சஜித் அணியின் 10 – 15 பேர் ரணிலுடன் இணைவார்கள் – ஹரின் பெர்ணான்டோ

harin சஜித் அணியின் 10 - 15 பேர் ரணிலுடன் இணைவார்கள் - ஹரின் பெர்ணான்டோஜனாதிபதி தேர்தல் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒருமாதத்துக்குள்  உறுதியான தீர்மானத்தை அறிவிப்பார். அவர் நிச்சயம் போட்டியிடுவார். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் 10 அல்லது 15 உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் ஒன்றிணைவார்கள் என சுற்றுலாத்துறை மற்றும் காணி விவகாரங்கள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து  தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதமாசவுக்கும், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் பகிரங்க விவாதம் இடம்பெறும் போது அன்றைய தினம் விடுமுறை வழங்க வேண்டும். இவ்விருவரின் விவாதத்தை நாட்டு மக்கள் பொறுமையாக அமர்ந்து பார்க்க வேண்டும்.விவாதத்தைப் பார்த்ததன் பின்னர் நாட்டு மக்கள் எவரும் இவ்விருவருக்கும் வாக்களிக்கமாட்டார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவார்.இன்னும் ஒருமாத காலத்துக்குள் ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை அறிவிப்பார்.தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி உறுதியாக உள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதும் ஐக்கிய தேசியக் கட்சியின் 10 அல்லது 15 உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் ஒன்றிணைவார்கள் என்பதை உறுதியாகக் குறிப்பிடலாம்.நான் குறிப்பிடுவது நடைப்பெறாவிடின் என்னைக் கேலி செய்யலாம்.

பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை பலவீனப்படுத்துவதற்காகவே எதிர்க்கட்சித் தலைவர் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை ஐக்கிய மக்கள் சக்திக்குள் இணைத்துக் கொள்கிறார்.கட்சியை ஸ்தாபிப்பதற்கு சரத் பொன்சேகா அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவரின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளினால் ஐக்கிய மக்கள் சக்தி முழுமையாக இல்லாதொழியும் என்றும் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.