சித்திரவதை செய்யப் பட்டவர்களின் புகைப் படங்களை வெளியிட்டு இராணுவம் எச்சரிக்கை

கடந்த பிப்ரவரி மாதம் 1ம் திகதி மியான்மரை  இராணுவம் தனது ஆட்சியின் கீழ் கொண்டவந்ததைத் தொடர்ந்து அங்கு மக்கள் ஜனநாயக ஆட்சியை நிலைநிறுத்தக் கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்கள் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் 700க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 45க்கும் மேற்பட்டவர்கள் சிறுவர்கள் என்று மியான்மரில் செயல்பட்டுவரும் ஏ.ஏ.பி.பி. என்ற மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், இராணுவ நடவடிக்கைகளுக்கு அஞ்சி 3 ஆயிரத்து 229 பேர் நாட்டை விட்டு வெளியேற்றி உள்ளதாகவும் ஏ.ஏ.பி.பி. என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

 போராட்டக்காரர்களை கைது செய்யும் இராணுவத்தினர் அவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை நடத்தியுள்ளதாக  குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களில் 6 இளைஞர்களின் புகைப்படங்களை மியான்மர் இராணுவத்தின் செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 4 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் இராணுவத்தால் கொடூர தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். அந்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் முகங்கள் கடுமையாக தாக்கப்பட்டு இரத்தக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுவர்களுக்கு இது தான் நிலைமை என எச்சரிக்கும் வகையில் மியான்மர் இராணுவம் இந்த இளைஞர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

மியான்மர் இராணுவத்தால் நடத்தப்பட்ட மனிதத்தன்மையற்ற தாக்குதலால் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் புகைப்படங்கள் வெளியாகி அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.