சனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு மேற்குலகம் இன்னும் அவசியமா?

ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைமையில், மேற்கு ஐரோப்பிய நாடுகளும், வட அமெரிக்காவும் பொருண்மியம், இராணுவம் மற்றும் பண்பாடு தொடர்பான விடயங்களில் பல நூற்றாண்டுகளாகப் பூகோளரீதியான ஆதிக்கத்தைச் செலுத்தி வந்திருக்கின்றன.

தமது விருப்பங்களுக்கும் ஈடுபாடுகளுக்கும் ஏற்றவகையில், உலக ஒழுங்கை மேற்குலகம் நெறிப்படுத்தியதோடு, மனித சாதனையின் உச்சநிலையை தாம் அடைந்து விட்டதான ஒரு பிரமையை அவை ஏற்படுத்தி வந்திருக்கின்றன. ‘அபிவிருத்தியடைந்த உலகு’ என்று இந்த நாடுகள், தம்மை மார்தட்டியழைத்ததோடு ‘அபிவிருத்தியடையாத நாடுகளில்’ வாழுகின்ற மக்கள் அறிவொளியை ஏற்கனவே கண்டடைந்துவிட்ட தம்மை, மாதிரியாகக் கருதி, தம்மைப் பின்பற்றி நடக்க வேண்டும் என எதிர்பார்த்தன. இப்படிப்பட்ட உயர்வு, தாழ்வுப் படிநிலைகளை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் உலகை அவை கட்டமைப்பும் செய்தன.

உண்மையில் அறிவொளிக்காலத்தில் (enlightenment) முன்வைக்கப்பட்ட விடயங்கள் பெரும்பாலும் கட்டுக்கதைகளுக்கு ஒப்பானவையே. மற்றைய மனிதர்களை அடக்குமுறைக்குள்ளாக்கி அவர்களைச் சுரண்டி, அவர்களது சமூகங்களை அழித்தொழித்து, மோசமான முறையில் ஈட்டப்பட்ட இலாபங்களை மறைப்பதற்காக கையாளப்பட்ட ஓர் உபாயமே இதுவாகும். பூகோள ரீதியாகத் தாம் உருவாக்கிய பெருந்தோட்டங்களை தமது மாளிகைகளின் தாழ்வாரங்களில் இருந்து பார்த்துக்கொண்டு, அடுத்தவரின் செல்வங்களை தமதாக்கி கொழுத்துப்போயிருக்கும் இவர்கள், இனரீதியாகவும், அறநெறி ரீதியாகவும் மற்ற எல்லோரையும் விட தாமே உயர்வானவர்கள் என்று எண்ணத் தலைப்பட்டார்கள்.

தம்மை எப்போதும் உயர்வாகச் சித்தரித்த இவர்களின் இப்பேற்பட்ட சித்தரிப்புக்குப் பின்னால் இருக்கும் வெளிவேடத் தன்மையை இதுவரை மறைத்திருந்த திரை கடந்த நான்கு வருடங்களில் மறைந்து விட்டது. வரலாற்றின் கடைசிக் கட்டத்தைத் தாம் தொட்டுவிட்டதாகவும் சனநாயகம், தாராளவாதம், முதலாளித்துவம் போன்றவற்றின் நம்பிக்கை ஒளியாக தாம் விளங்குவதாகவும் கடந்த சில ஆண்டுகள் வரை தம்மைப் பறைசாற்றி, நல்லாட்சி, பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை போன்ற நற்செய்திகளை ஏனைய வசதியற்ற ஊழல்கள் நிறைந்த மூன்றாம் உலக நாடுகளுக்குப் போதித்த இந்த நாடுகள், தற்போது சர்வாதிகாரத் தன்மை நிறைந்த ஆட்சிக்கும் வலதுசாரித் தன்மையின் எழுச்சிக்குள்ளும் வீழ்ந்து விட்டன. தாமே உருவாக்கிய போர்கள் மூலமும் தாம் மேற்கொண்ட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் பொருண்மிய தடைகள் மூலமும் சனநாயக ஆட்சியை இவர்கள் அமுலுக்குக் கொண்டுவருகின்ற நாட்கள் எல்லாம் இப்போது கடந்து போய்விட்டன. எப்படிக் கென்யாவிலும் ஏனைய நாடுகளிலும் சனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டதோ அது போல இன்று அமெரிக்காவிலும் ஏன் பிரித்தானியாவிலும் கூட சனநாயகத்துக்கு ஆபத்து இருக்கத் தான் செய்கிறது.

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பரப்புரையில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது போட்டியாளர் ஜோ பைடன் ஆகியோருக்கு இடையேயான மோசமான, அதே நேரத்தில் நகைச்சுவையான விவாதத்தைத் தொடர்ந்து, தன்னை மாத்திரம் முன்னிலைப்படுத்தும் (narcissistic) ஒரு வல்லரசை, உலகம் மிகவும் அருகிருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது ஒரு அழகான காட்சியாகத் தோன்றவில்லை. வீதிகளில் வன்முறைகள் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றன. கொரோனா நுண்ணுயிரியினால் கால் மில்லியன் மக்கள் ஏற்கனவே இறந்து விட்டார்கள், பொருண்மியம் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது, தேர்தல் மற்றும் அதன் நிறுவனங்கள் தொடர்பான நம்பகத்தன்மை கேள்விக்குரியதாக மாற்றப்பட்டிருக்கின்றது, அதன் தலைவரைப் போற்றிப்புகழ்ந்து வழிபடுகின்ற ஒரு பண்பாடு தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது, இவைகள் எல்லாவற்றையும் பார்க்கும் போது, ஏனைய நாடுகளில் ஒரு சர்வாதிகார அதிபரின் ஆட்சிக்குள் அகப்பட்டுத் துன்புற்றவர்களின் வாழ்க்கையே தற்போது நினைவுக்கு வருகிறது.

“எமது நாடு இப்போது ஒரு சனநாயக நாடே அல்ல“ என்று உப அதிபருக்கான விவாதத்தைத் தொடர்ந்து யூற்றா (Utah) மாநிலத்தைச் சார்ந்த குடியரசுக் கட்சியின் செனற்றரான மைக் லீ (Mike Lee) தெரிவித்தார். மிச்சிக்கன் மாநிலத்தின், சனநாயக்கட்சியைச் சேர்ந்த ஆளுநரைக் கடத்தி, அவரது ஆட்சியைக் கவிழ்க்க மேற்கொள்ளப்பட்ட சதிமுயற்சியைப் பார்க்கும் போது, மிக மோசமான ஆட்சி நடைபெறும் நாடுகளில் மட்டுமே நடைபெற்று வந்த நிகழ்வுகள் அமெரிக்காவிலும் நடைபெறுகிறதா என எண்ணத் தோன்றுகிறது.

இதே விதமாக குளறுபடிகள் நிறைந்த ஆட்சியை மேற்கொள்ளல், சர்வாதிகாரத் தன்மை, ஊழல்கள், நிறுவனங்கள் தமது வழமையான தரத்தை இழத்தல் போன்ற விடயங்களை ஐக்கிய இராச்சியத்திலும் வேறு சில ஐரோப்பிய நாடுகளிலும் வெவ்வேறு அளவுகளில் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால் சனநாயக முறைமைகளை விட்டு விலகினார்கள் என்ற குற்றச்சாட்டில் பல நாடுகளை மேற்குலகம் தண்டித்திருக்கிறது. இதே நிலையை மேற்குலக நாடுகளும் சந்திக்கும் எனக் கருத முடியாது. இந்த நாடுகள் மீது எந்த விதமான தடைகளும் விதிக்கப்படாது, சொத்துகள் முடக்கப்படாது, அதன் ஆட்சியாளர்கள் மீது பயணத்தடைகள் விதிக்கப்படாது, இவைகளைக் கண்டித்து ஐக்கிய நாடுகளில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படமாட்டாது. பன்னாட்டு நீதிமன்றுகளில் இவற்றுக்கு எதிராக வழக்குகளும் தொடுக்கப்படமாட்டாது. அமெரிக்க தேர்தலின் போது ஏற்படக்கூடிய கருத்து முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காக உலகின் மரியாதைக்குரிய தலைவர்கள் நடுநிலைமை வகிக்க அங்கு செல்வார்கள் என்றும் எதிர்பார்க்க முடியாது.

மேற்குலகம் இதுவரை காலமும் அனுபவித்து வந்த சிறப்பு நிலையில் வீழ்ச்சி ஏற்படும் போது, அதனால் உலகின் ஏனைய பாகங்களில் சனநாயகத்துக்கு பாதிப்பான விளைவுகள் ஏற்படக்கூடிய ஆபத்து இருக்கிறது. மேற்குலகைப் பொறுத்தவரையில், அதன் தவறுகளும் வெளிவேடத் தன்மைகளும் இருந்தாலும், ஆட்சியில் சனநாயக விழுமியங்களை உட்புகுத்த மேற்குலகின் தூதரகங்களும் அரசசார்பற்ற நிறுவனங்களும் குறிப்பிடத்தக்களவு பங்கை ஆற்றியிருக்கின்றன. இக்காரணத்தினால், ஆபிரிக்காவின் பெரும்பாலான நாடுகளில், சர்வாதிகார அரசுகள்,  மனித உரிமைகள், சனநாயகம் என்பவற்றை உலகம் முழுவதற்குமான விழுமியங்களாகப் பார்க்காது, அவற்றை மேற்குலகிற்குரியவையாகவே பார்க்கின்றன. இப்படியான நாடுகளில் நடைபெறும் நிகழ்வுகளின் காரணமாக அவர்களது சனநாயக நம்பகத்தன்மை சேதப்படுத்தப்பட்டிருக்கும். பின்புலத்தில், ஏனைய நாடுகளில் சனநாயகத்துக்கு ஆதரவான இயக்கங்களை ஆதரிக்கும் மேற்குலகின் செயற்பாடுகளின் மீது நம்பிக்கை குறையும் ஆபத்தும் இருக்கிறது.

டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), போறிஸ் ஜோண்சன் (Boris Johnson) போன்றவர்களால் ஏற்படுத்தப்படும் முன்னுதாரணங்களின் காரணமாக, சர்வாதிகாரத்தைக் கைக்கொள்ளும் ஆட்சியாளர்கள் மேற்குலகத்தினால் தமக்கு எந்தவிதமான பிரச்சினையோ தடைகளோ  வரப்போவதில்லை என்ற எண்ணத்துடன் தமது அடக்குமுறைகளை இன்னும் அதிகமாகத் தொடரக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

ஒரு புறத்திலே இச்சூழ்நிலைகளால் உலகம் பல ஆபத்துகளை எதிர்நோக்கியிருந்தாலும் கூட, மறுபுறத்தில் மேற்குலகின் பிடியிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புகளும் உலக நாடுகளுக்கு இருக்கத்தான் செய்கின்றன. உதாரணமாக, ஆபிரிக்காவை எடுத்துக்கொண்டால், சர்வாதிகாரிகளின் கூட்டம்  என்ற பெயரிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காக இராணுவ சதிப்புரட்சிகள் மூலம் ஆட்சியைக் கவிழ்க்கின்ற முயற்சிகளுக்கு எதிராகவும், தேர்தல் முடிவுகளை மதிக்காது செயற்படும் ஆட்சியாளர்களுக்கு எதிராகவும், ஆபிரிக்க ஒன்றியம் அண்மைக் காலமாக காத்திரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சிவில் சமூகக் குழுக்களும் வேறு இடங்களில் தங்களுக்கான ஆதரவைத் தேடவேண்டிய கட்டாயத்துக்குள் தற்போது தள்ளப்பட்டிருக்கின்றன. கென்யா போன்ற நாடுகளில் முப்பது வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலையை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, சீர்திருத்தச் செயற்பாடுகளை ஆதரிக்கும் மேற்குலக நாடுகளின் தூதரங்களின் செயற்பாடுகள் இப்போது கணிசமான அளவு குறைந்திருப்பதைக் காணலாம். ஆனால் இந்த நாடுகளிலுள்ள இந்தக் குழுக்கள் தமது செயற்பாடுகளுக்கான நிதியுதவியை மேற்குலக நாடுகளிடமிருந்தே இன்னும் எதிர்பார்க்கின்றன. இதன் காரணமாக இக்குழுக்கள் மேற்குலக நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே செயற்படுகின்றன என்ற காரணத்தைக்காட்டி, அவ்வரசுகள் அவற்றைத் தடைசெய்யவும் அவற்றுக்கெதிரான சட்டங்களை இறுக்குவதையும் காணக்கூடியதாகவிருக்கிறது.

கென்யாவைப் பொறுத்தவரையில், பணப்பரிமாற்றச் செயலிகளுடன் இணைந்து, சமூக வலைத்தளங்கள், உள்நாட்டில் நிதிசேகரிக்கும் முக்கிய தளங்கள் என்ற பரிமாணத்தைப் பெற்றிருக்கின்றன. இந்த நாடுகளின் அரசுகள் கூட இப்படிப்பட்ட தளங்களிலிருந்து நிதியைப் கூசாமல் பெற்றுவருகின்றன. அரசுகளின் ஆட்சிச் செயற்பாடுகளில் பணிபுரிகின்ற அரச சார்பற்ற நிறுவனங்களைப் பொறுத்தவரையில், உள்ளுர் நிதிவளங்களில் இவை தங்கியிருக்கும் போது, மோசமான ஆட்சியை மேற்கொள்ளுகின்ற அரசுகளினால் இவற்றுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறைகின்ற அதே நேரத்தில், பொதுமக்களின் ஆதரவை இவர்கள் அதிகமாகப் பெறுவதன் காரணமாக, இவற்றின் செல்வாக்கும் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. குறிப்பிட்ட நாடுகளில் உள்ளவர்களே சீர்திருத்தங்களுக்கான உரிமையைக் கோரக்கூடிய வாய்ப்பை இது ஏற்படுத்திக் கொடுக்கும். சனநாயகத்தின் காவல்காரனாக தம்மை ஏற்படுத்திய மேற்குலகில், சூரியன் மறைந்து கொண்டிருக்கும் இக்காலப் பகுதியில்,. இப்படிப்பட்ட விடயங்கள் நல்ல விடயங்களாகவே பார்க்கப்படுகின்றன.

நன்றி: அல்ஜசீரா

-தமிழில் ஜெயந்திரன்-