கோத்தபயா மீது வழக்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் திட்டமிட்ட சதி – மகிந்த

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபயா ராஜபக்ஸ மீது அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையானது, புலம்பெயர்ந்த தமிழர்களின் திட்டமிட்ட சதியாகும் என்று சிறிலங்கா எதிர்க்கட்சித் தலைவரும், கோதபயா ராஜபக்ஸவின் சகோதரருமான மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

28.06 வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பத்திரிகையாளரிடம் உரையாற்றும் போது, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த வழக்கானது கோதபயா ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவதற்குத் தடையாக அமையாது என்று தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்தே வேட்பாளர் நியமிக்கப்படுவார். வேட்பாளர் யார் என்பது அனைவருடனும் கலந்துரையாடிய பின்னரே தீர்மானம் எடுக்கப்படும். சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்தும் இன்னும் கலந்துரையாடல்களே இடம்பெற்று வருகின்றன.  இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட்டால். எமக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாது. அவர் வேட்பாளராக வருவதை அனைவரும் விரும்பலாம்.  ஆனால் அவர் ஜனாதிபதியாவதை மக்கள் விரும்பவில்லை.