இலங்கை நிலை தொடா்பில் ஐ.நா. வெளியிட்ட அறிக்கை பக்கச்சாா்பானது – ஜெனீவாவுக்கான துாதுவா் சீற்றம்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளிற்கான ஆணையாளர் அலுவலகம் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை குறைபாடுடையது, பக்கச்சார்பானது, சுயமாக உருவாக்கியது என ஜெனீவாவிற்கான  இலங்கை தூதுவர் ஹிமாலி அருணதிலக குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வோல்கெர் டேர்க்கிற்கு அறிக்கை குறித்து கடிதமொன்றை எழுதியுள்ள கடிதத்தில் இந்தக் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணை எதுவும் இல்லாத நிலையில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இலங்கை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளதை தேவையற்ற ஒரு தலைப்பட்சமான முயற்சி என இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நிலைப்பாட்டினை கருத்தில் கொள்ளாமல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இது என ஜெனீவாவிற்கான இலங்கை தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த அறிக்கையை மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டமைக்கான நோக்கம் என்னவென கேள்வி எழுப்பியுள்ளார் என வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை தவறானது என தனது கடிதத்தில் தெரிவித்துள்ள ஜெனீவாவிற்கான  இலங்கை தூதுவர் பக்கச்சார்பின்மை புறநிலை மற்றும் தேர்ந்தெடுக்காமை ஆகிய கொள்கைகளின் அடிப்படைகளிற்கு இந்த அறிக்கை முரணாணது என தெரிவித்துள்ளார் என வெளிவிவகார அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும்  இலங்கையின் ஆயுதமோதல் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் பூர்த்தியாகிய தருணத்தில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது எனது தனது கடிதத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.