கோட்டபாயாவின் ஆட்சியில், தமிழர்களின் நிலங்களில் அதிகரிக்கும் சிங்கள குடியேற்றங்கள்!

புதிய ஆட்சி வந்ததன் பின்னர் பெரும்பான்மையின சமூகத்தினர் சட்டங்கள், கொள்கைகள் எல்லாவற்றையும் தூக்கியெறிந்துவிட்டு குடியேற்றுகின்ற, குடியேறுகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பிர் ஞா.சிறிநேசன், இவர்களை கட்டுப்படுத்த முடியாதளவிற்கு நிலைமை காணப்படுகின்றது கூறியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பிர் ஞா.சிறிநேசன் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

“தற்போதைய ஜனாதிபதி பதவியேற்று ஒருவருடம் கடக்கப் போகின்றது. அதேபோல சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆட்சிபீடமேறி இரண்டு மாதங்கள் கடந்துள்ளது. இந்த நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் பேசுகின்ற மக்கள் அனுபவிக்கின்ற சில கஷ்ட நஷ்டங்கள் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கின்றது. குறிப்பாக மயிலத்தமடு,மாதவனை ஆகிய பிரதேசங்கள், எங்களுடைய பண்ணையாளர்கள் காலகாலமாக மேய்ச்சல் தரையாக பயன்படுத்திவந்தவையாக காணப்படுகின்றன. இந்த இடத்தில் தற்போது திட்டமிட்ட அடிப்படையில் சட்டவிரோதமான முறையில் பெரும்பான்மையினத்தவர்களின் குடியேற்றங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.

தெஹியத்த கண்டியவைச் சேர்ந்த தேரரொருவரின் தலைமையிலும் உள்ளுர் அரசியல்வாதிகளின் வழிகாட்டலுடனும் மீண்டும் குடியேற்றங்கள் நடப்பதற்கான செயற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. காடழிப்பு நடைபெற்றிருக்கின்றது. மகாவலி அதிகாரசபைக்கு உட்பட்ட பிரதேசம் எனக்கூறப்படுகின்ற பிரதேசங்களில் காடழிப்பு நடைபெற்று  பெரியமரங்களெல்லாம் வெட்டி வீழ்த்தப்பட்டிருக்கின்றன.

இந்த விடயம் சம்பந்தமாக சட்டத்தை நிலைநாட்டவேண்டியவர்களது கருத்துக்கள், அங்கு செல்லுபடியாகுவதாகத் தெரியவில்லை.

கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டிற்கு உட்பட்ட காலத்தில்கூட அம்பாறை மாவட்டத்திலிருந்து வருகை தந்த பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் குடியேறியிருந்தபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயத்தில் தலையீடு செய்து பிரச்சினைகள் எதுவுமின்றி உரிய அதிகாரசபையோடு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை வெளியேற்றுகின்ற செயற்பாடுகள் மிகவும் துல்லியமாகவும் சுமுகமாகவும் நடைபெற்றது.

ஆனால் அந்தக்காலம் ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சிக்காலமாக அமைந்திருந்தது. தற்போது புதிய ஆட்சி வந்ததன் பின்னர் பெரும்பான்மையின சமூகத்தினர் சட்டங்கள், கொள்கைகள் எல்லாவற்றையும் தூக்கியெறிந்துவிட்டு குடியேற்றுகின்ற, குடியேறுகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிலுக்கின்றார்கள். இவர்களை கட்டுப்படுத்த முடியாதளவிற்கு நிலைமை காணப்படுகின்றது.” என்று தெரிவித்துள்ளார்.