கோட்டாவை குடைந்தெடுத்த பத்திரிகையாளர்கள் ; திணறிய தம்பி, துணைக்கு வந்த அண்ணன்

உள்நாட்டு வௌிநாட்டு ஊடகவியலாளர் பலர் கலந்துகொண்ட  செய்தியாளர் சந்திப்பில் சரமாரியாகத் தொடுக்கப்பட்ட கேள்விக் கணைககளுக்கு பதில் அளிக்க முடியாமல் கோட்டாபய ராஜபக்‌ஷ திணறினார். அவ்வாறான பல சந்தர்ப்பங்களில் அவரது சகோதரரான எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ இடையில் குறுக்கீடு செய்து பதில் அளித்தார்.

சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது? ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளிக்கயில், காணாமல் போனவர்கள் தொடர்பாக தாம் விசாரணை நடத்தியதில், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என்பது தெளிவானதாகவும் கோட்டா  குறிப்பிட்டார்.

“பாதுகாப்புச் செயலாளராக நான் செயற்பட்ட போது 13,784 பேருக்குப் புனர்வாழ்வு அளித்து மீள சமூகமயப்படுத்தினேன். அது மாத்திரமன்றி அவர்களுக்கு இராணுவத்திலும் சிவில் பாதுகாப்பு படையிலும் தொழில்களை வழங்கியிருந்தோம். உலகில் சிறப்பான புனர்வாழ்வு திட்டமொன்றை செயற்படுத்திய நாடு இலங்கையாகும். நாம் யாரையும் தடுத்து வைக்கவில்லை. உச்ச பட்சமாக 2 வருடங்கள் புனர்வாழ்வு வழங்கி விடுதலை செய்தோம் என்றார்.

அவ்வாறானால், எவரும் காணாமல் போகவில்லை என்கிறீர்களா ? எனவும் மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது.

காணாமல் போன நபர்கள் என்பதும் இராணுவத்திடம் சரணடைந்த நபர்கள் என்பதும் இரு வேறு விடயங்களாகும். இராணுவ நடவடிக்கைகளின் போது 4 ஆயிரத்திற்கும் அதிகமான படையினரும் காணாமல் போனார்கள். எத்தகைய இராணுவ நடவடிக்கையிலும் அடையாளங் காண முடியாத சடலங்கள் இருக்க முடியும். யாழ்ப்பாணத்தில் அவ்வாறான நிலைமையை நான் நேரடியாகவே கண்டிருக்கிறேன். சடலங்களைக் கண்களால் காணாததாலே அவர்கள் காணாமல் போயுள்ளதாக அவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர். யுத்தத்தில் அவ்வாறு நடக்க சந்தர்ப்பமுள்ளது. ஆனால், சரணடைந்த அனைவரையும் நாம் புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்துள்ளதாகவும் கோட்டாபய ராஜபக்‌ஷ பதிலளித்தார்.

ஆனால்,சரணடைந்தவர்கள் மீளத் திரும்பிவரவில்லை என சிலர் குற்றஞ்சாட்டியுள்ளனரே.அவர்கள் பொய் கூறுவதாக கூறுகின்றீர்களா?

என ஊடகவியலாளர் ஒருவர் வினவினார்.

இதற்குப் பதிலளித்த அவர், எவருக்கும் எந்தக் குற்றச்சாட்டும் கூறமுடியும். அவை ஊகம் மாத்திரம் தான். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து நாம் விசாரணை நடத்தினோம். ஒவ்வொரு நபராக தேடிப்பார்த்தோம். அவ்வாறு எந்த சம்பவமும் நடைபெறவில்லை என்று கூறினார்.

உள்நாட்டு வௌிநாட்டு ஊடகவியலாளர் பலர் கலந்துகொண்ட  செய்தியாளர் சந்திப்பில் சரமாரியாகத் தொடுக்கப்பட்ட கேள்விக் கணைகளால் பதில் அளிக்க முடியாமல் கோட்டாபய ராஜபக்‌ஷ தடுமாற்றமான நிலையை எதிர்நோக்கியதையும் காணக்கூடியதாகவிருந்தது. அப்போது அவரது சகோதரரான எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ இடையில் குறுக்கீடு செய்து பதில் அளித்தார்.

புலிகள் அமைப்புடன் 2009இல் நடந்த இறுதி யுத்தத்திற்குத் தாமோ அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவோ அல்லவென்றும் அப்போதைய இராணுவத்தளபதியே தலைமை தாங்கி யுத்தத்தை நடத்தினார் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

தமது சகோதரரான அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷஇராணுவத்திற்குத் தலைமைதாங்கவில்லையென்றும் இராணுவத்தளபதியே இராணுவத்தை வழிநடத்தினார் என்றும் கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் “யுத்த காலத்தில் படையினரிடம் சரணடைந்த புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு என்னவானது, அவர்கள் தற்போது எங்கு இருக்கிறார்கள்?” என்ற ஹிந்து பத்திரிகை நிருபர் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த கோட்டாபய ராஜபக்‌ஷ,

“நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள். நான் இராணுவத்திற்குத் தலைமை தாங்கவில்லை”

கேள்வி…உங்களுடைய சகோதரர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமைத்துவம் வழங்கிய யுத்தம் நடைபெற்றபோது கைதுசெய்யப்பட்ட அல்லது சரணடைந்த புலிகளுக்கு என்ன நடந்தது?”

பதில்.. எனது சகோதரர் இராணுவத்திற்குத் தலைமைதாங்குவதில்லை. இராணுவத்தளபதியே இராணுவத்தை வழிநடத்தினார்.

கேள்வி… என்றாலும் நீங்கள் முக்கியமான ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தக் கேள்வியை எழுப்பும் மக்களுக்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

பதில்.. என்ன கேள்வி?

கேள்வி… சரணடைந்த மக்களுக்கு என்ன நடந்தது?

பதில்…இராணுவ நடவடிக்கைகளின் போது அடையாளங்காண முடியாத சடலங்கள் இருக்க முடியும். உறவினர்களின் சடலங்களைக் கண்களால் காணாததாலே, தமது உறவினர்கள் காணாமல் போயுள்ளதாக சிலர் கூறுகிறார்கள். சரணடைந்தவர்கள் மீளத் திரும்பிவரவில்லை என்பது ஊகம் மாத்திரமே என்று கூறிய அவர், இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து நாம் விசாரணை நடத்தியதில் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என்பது தௌிவானதாகவும் அவர் குறிப்பிட்டார். 2015 ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமை பேரவைக்கு வழங்கிய உறுதியை நிறைவேற்ற உங்கள் அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா? என எழுப்பப்பட்ட மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த கோட்டாபய,

நாம் தொடர்ச்சியாக ஐ.நாவுடன் செயற்படத் தயாராக இருக்கிறோம். அவர்கள் இந்த அரசாங்கத்துடன் எத்தகைய உடன்பாட்டை கொண்டுள்ளனர் என்று எமக்குத் தெரியாது.எனது தனிப்பட்ட அறிவிற்கு அமைய அது சட்டபூர்வமானதல்ல. இருந்தாலும் ஐ.நாவுடனும் ஏனைய மனித உரிமை அமைப்புகளுடனும் நெருக்கமாகச் செயற்பட நான் தயாராக இருக்கிறேன் என்றார். தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் குறித்தும் இதன்போது வினவப்பட்டது.