சிறிலங்காவில் உருவாகும் தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபை – அச்சத்தில் சிறுபான்மை இனம்

சிறிலங்காவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபை ஒன்றை ஏற்படுத்த உள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், பாதுகாப்பு  அமைச்சர் மற்றும் முக்கியஸ்தர்கள் இந்த சபையில் அடங்குவர் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த ஜனாதிபதி இது பற்றி கருத்துத் தெரிவித்தார். இந்த ஒன்றுகூடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, மகிந்த அமரவீர, விஜேதாச ராஜபக்ஸ, ச.வியாழேந்திரன், டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய ஜனாதிபதி நாட்டின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டே தேசிய பாதுகாப்பு சபைக்கும் அப்பால், தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபையை அமைக்கவுள்ளதாக  குறிப்பிட்டார்.

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் ஏற்றுக்கொண்ட தீர்மானத்திற்கு எதிராக பயங்கரவாதச் தடுப்புச் சட்டத்தை தற்போதும் பயன்படுத்திவரும் சிறீலங்கா அரசு மேலதிகமாக தேசிய பாதுகாப்பு சபையை அமைப்பது என்பது எதிர்வரும் காலங்களில் மிக அதிகளவான மனித உரிமை மீறல்கள் சிறீலங்காவில் இடம்பெற வாய்புக்கள் உள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, அண்மையில் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் இடமாற்றங்களை உடனடியாக இரத்துச் செய்யுமாறு கிழக்கு ஆளுநரை ஜனாதிபதி பணித்துள்ளார்.