சர்ச்சைக்குரிய இராணுவ அதிகாரி இராணுவத் தளபதியாகும் வாய்ப்பு

சிறிலங்கா இராணுவத்தில் பெரும் சர்ச்சைக்குரிய இராணுவ அதிகாரியாக கருதப்படுபவர் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஆவார். இவரின் பதவிக் காலம் முடிவடையும் தறுவாயில், அவரின் பதவிக் காலத்தினை சிறிலங்கா ஜனாதிபதி, நீடிப்புச் செய்துள்ளார். இதனை வைத்துப் பார்க்கும் போது, இவருக்கு இராணுவத் தளபதி பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதா என எண்ணத் தோன்றுகின்றது.

இராணுவத்தின் இரண்டாம் நிலை பதவியான இராணுவத் தலைமை அதகாரி என்னும் பதவியில் உள்ள சவேந்திர சில்வா, ஜுன் 21ஆம் திகதி 55 வயதை எட்டியதால் ஓய்வு பெறவிருந்தார், ஆனால் இதற்கு முன்னதாக 18ஆம் திகதி சிறிலங்கா ஜனாதிபதி அவருக்கு பதவி நீடிப்பு செய்திருந்தார். அதற்கமைவாக 2019 டிசம்பர் வரை அவர் பதவியிலிருப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போதைய இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவின் பதவிக்காலம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 19ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. இவர் ஓய்வு பெற்றால், தற்போது இரண்டாம் நிலையிலுள்ள சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 7ஆம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் ஜனாதிபதியாக கோதபயா ராஜபக்ஸ தெரிவானால், நிச்சயமாக சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாவது உறுதியாகும் என்று அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.