மீண்டும் ஒருமுறை ஐ.நாவில் ஒரு வெற்றுத்தீ ர்மானம் மேற்கொள்ளப்படுவதைத் தடுப்பதற்கும், ஐ.நா தனது பணியைச் செவ்வனே செய்வதை உறுதிப்படுத்தவும் நாங்கள் செய்ய வேண்டிய 5 விடயங்கள் எவை என ஆய்ந்து பார்க்கலாம்.

அவரவர் வாழும் நாடுகளிலுள்ள அரசுகளுக்கு அழுத்தம் கொடுப்பதோடு மட்டும் நின்றுவிடாது, நாம் ஜெனீவாவுக்குப் போவதன் நோக்கம் என்ன? நாங்கள் அங்கே செய்ய வேண்டிய கருமங்கள் எவை? எனவும் ஜெனீவாவில் இந்தத் தளத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் அறிந்திருக்கிறார்களா என்பதும் எனக்குத் தெரியாது.

உதாரணமாக, 2011ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியை நீங்கள் மீட்டுப் பார்த்தால், அக்காலப் பகுதியில் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் சமர்ப்பித்த ஆவணங்கள் அசாதாரணமானவையாகும். உண்மையில் அக்காலப்பகுதியில் ஐ.நாவில் செயற்பட்ட தமிழ் மக்களுக்கான குழுக்களிடமிருந்து, மற்றைய நாடுகளிலுள்ள மற்றைய போராட்டங்கள் தொடர்பாக நான் மேற்கொள்ளக் கூடிய பல விடயங்களை அந்த அமைப்புகளிடமிருந்தே நான் கற்றுக் கொண்டேன். இப்போது அப்படிப்பட்ட ஆவணங்களை எவர் தயாரிக்கிறார்கள் என்ற வினாவை நீங்கள் எழுப்பலாம். தீர்மானத்தின் ஏனைய விடயங்கள் தொடர்பாக கவனஞ் செலுத்தக்கூடிய ஒரு வாய்ப்பை உண்மைக்கும் சமாதானத்துக்குமான பன்னாட்டுத் திட்டம் என்ற எங்கள் அமைப்பு உருவாக்கியிருக்கிறது.

உதாரணமாகக் காணிப்பிரச்சினைக்கு என்ன நடந்தது? உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பாக எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? எவ்வளவு எண்ணிக்கையான தமிழ் மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பியிருக்கிறார்கள்? இப்படிப்பட்ட பிரச்சினைகளை ஆய்ந்து, தரவுகளைச் சேகரிக்கும் செயற்பாட்டை தற்போது எவருமே முன்னெடுப்பதாகத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரையில், நீங்கள் ஜெனீவாவுக்குச் சென்று அங்கு ஐ.நாவின் தீர்மானத்தைப் பற்றிக் கதைக்கப் போகிறீர்கள் என்றால், சிறீலங்கா அரசு வாக்களித்த எதனையுமே செய்யவில்லை என்று அங்கு நீங்கள் சொல்ல விரும்பினால், அதற்கான உரிய ஆவணங்களைத் தயாரிக்க வேண்டும். அதாவது உரிய தரவுகளை ஒன்றிணைத்து அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் ஐ.நா அவையில் முன்வைக்க வேண்டும்.

ஆரம்ப காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வரைகலைச் செயற்பாடுகளை நீங்கள் பார்த்திருந்தால், அங்கே காட்டப்பட்டபடி, வரைகலைத் தரவுகளை கொண்டுசென்று அந்த வரைகலைத் தரவுகளைக் காட்டி, எல்லா இடங்களும் இராணுவமயமாக்கப்பட்டிருக்கின்றன என்று சுட்டிக் காட்டலாம். அப்படிப்பட்ட செயற்பாடுகள் எதுவுமே தற்போது நடைபெறவில்லை. உண்மையில் அடுத்த தடவை நடைபெறும் கூட்டத் தொடரில் ஐ.நாவின் நிகழ்ச்சி நிரலில் சிறீலங்கா இடம்பெற வேண்டும் என்றால், அவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து இப்படிப்பட்ட வேலைகளைகளில் ஈடுபட வேண்டும்.

எனவே இப்படிப்பட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாவிட்டால், சிறீலங்கா பன்னாட்டுச் சமூகத்தின் கண்காணிப்பலிருந்து மறைந்து போகக்கூடிய ஆபத்து இருக்கிறது. ஐக்கிய நாடுகள் அவையில் இப்படிப்பட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதால், என்ன பயன்? என்று பலர் கேட்கிறார்கள். உண்மையில் சிறீலங்காவை உலகின் நிகழ்ச்சி நிரலில் வைத்திருப்பது என்பது சிறீலங்கா பன்னாட்டுச் சமூகத்தால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்ற பொருளாகும். சிறீலங்கா சரியாகச் செயற்படுகின்றதா? என ஏனைய உறுப்பு நாடுகள் தீர்ப்பிடுகின்றன. ஆகவே இப்படிப்பட்ட செயற்பாடுகளைத் தான் அந்த அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.

அடுத்தது என்னவென்றால், தமிழ் அமைப்புகள் ஐக்கிய நாடுகள் அவையின் மேல் இன்னும் அதிகமான அழுத்தத்தைப் பிரயோகிக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் அவையைப் பார்த்து, துறைசார்ந்த ஆற்றல்களை வளர்க்க வேண்டும் என்ற கதையை ஐ.நா நிறுத்தி, சிறீலங்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்றதா? எனக் கண்காணிக்க வேண்டும் என்று அதற்கு அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும்.

கடந்த சில மாதங்களாக மனித உரிமைகள் ஆணையாளர் பணிமனையிலிருந்து சிறீலங்காவில் முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக, உதாரணமாக பெண்கள் நிக்காபை அணிய முடியாது இருப்பது தொடர்பாக எந்தவிதமான அறிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை.

இப்படிப்பட்ட விடயங்களையே ஐ.நா பேச வேண்டும் என நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். ஆனால் அவர்களோ எதையும் பேசாது மௌனமாக இருக்கிறார்கள். ஆகவே என்னைப் பொறுத்த வரையில், இப்படிப்பட்ட செயற்பாடுகளையே புலம்பெயர் தமிழ் அமைப்புகள் முன்னெடுக்க வேண்டும். வெவ்வேறு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் ஒன்றாகச் சந்தித்து எமது மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? நாங்கள் என்ன செய்யலாம் என்று உரையாட வேண்டும். புலம் பெயர் தமிழ் அமைப்புகள் இப்படிப்பட்ட உரையாடல்களில் ஈடுபடாமல் போனால், சிறீலங்கா பன்னாட்டுச் சமூகத்தின் கண்காணிப்பிலிருந்து மறைந்து போய்விடும்.

ஏனென்றால், மனித உரிமைகள் ஒரு முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் ஒரு மோசமான காலகட்டத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பல அரசுகளைப் பொறுத்த வரையில், பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் நீங்கள் இணைந்து கொண்டால், உங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய அந்த அரசுகள் தயாராக இருக்கின்றன. இந்தப் போட்டியில் மனித உரிமை விடயங்கள் தொலைந்து போகக்கூடிய ஆபத்து இருக்கிறது. இவ்விடயங்களில் எதிர்வரும் காலங்களில் நாங்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.