கோவிட்டின் மரபணு மாற்றம் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்துமா? – ஆர்த்திகன்

இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து பிரித்தானியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸானது, பரம்பரை மூலக்கூறு மாற்றமடைந்த புதிய வகையாயானது எனக் கண்டறியப்பட்ட பின்னர், பிரித்தானியாவுடனான பயணத் தொடர்புகளை 50 இற்கும் மேற்பட்ட நாடுகள் இடைநிறுத்தியிருந்தன.

ஆனாலும் பல ஐரோப்பிய நாடுகள் உட்பட யப்பான், இந்தியா, கனடா போன்ற நாடுகளிலும் இந்தப் புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளது. அதாவது முடக்க நிலையில் இருந்து தாம் மீள முடியாதோ என்ற அச்சம் தான் அது.

ஆனால் தமது தடுப்பு மருந்து புதிய வைரஸிற்கு எதிராகவும் செயற்படும் தகைமை வாய்ந்தது என, பைசர் மற்றும் பையோ என்ரெக் நிறுவனங்கள் தயாரித்து தற்போது 45 நாடுகளுக்கு மேல் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு மருந்து தொடர்பில் கருத்து தெரிவித்த பையோ என்ரெக்கின் தலைவர் ஊகொர் சகீட் தெரிவித்துள்ளார். அதற்கு அவர் தெரிவித்த காரணம் புதிய வரைஸின் புரத மூலக்கூறு முன்னைய வைரசுடன்  99 விகதம் ஒத்துப் போவதாகும்.

இறப்பு விகிதத்திலும், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையிலும், மாற்றமடைந்த வைரஸ் அதிகரிப்பை ஏற்படுத்தவில்லை என ஆரம்பகட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட ஆய்வு அறிக்கை கடந்த செவ்வாய்கிழமை (29) தெரிவித்துள்ளது. எனினும் அதன் தொற்றுவிகிதம் 50 தொடக்கம் 70 விகிதம் அதிகம் என அது மேலும் தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் முன்னைய அறிக்கையும் அதனையே உறுதிப்படுத்தியிருந்தது.

ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் சிறுவர்களை விட வயது வந்தோரையே அதிகம் பாதித்து வந்தது. அதற்கு காரணம் வைரஸ் உட்செல்லும் வழிகள் (the ACE2 receptor) சிறுவர்களின் கலங்களில் குறைவாக இருப்பதே. ஆனால் புதிய வைரஸ் சிறுவர்களை அதிகம் பாதிக்கின்றது என்ற சந்தேகம் எழுந்துள்ளபோதும், அதனை உறுதிப்படுத்த முடியாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. லிவபூல் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய்ப் பிரிவு பேராசிரியர் ஜுலியன் ஹிஸ்கொக்ஸ் என்பவரும் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

மரபணு மாற்றமடைந்த வைரஸ் முதலில் கடந்த செப்ரம்பர் மாதம் கண்டறியப்பட்டதுடன், டிசம்பர் மாதமளவில் இனங்காணப்பட்ட தொற்று நோயாளிகளில் 66 விகிதமானவர்களில் அதன் தாக்கம் அறியப்பட்டுள்ளது. எனினும் புதிய வைரஸின் தொற்று விகிதம் அதிகமானதா என்பதை உறுதிப்படுத்த போதிய தகவல்கள் இல்லை என்கிறார் நொட்டிங்கம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வைரஸ் துறை பேராசிரியர் ஜொனாதன் பால்.

பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட மரபணு மாற்றம் பெற்ற வைரஸ் ஆனது சில வாரங்களுக்கு முன்னர் தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட மரபணு மாற்றம் பெற்ற வைரஸ் உடன் ஒத்துப் போகும் போதும், இது புதிய வகை என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான மரபணு மாற்றம் முன்னரும் கொரோனா வைரஸில் ஏற்பட்டுள்ளது. சீனாவின் வூகான் மாநிலத்தில் கண்டறியப்பட்ட வைரஸிற்கும், அதன் பின்னர் உலகில் பரவிய வைரசிற்கும் இடையில் மரபணு வேறுபாடுகள் உண்டு. அதாவது ஐரோப்பாவில் பரவியது D614G என்ற மரபணு மாற்றம் பெற்ற வைரஸ். அதேசமயம் ஸ்பெயினில் A222V என்ற மரபணு மாற்றம் பெற்ற வைரஸ் பரவியிருந்தது.

இதுவரையில் 17 வரையிலான மரபணு மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது. பெருமளவான மாற்றங்கள் வைரஸின் வெளிக்கவசமாகிய புரதத்திலேயே இடம்பெறுகின்றன. அதன் மூலம் தான் வைரஸ் எமது உடல் கலங்களுக்குள் உட்செல்கின்றது. N501Y என்ற மரபணு மாற்றம் இந்த புரத மூலக்கூறுகள் எமது உடல்கலங்களில் இலகுவாக இணைவதற்கு வழி ஏற்படுத்தும் தகைமை கொண்டது. இது ஒரு இசைவாக்கம் என்கிறார் பேராசிரியர் லோமான்.

H69/V70 என்ற மரபணு மாற்றம் என்பது வைரஸின் புரத்தின் ஒரு பகுதியை அழிப்பதால், அதன் தொற்றும் திறம் இரு மடங்கு அதிகரிக்கின்றது என்கிறார் கேம்பிறிட்ச் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரவி குப்தா. மேலும் இது முன்னர் தொற்றுதலுக்கு உள்ளாகி நோயெதிர்ப்பு சக்தியை பெற்றவர்களின் எதிர்ப்பு சக்தியையும் முறியடித்துவிடும் என்கிறார் அவர். இத்தகைய மாற்றம் கொண்ட வைரஸ்கள் டென்மார்க்கில் உள்ள மின்ங் (Mink) என்ற விலங்கில் கண்டறியப்பட்டதுடன், டென்மார்க் அரசு 17 மில்லியன் விலங்குகளை அண்மையில் அழித்திருந்தது. இந்த விலங்கின் உரோமத்தின் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் என்பது டென்மார்க்கின் பொருளாதாரத்தில் 800 மில்லியன் டொலர்கள் வருமானத்தை ஆண்டுதோறும் கொடுத்து வந்தது.

வைரஸ் மின்ங், எலிகள் போன்ற சிறிய விலங்குகளில் தொற்றுவதுடன், அவை இந்த விலங்குகளில் இலகுவாக மரபணு மாற்றமும் அடையக்கூடியவை. அதன் பின்னர் சில வருடங்களில் மீண்டும் மனிதரைத் தாக்கலாம் என வெல்கம் நிதியம் என்ற அமைப்பின் தலைவர் ஜெரமி பாரார் தெரிவித்துள்ளார். எனவே இலகுவில் வைரஸினால் பாதிக்கப்படும் விலங்குகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு உலக விலங்குகள் நலத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.

mink கோவிட்டின் மரபணு மாற்றம் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்துமா? - ஆர்த்திகன்

மின்ங் என்ற விலங்கில் மரபணு மாற்றம் பெற்ற வைரசினால் டென்மார்க்கில் 200 பேர் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. விலங்குகளில் மரபணு மாற்றம் பெறும் வைரஸ்களுக்கு எதிராக சில சமயங்களில் தடுப்பு மருந்துகள் செயற்படாது என்ற அச்சமும் தோன்றியுள்ளது. கொரோனா வைரஸ் ஏற்கனவே விலங்குகளில் இருந்தே மனிதருக்கு பரவியதால் மீண்டும் விலங்குகளில் விரைவாக பரவி மரபணு மாற்றம் அடைந்து, மனிதரை மீண்டும் தாக்கலாம் என்ற அச்சமும் தோன்றியுள்ளது.

மின்ங், எலிகள் போன்றவை மனிதருடன் மரபணு ரீதியில் பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளதால், வைரஸ் அவற்றை இலகுவாகத் தாக்குகின்றன. அவைகளிலும் நோய் அறிகுறிகள் தென்படுகின்றன. சில சமயம் மனிதரைப்போல அறிகுறிகள் தென்படுவதில்லை. நெதர்லாந்து, டென்மார்க், ஸ்பெயின், சுவீடன், இத்தாலி மற்றும் அமெரிக்காவில் உள்ள மின்ங் விலங்கு பண்ணைகளில் கொரோனா வைரசின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் சில வருடங்களுக்கு முன்னரே இந்த விலங்கு பண்ணைகளைத் தடை செய்திருந்தன. ஜேர்மனியும் தடை செய்யவுள்ளது. நெதர்லாந்து அடுத்த வருடத்தில் எல்லா பண்ணைகளையும் மூடவுள்ளது.

மனிதரில் எவ்வாறு இந்த மரபணு மாற்றம் நிகழ்கின்றது?

நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களின் உடலின் இந்த வைரஸ் கிருமிகளானது மிக அதிகளவில் பெருக்கமடைகின்றன. அவ்வாறு இடம்பெறும்போது தான் அதில் மரபணு மாற்றம் நிகழ்கின்றது.

இந்த பத்தி எழுதும்போது ஒக்ஸ்போட் மற்றும் அஸ்ராசீனிக்கா நிறுவனங்கள் தயாரித்த தடுப்பு மருந்து அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உலகில் 2 தடுப்பு மருந்துகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் இந்த மரபணு மாற்றம் பெற்ற வைரஸ் இற்கு எதிராகவும் செயற்படவல்லவை.

biden vaccine கோவிட்டின் மரபணு மாற்றம் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்துமா? - ஆர்த்திகன்

தடுப்பு மருந்தினால் உருவாக்கப்படும் உடலின் நோயெதிர்ப்பு மூலக்மூறுகள் (Antibody) வைரஸ் இன் புரத கவசத்தின் பல பகுதிகளைத் தாக்கும் சக்தி கொண்டவை. அதில் மரபணு மாற்றமடைந்த பகுதிகளும் அடங்கும். ஆனால் அதிக மரபணு மாற்றங்கள் நிகழ அனுமதித்தால் அது வருந்தத்தக்கது என்கிறார் பேராசிரியர் குப்தா.

தடுப்பு மருந்துகளில் (Vaccine) இருந்து தப்பிக்கும் கொரோனா வைரசுகளும் காலப்போக்கில் உருவாகலாம். எனவே தற்போது வருடம்தோறும் குளிர்கால காய்ச்சலுக்கு போடப்படும் தடுப்பு மருந்து போல நாம் ஒவ்வொரு வருடமும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தைத் தயாரிக்க வேண்டும். தற்போது உள்ள தடுப்பு மருந்துகளில் மாற்றங்களை செய்வது இலகுவானது. எனவே புதிய தடுப்பு மருந்தை தயாரிப்பதில் சிரமம் இருக்காது என கூறுகின்றார் ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டேவிட் றொபேட்சன்.

அதாவது மரபணு மாற்றம் என்பது வைரசில் நிகழ்வது சாதாரணமானது என்ற போதும், எதிர்வரும் சில வருடங்களுக்கு நாம் அவதானமாக இருப்பதுடன், மருத்துவத்துறை மற்றும் அது தொடர்பான ஆய்வுகளில் அரசுகள் அதிக கவனம் செலுத்த வேண்டியே தேவையும் ஏற்பட்டுள்ளது.