சர்வதேசம் மீண்டும் தோல்வியடைந்துவிடக் கூடாது – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

 

இலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேசம், முன்னர் தோல்வி அடைந்ததைப்போல மீண்டும் தோல்வியடைந்துவிடக்கூடாது என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது மாநாட்டில் தமது நிலைப்பாட்டை வெளியிட்ட மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரதிநிதி இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்-

“யுத்தம் நிறைவடைந்து 11 ஆண்டுகள் கடந்துவிட்டன. யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு தரப்பினரும் மேற்கொண்ட யுத்தக் குற்றங்களுக்கு இன்னும் பொறுப்பு கூறப்படவில்லை. இலங்கை அரசாங்கம், தம்மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக மறுதலித்து வருகிறது.

பல்வேறு ஆணைக்குழுக்களை அரசாங்கம் நியமித்தாலும் அவை அதிகாரம் குறைந்தனவாகவும், உறுதி மொழிகளை நிறைவேற்றுவதற்கான மனத்திடம் இல்லாத நிலைமையும் காணப்படுகின்றன. போர்க்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளவர்கள் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள்.

படுகொலைகள் தொடர்பாக இலங்கையில் தண்டனை விதிக்கப்பட்ட ஒரேயொரு நபரும் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளார். தற்போது மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் நீதி கோரி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் கூட அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

இந்தநிலையில் மனித உரிமைகள் ஆணையாளர் தமது அறிக்கையில் பரிந்துரைத்தபடி, இலங்கையை மாற்று சர்வதேச பொறிமுறைக்கு பாரப்படுத்த, மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.