சிறீலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும்-இரா.சாணக்கியன்

சிறீலங்காவில் நடைபெற்ற மனித உரிமை மீறல் செயற்பாடுகளுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து அனைத்து நாடுகளையும்  ஊக்கப்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டு ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஐநா அனித உரிமைப் பேரவை தொடர்பில் பலரும் பலவாறாக கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்கள். இன்றைய நிலையில்  தமிழர்கள் என்ற வகையில் சிறீலங்காவுக்கு எதிரானதொரு தீர்மானத்தை அனைத்து நாடுகளும் வாக்களித்து கொண்டு வர வேண்டும் என்பதுதான் நாங்கள் முயற்சிக்க வேண்டிய விடயம். இன்று நாங்கள் எடுக்கும் தீர்மானத்தை வலுச்சேர்க்கச் சொல்லி சிறீலங்காவிலும், சர்வதேசத்திலும் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய விடயம். அதிலும் அரசியல் பிரமுகர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்பாடில்லாமல் நடக்கின்றதென்பது மேலும் வரவேற்கத்தக்க விடயம்.

அந்த வகையில் ஐநா மனித உரிமைப் பேரவையில் சிறீலங்காவுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை எவ்வாறாவது நிறைவேற்றியே ஆக வேண்டும். அத்துடன் குறிப்பாகச் சொல்லப் போனால் இது சிறீலங்காவுக்கு எதிரானது என்பதை விட மனித உரிமை மீறலுக்கு எதிரானது என்பதையே நாங்கள் வலியுறுத்துகின்றோம். சிறீலங்காவில் நடைபெற்ற மனித உரிமை மீறல் செயற்பாடுகளுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக நாங்கள் முயற்சிக்க வேண்டும்” என்றார்.