கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின்அபிவிருத்திப் பணி இந்திய அதானி குழுமத்திடம்!

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் அபிவிருத்திப் பணிகளை இந்திய நிறுவனம் ஒன்றுக்கு இலங்கை கொடுத்திருப்பதாக, இந்திய, சர்வதேச, உள்நாட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ள போதிலும், இலங்கை அரசாங்கம் இவ்விடயத்தில் தொடர்ந்ததும் மௌனமாக இருக்கின்றது.

இந்தியாவின் பிரபல நிறுவனமான அதானி குழுமம் (Adani Group) நிறுவனத்துக்கு இதன் 49 வீதமான பங்கு வழங்கப்பட்டுள்ள அதேவேளையில், இலங்கை துறைமுக அதிகார சபை 51 வீதமான பங்கை வைத்திருக்கும் என சர்வதேச, உள்நாட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருக்கின்றன.

ஆனால், “இது வெறுமனே ஊகங்களின் அடிப்படையிலான செய்தி” எனத் தெரிவித்திருக்கும் இலங்கைத் துறைமுக அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் தயா ரட்ணாயக்க, “இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் எதனையும் இதுவரையில் எடுக்கவில்லை” எனவும் கூறியுள்ளார். ஆனால், அரச தரப்பு இச்செய்திகள் தொடர்பில் உத்தியோகபூர்வமாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

கிழக்கு முனையத்தின் அபிவிருத்தி தொடர்பில் இலங்கை, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளிடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கடந்த வருடத்தில் கைச்சாத்திடப்பட்டிருந்தது. “அந்த உடன்படிக்கையை இலங்கையோ மற்றைய தரப்புக்களோ இதுவரையில் முறித்துக்கொள்ளவில்லை” எனவும் தயா ரட்ணாயக்க குறிப்பிட்டார். அதனால், இது இப்போதும் நடைமுறையில் இருப்பதாகவே கருத வேண்டும்.

இந்த உடன்படிக்கையின் அடிப்படையில்தான் அதானி குழுமத்திடம் துறைமுக அபிவிருத்திப் பணி ஒப்படைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தது. ஆளும் கட்சிக்குள்ளிருந்தும், சிங்கள – பௌத்த தேசியவரிகளிடமிருந்தும் உருவாகியிருக்கும் எதிர்ப்பின் காரணமாகவே அரச தரப்பு இவ்விடயத்தில் மௌனமாக இருக்கலாம் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.