சஜித் தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு: சம்பிக்க, மனோ, ஹக்கீம் அறிவிப்பு

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான கூட்டணியில் இணைந்து கொள்வதாக ஜாதிக ஹெல உறுமய, தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.

மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் மாறாக பயணிக்கும் தற்போதைய அரசுக்கு எதிராகப் பாரிய மக்கள் சக்தியை உருவாக்கும் பொறுப்பு தமக்கு வழங்கப்பட்டுள்ளதாக இந்தக் கூட்டணியின் கட்சிகள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மக்களின் அபிலாஷைகளை உறுதிப்படுத்தும் அரசொன்றை உருவாக்கும் உன்னத முயற்சிக்கு பங்களிப்புச்செய்வதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்தவருடம் ஏப்ரல் மாதமளவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலுக்காக சஜித் தலைமையில் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அங்கீகாரம் வழங்கியிருந்தது. இதனை அடுத்து அந்தக் கூட்டணிக்கு பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவையும் நியமிக்க கடந்த திங்கட்கிழமை கட்சியின் செயற்குழு தீர்மானித்திருந்தது.

இந்த கூட்டணி குறித்து மூன்று பங்காளிக் கட்சித் தலைவர்களால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

“தீர்மானகரமான பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பதவியேற்றுள்ள இன்றைய அரசு வெகு சீக்கிரமாகவே மக்களின் நம்பிக்கையை இழந்து வருவதுடன், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக அரசியல் பழி வாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

நாம் சமகாலத்தில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் அதனூடாக பல்வேறு வெற்றிகளையும் பெற்றுள்ளோம். இந்த பின்னணியில் எதிர்வரும் தேர்தலை புதிய ஒரு கூட்டணியாக எதிர்கொள்ள ஐதேகவின் செயற்குழு தீர்மானித்து, அந்த கூட்டணியின் தலைமை, கூட்டணி பொது செயலாளரை தீர்மானிக்கும் அதிகாரம், பிரதமர் வேட்பாளர், வேட்பாளர் தெரிவு குழு தலைமை ஆகியவற்றை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கிட முடிவுகளை மேற்கொண்டுள்ளது.

இந்த முடிவுகளை எம் கவனத்தில் எடுத்து, சஜித் பிரேமதாசவின் தலைமையில் உதயமாகும் புதிய பரந்துபட்ட கூட்டணியில் எமது கட்சிகள் இணைந்து செயற்படுவதை நாம் உறுதி செய்கிறோம்.

அதன்படி, ஜாதிக ஹெல உறுமய, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சிகள் கரங்கோர்த்துக்கொண்டு, ஐக்கிய மக்கள் சக்தி என்ற புதிய கூட்டணியில் செயற்பட உள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.