சிறீலங்கா அரசின் அசமந்தப்போக்கே குண்டு வெடிப்புக்கும், கல்முனை பிரச்சனைக்கும் காரணம் – விக்கினேஸ்வரன்

கடந்த ஏப்பிரல் 21 ஆம் திகதி குண்டுவெடிப்பு பற்றி அசமந்தப் போக்கைக் கடைப்பிடித்த அரசாங்கம் கல்முனை விடயத்திலும் இவ்வாறான போக்கைக் கடைப்பிடிக்கக் கூடாது என்று வலியுறுத்துகின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரச்சனைக்குத் தீர்வு காணாமல் அரசாங்கத்திற்கு மாமாவேலை செய்து கால அவகாசத்தை எடுத்துக் கொடுக்கப் பார்க்கின்றது என முன்னாள் வடமாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான திரு வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கனடா வாணிபம் வியாபார தகவல் கையேட்டு நிறுவத்தின் உதவியுடன் கிளிநொச்சிப் பகுதியில் இடம்பெற்ற மக்கள் நலன் காப்பகத்தின் மூதாளர் மாதாந்த உதவித்திட்ட ஆரம்ப விழாவில் இன்று (22) கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவரின் உரையின் முழு வடிவம் வருமாறு:

இன்றைய நிகழ்வைத் தலைமை தாங்கி நடாத்திக் கொண்டிருக்கின்ற மக்கள் நலன் காப்பகப் பொருளாளர் திரு.த.பாலசுரேஸ் அவர்களே, சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருக்கின்ற ஓய்வுபெற்ற அதிபர் திரு.க.நாகராஜா அவர்களே, மற்றும் இலண்டனில் இருந்து வந்திருக்கும் திரு.இரட்ணகுமார் வைத்தியநாதன் அவர்களே, கௌரவ விருந்தினர்களே, மக்கள் நலன் காப்பக அங்கத்தவர்களே, தமிழ் மக்கள் கூட்டணியின் அங்கத்தவர்களே, இன்றைய நிகழ்வில் உதவிகளைப் பெற்றுக் கொள்ளவிருக்கின்ற மூதாளப் பெருமக்களே, சகோதர சகோதரிகளே!
இன்றைய இந்த ஆரம்ப நிகழ்வு ஈகையின் சிறப்பை வெளியிடுவதாக அமைந்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்துங் கூட திரு. இரட்ணகுமார் வைத்தியநாதன் போன்றவர்கள் இங்கே வந்து கலந்துகொண்டிருப்பது எமது பாதிக்கப்பட்ட மக்கள் மீது கடல்கடந்த நாடுகளில் வசிக்கின்ற எமது உறவுகள் எவ்வளவு கரிசனை கொண்டிருக்கின்றார்கள் என்பதனை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கின்றது. இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுக்க முன்வருவதே ஈகை. எமது வெளிநாட்டு உறவுகள் தரும் உதவிகளை இங்கு பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்குக் கொண்டு செல்லும் புனிதப் பணியில் மக்கள் நலன் காப்பகம் ஈடுபட்டுள்ளது.

மக்கள் நலன் காப்பகம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளடங்கலாக 8 மாவட்டங்களில் தன்னார்வ பணியாளர்களின் உதவியுடன் போரினால் பாதிக்கப்பட்டு பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களை இலக்காகக் கொண்டு பல்வேறு வகையான உதவித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள். வாழ்வாதார உதவிகள், இலவச மருத்துவ சேவைகள், திடீர் அனர்த்தங்களுக்கான உதவிகள், குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தும் உதவிகள் என பல்வேறு வகையான உதவித் திட்டங்களை அரச அங்கீகாரம் பெற்று ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாக செயற்படுத்தி வருகின்றனர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம் பெற்ற நீண்ட கால தொடர் யுத்தத்தின் காரணமாக தேவையுடைய மக்களின் எண்ணிக்கை பல மடங்காகப் பெருகியுள்ளது. அரசாங்கம் உதவிகளை தருவதாக அறிவித்தும் எம் மக்களின் வாழ்வில் ஒளி பிறப்பதாக இல்லை.அரசாங்கம் தருபவை தகுந்தவர்களைப் போய்ச் சேருகின்றதா என்பதில் சந்தேகமே எழுகின்றது. ஆகவே தான் எமது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளைச் செய்ய வேண்டியுள்ளது. ஆனால் வழங்கப்பட வேண்டிய உதவு தொகைகளை வழங்குவதற்கு இவ்வகையான தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நிதிப் பற்றாக்குறையினால் அல்லல்படுவதை பல்வேறு சந்தர்ப்பங்களில் அவதானித்திருக்கின்றோம். இருந்தும் கிடைப்பதை வஞ்சகமின்றி கொடுக்கவே காப்பகத்தினர் விரும்புகின்றார்கள்.

எம் மக்களின் மேம்பாடு தொடர்பில் நானும் எனது கட்சியும் அதீத அக்கறை உடையவர்களாக இருக்கின்ற போதிலும் இவர்களுக்கான உதவித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு கட்சி என்ற ரீதியில் எம்மால் முடியாமல் இருந்தது. எனினும் எமது அவாவையும் உதவித் திட்டங்களை வழங்குவதற்கு நாம் எடுக்கின்ற முயற்சிகளையும் அவதானித்த அன்பர் ஒருவர் ஒரு தொகைப் பணத்தை ஆரம்ப உதவித் திட்டங்களுக்காக எமக்கு அனுப்ப முன்வைந்துள்ளார்.

அவர் தந்த நிதியை சமமாகப் பகிரந்தளிப்பதன் மூலமாக 35 அங்கத்தவர்களுக்கு தலா ரூபா 5000 வீதம் உதவித் தொகையை இன்று வழங்கயிருக்கின்றோம். இது மிகவும் சிறிய அளவிலான உதவு தொகையாக இருப்பினும் இந்த உதவித் திட்டங்கள் பற்றி அறிந்து கொள்கின்ற அல்லது கேள்விப்படுகின்ற மேலும் பல அன்பர்கள் தமது உதவிக்கரங்களை நீட்டுவார்கள் என எண்ணுகின்றேன். வெளிநாடுகளில் வாழுகின்ற பல அன்பர்கள் இவ்வாறான வேலைத் திட்டங்களுக்கு நிதிகளை வழங்குவதற்கு விருப்பமுடையவர்களாக இருக்கின்ற போதிலும் தமது உதவு தொகைகள் முறையாகப் பயன்படுத்தப்படுமா என்பதில் சந்தேகம் கொண்டிருக்கின்றார்கள்.

இவர்கள் அனைவருக்கும் நாம் பகிரங்கமாக ஒரு அழைப்பு விடுத்திருந்தோம். உங்களிடமிருந்து கிடைக்கப் பெறுகின்ற நிதி மூலங்கள் அனைத்தும் முறையாக கணக்கு வைக்கப்பட்டு அதன் செலவீனங்கள் அனைத்தும் ஒரு விபரமான அறிக்கையாக தயாரிக்கப்பட்டு உங்களுக்கு அனுப்புவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

இந்த விசேட வேலைத்திட்டத்திற்கென ஒரு ஓய்வு பெற்ற பிரதம கணக்காளர் ஒருவரை கடமையில் அமர்த்தி கணக்கு வழக்குகள் அனைத்தும் மிக நேர்த்தியாக முன்னெடுக்கப்படுகின்றது என்ற செய்தியை உங்களுக்கு குறிப்பாக புலம்பெயர் மக்களுக்கு மகிழ்வுடன் தெரிவிக்கின்றோம். நான் முதலமைச்சராக கடமையேற்ற காலத்தில் இருந்து எனது பதவிக்காலம் முடியும் வரை பல தரப்பட்ட மக்கள் உதவிகளை வழங்கியிருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் உதவு தொகைகளுக்கான செலவு விபரங்கள் முறையாக எம்மால் அனுப்பி வைக்கபட்டிருந்தன. செலவு விபரங்கள் எனக் குறிப்பிடும் போது நீங்கள் தவறாக எண்ணி விடக் கூடாது. உதவிகள் அனைத்தும் தேவையுடைய மக்களுக்கான உதவு தொகைகளாகவே செலவிடப்பட்டுள்ளன. அத் தொகைகளிலிருந்து எமது நிர்வாக செலவுகளுக்கோ, பதில் கடிதங்கள் அனுப்புவதற்கான செலவுகளுக்கோ கூட ஒரு சதமேனும் எம் மக்களின் உதவு தொகைகளில் இருந் துசெலவு செய்யப்படவில்லை என்பதை தெரிவிப்பதில் மகிழ்வடைகின்றேன்.

எமது மக்களை உள்நாட்டு யுத்தம் என்ற பெயரில் அவர்களின் உடமைகளை உறவுகளை அழித்து ஏதிலிகளாக்கிய பொறுப்பை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். எவர் எவர்களின் வீடுகளை அரசபடைகள் அழித்து நிர்மூலமாக்கியதோ அவர்களுக்கான வீடுகள் அம் மக்களுக்கு அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும். அதே போன்று இல்லாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உலக நியமங்களிற்கு ஏற்ப நியாயமாக நடந்து கொள்வதுடன் அவர்களுக்கான இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும். அரசாங்கம் பயங்கரவாதிகளுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டியதில்லை என்ற எண்ணத்தைக் கொண்டிருக்கின்றது.

பயங்கரவாதம் என்ற பதத்தை வைத்து எம் மக்களைப் பயங்கரமாகப் பதம் பார்த்தது அரசாங்கமே. நாம் கேட்ட நியாயமான அரசியல் கோரிக்கைகளை அரசாங்கங்கள் தந்திருந்தால் மக்கள் கிளர்ந்தெழத் தேவை எழுந்திருக்காது. அரச பயங்கரவாதம் எம் மக்களின் வாழ்க்கையை நிர்மூலமாக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டிராது. இவைபற்றியெல்லாம் அரசுடனும் சர்வதேசத்துடனும் பலவழிகளில் பேசிப் பார்த்தாயிற்று. எமது அனைத்து முயற்சிகளும் ஏதோ வகைகளில் மழுங்கடிக்கப்பட்டு வருகின்றன. அரசியல் ரீதியாக நன்மை பெறவே அரசாங்கம் முயற்சிக்கின்றது.அதனால்த்தான் எமது அரசியல்வாதிகளைக் காசு கொடுத்து வாங்க எத்தனித்திருக்கின்றது.

இந் நிலையில் எமது பாதிக்கப்பட்ட உறவுகளை தாங்கிக் கொள்ள அவர்களை பொருளாதார நிலையில் ஓரளவுக்காவது முன்னேற்றிவிட அவர்களின் மன அழுத்தங்களில் இருந்து அவர்களை விடுவிக்க எம்மவர்களே முயற்சிக்க வேண்டும். அதற்கு இதுபோன்ற அமைப்புக்கள் பெரிதும் உதவுகின்றன. மேலும் கடல் கடந்த நாடுகளிலிருந்து கிடைக்கப்பெறுகின்ற உதவிகள் ஒரு முறையான வரைமுறையில் செயற்பட வேண்டும் என்று நாம் கருதுகின்றோம். அதற்கு அனைவரும் கைகோர்த்து முன்வர வேண்டும் எனத் தெரிவிக்கின்றோம். மேலும் மேலும் எமது ஈகையானது பார் முழுதும் இருக்கும் எமது உறவுகளை பாதிக்கப்பட்ட எம் மக்களுடன் தொடர்புபடுத்துவதாக அமையவேண்டும்.

இத் தருணத்தில் ஒரு முக்கியமான விடயத்தை நினைவுபடுத்த வேண்டி உள்ளது. கல்முனை உபபிரதேச செயலகத்தைத் தரம் உயர்த்துவது சம்பந்தமாக நாங்கள் கடந்த ஏப்ரல் 21ந் திகதி மட்டக்களப்பில் இருந்து கல்முனைக்கு நடைபவனி ஆரம்பித்திருந்தோம். சுமார் ஒரு கிலோமீற்றர் நாம் நடந்துபோனபோது பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டோம். அங்கிருக்கும் கிறீஸ்தவ ஆலயத்தில் குண்டுவெடிப்பு அன்று காலை நடந்தது பற்றி அப்போதுதான் அறிந்து கொண்டோம். நடைபவனியை நாம் அன்று கைவிட்டாலும் பாதிக்கப்பட்ட மக்களுடன் இன்று வரையில் தொடர்பில் இருந்து வருகின்றோம். உண்ணாவிரதிகளைக் கண்டு எமது ஆத்மார்த்த ஆதரவினை வெளிப்படுத்தி வருகின்றோம்.

ஆனால் நேற்றைய சம்பவங்கள் எனக்கு அதிர்ச்சியூட்டுகின்றன. அரசாங்கம் காலம் கடத்தினால் உண்ணாவிரதிகளின் உயிருக்கு ஆபத்து விளையக்கூடும் என்று பயப்படுகின்றோம். தமிழ் பிரதேசசெயலகத்தை தரமுயர்த்துவதாக அறிவித்து உண்ணாவிரதிகளின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும். அவர்களின் கோரிக்கை நியாயமானது.

அவர்களைக் காப்பாற்றாது விட்டால் நிலமை மிக மோசமாகி விடும். தமிழ் முஸ்லீம் சிங்கள மக்கள் அடிபட்டு சாகக்கூடிய நிலைமை உருவாகக்கூடும். 21ந் திகதி குண்டுவெடிப்பு பற்றி அசமந்தப் போக்கைக் கடைப்பிடித்த அரசாங்கம் இதிலும் இவ்வாறான போக்கைக் கடைப்பிடிக்கக் கூடாது என்று வலியுறுத்துகின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரச்சனைக்குத் தீர்வு காணாமல் அரசாங்கத்திற்கு மாமாவேலை செய்து கால அவகாசத்தை எடுத்துக் கொடுக்கப் பார்க்கின்றது. அவர்கள் இந்த மாமாவேலை செய்யும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். நிலைமையை அறிய பிரதமர் உடனே குறித்த இடத்திற்குப் போனால் நல்லது என்று கூறி எனது சிற்றுரையை முடித்துக் கொள்கின்றேன்.

நன்றி. வணக்கம்.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முன்னாள் முதலமைச்சர்
வடமாகாணம்
செயலாளர் நாயகம்
தமிழ் மக்கள் கூட்டணி