சிறீலங்காவுக்கு எதிராக புதிய தீர்மானம் – அமெரிக்கா முயற்சி

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடரில் சிறீலங்காவுக்கு எதிராக புதிய தீர்மானம் ஒன்றை கொண்டுவருவதற்கு அமெரிக்கா முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னர் முன்வைக்கப்பட்ட 30/1 தீர்மானத்தில் இருந்து சிறீலங்கா அரசு விலகுவதாக அறிவித்த பின்னர், புதிய தீர்மானம் தொடர்பில் அமெரிக்காவும், பிரித்தானியாவும் இணைந்து செயற்பட்டிருந்தன. முன்னைய தீர்மானத்தை 2015 ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த சிறீலங்கா அரசு ஏற்றுக்கொண்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து 34/1 மற்றும் 40/1 என்ற இரு தீர்மானங்கள் முன்னைய தீர்மானத்தை வலுப்படுத்துமுகமாக கொண்டுவரப்பட்டிருந்தன. போரின் போது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கான நீதி கோரல் மற்றும் நல்லிணக்கபாடுகள் தொடர்பாகவே தீர்மானம் கொண்டுவரப்பட்டிருந்தது.

இந்த தீர்மானம் தொடர்பில் சிறீலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலைனா தெப்லிஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரனை இந்த வாரம் திடீரென சந்தித்து பேசியுள்ளார்.

இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவு தருவதாக சுமந்திரன் தெரிவித்துள்ள போதும், இந்தத் தீர்மானத்தில் இனப்பிரச்சனைக்கான தீர்வும் உள்ளடக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சி.வி விக்னேஸ்வரன் ஆகியோரிடமும் தெரிவித்துள்ளார்.

ஆனால் முன்னைய தீர்மானங்களை சிறீலங்கா அரசு நடைமுறைப்படுத்த தவறியுள்ளதால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்களுக்கான நீதிகோரி சிறீலங்கா அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டவர்கள் அவர்கள்.