சகல ஜனாதிபதி ​வேட்பாளர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துவோம் – கூட்டமைப்பு

சகல ஜனாதிபதி ​வேட்பாளர்களுடனும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தும். அரசியல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு உட்பட நீண்டகாலமாக எமது மக்கள் முன்வைத்து வரும் நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் உறுதியான வாக்குறுதிகளை யார் வழங்குகிறார்கள் என்பதை  பொறுத்தே யாருக்கு ஆதரவு வழங்குவது என முடிவு செய்வதாக தமிழ்  ​தேசிய கூட்டமைப்பு தெரிவித்தது.சிறிலங்கா பிரதமருக்கும் த.தே.கூ பிற்கும் இடையில் நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே த.தே.கூ மேற்கண்டவாறு குறிப்பிட்டது.

இதேவேளை புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க தேவையான  சகல வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து ஒரு வருட காலத்தினுள் புதிய அரசியலமைப்பை  உருவாக்க நடவடிக்கை எடுப்பதாக  சிறிலங்கா பிரதமர் உறுதியளித்ததாக அறிய வருகிறது.

த.தே.கூ தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் நேற்று பிற்பகல் 3மணி அளவில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பாராளுமன்றத்திலுள்ள பிரதமரின்  அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.  இந்த சந்திப்பு  தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறுகையில்,

ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் யார்? என்பது  எமது பிரச்சினை அல்ல. அது அவர்களுடைய பிரச்சினையாகும். ஆனால் அந்த வேட்பாளர் தேசிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு  வழங்க முன்வைக்கும் வாக்குறுதி என்ன என்பதை முன்கூட்டி வெளியிட வேண்டும்.

புதிய அரசியலமைப்பு , நீண்டகால பிரச்சினைக்கான உறுதியான தீர்வு என்பன தொடர்பில் அவரின் நிலைப்பாடு எமக்கு முக்கியமானதாகும். ஐ. தே. கவின் முடிவு பற்றி எமக்கு தெரிவித்தால்  எமது அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.இது  தொடர்பில் நாம் பிரதமரிடம் எடுத்துரைத்தோம் என்றார்.

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை ஐ.தே கட்சியும் அதன் பங்காளிக் கட்சிகளுமே தீர்மானிக்க வேண்டும். இதில் எமது ஆதரவுகள் இருக்க வேண்டும் என்பது முக்கியமில்லை. ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் யார் போட்டியிட்டாலும் அவருக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பதற்கு முன்னர் அவருடன்  பேச்சுவார்த்தை நடத்துவோம்.
ஏனையே ஜனாதிபதி வேட்பாளர்களுடனும் நாம் பேச
திட்டமிட்டிருக்கிறோம்.  தமிழ் மக்கள் நீண்டகாலமாக முகங்கொடுத்துவரும்  அரசியல் பிரச்சினைகளுக்கு  உறுதியான தீர்வு வழங்கப்பட  வேண்டும். புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். நீண்டகாலமாக எமது மக்கள் முன்வைத்து வரும்  நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும்.
இந்த பிரச்சினைகள் தொடர்பில்  எமக்கு உறுதியான வாக்குறுதிகளை யார் வழங்குகிறார்கள் என்பதை  பொறுத்தே யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் முடிவெடுப்பபோம்.இது தொடர்பில் பிரதமருக்கு தெளிவாக எடுத்துரைத்தோம்.  தான்  இறுதியாக யாழ் விஜயத்தில் மக்களை சந்தித்தபோது தான் என்ன நிலைப்பாட்டில் இருந்து கருத்துக்களை முன்வைத்தேனோ அதே நிலைப்பாட்டில்  தொடர்ந்து இருப்பதாக பிரதமர் எம்மிடம் கூறினார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்க சகல வித முயற்சிகளையும்  முழுமையாக முன்னெடுத்ததாகவும் அவர் கூறினார். கடந்த நான்கு ஆண்டுகளில் அரசியலமைப்பை மாற்றுவதற்கு முயற்சிகள் முன்னெடுத்தாலும்  இறுதிக்கட்ட  பணிகளை பூர்த்தி செய்ய முடியவில்லை. ஒரு வருட காலத்தில் சகல வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து புதிய அரசியலமைப்பை பூர்த்தி செய்வதே  தனது நிலைப்பாடு எனவும் அவர் த.தே.கூ பிரதிநிதிகளிடம் கூறியுள்ளார்.அதற்கான ஒத்துழைப்புகளை த.தே.கூவிடம்  எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த சந்திப்பில் டொக்டர் சிவமோகன் தவிர்ந்த 13த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டாதாக அறிய வருகிறது.