கோவிட் 19 எந்தளவுக்கு பேரழிவுகளை ஏற்படுதும்  என்பதற்கு இந்தியா உதாரணம் -WHO

கோவிட் 19 வைரஸால் எந்தளவுக்கு பேரழிவுகளை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இந்தியா தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலை உணர்த்துவதாக   உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் உலகில் முன்னொருபோதும் இல்லாத வகையில் 3 இலட்சத்து 46 ஆயிரத்து 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதே காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 2,624 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “இந்தியாவில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் தொகை மற்றும் கொரோனா மரணங்கள் குறித்து உலக சுகாதார அமைப்பு ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.

இந்தியாவின் நிலைமை சிக்கலானது என்பதை நாங்கள் அறிவோம். இந்த தொற்று நோயைச் சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள் தேவை. மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்கவும் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கவும் இந்திய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை நான் வரவேற்கிறேன்.

தங்களது அன்புக்குரியவர்களை கொரோனாவுக்குப் பலிகொடுத்த இந்தியர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் இந்திய அரசோடு பக்கபலமாக உலக சுகாதார அமைப்பு இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.