சிரியா மீதான தடைகளை தளர்த்த வேண்டும்: ஐநாவிடம் இந்தியா வலியுறுத்தல்

கொரோனா பாதிப்பு மக்களிடையேயான மனிதாபிமானத்தை வெகுவாக கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த நெருக்கடியில் சிரிய மக்களுக்கு உதவும் வகையில் அந்நாட்டு மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளைத் தளர்த்த வேண்டும் என ஐநா பாதுகாப்பு கூட்டத்தொடரில்  இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஐநா பாதுகாப்பு கூட்டத்தொடரின் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியான டி.எஸ்.திருமூர்த்தி சிரியா மற்றும் அங்கு நடந்துவரும் போர் தொடர்பான மாநாட்டில் பேசுகையில், ‘‘கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிரியாவில் போர் நடந்துவருகிறது.

தீவிரவாதக் குழுக்கள் தாக்குதல் நடத்துவதும், அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் போன்றவை பதில் தாக்குதல் நடத்துவதுமென தொடர்ந்து அங்கு போர்ச்சூழல் நீடித்துவருகிறது.

போர் முடிவுக்கு வருவதற்கான எந்த சாத்தியங்களும் தெரிய வில்லை. இத்தனை ஆண்டுகால போரில் அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மக்களின் இந்த நெருக்கடி நிலையை மேலும் பல மடங்காக அதிகரித்திருக்கிறது கரோனா வைரஸ் தொற்று. சிரியாவின் மக்களுக்கு சர்வதேச நாடுகள் இணைந்து உதவி செய்ய வேண்டிய தருணம் இது. எனவே சிரியா மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளைத் தளர்த்த வேண்டும்’’ என்று கூறினார்.

மேலும் சிரியாவில் நடந்துவரும் தீவிரவாத தாக்குதல்களுக்கும் இந்தியா கண்டனங்களைத் தெரிவிக்கிறது.

மேலும் சிரியாவுக்கு இந்தியாவின் தரப்பிலிருந்து உணவு, மருந்து வழங்குவதோடு, சிரிய மக்களின் மேம்பாட்டுக்குத் தேவையான உதவியையும் மனிதவள மேம்பாட்டு உதவியையும் வழங்க எப்போதும் தயாராக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.