கொரோனா தொற்றை காரணம் காட்டி மே தின கூட்டங்களுக்கு தடை – எதிரணியினர் சீற்றம்

மே தினத்தை முன்னிட்டு பொதுக் கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்தாமலிருக்க அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இணக்கம் தெரிவித்துள்ளனர் என கொரோனா ஒழிப்புக்கான தேசிய செயல்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

சிறிலங்கா சுதந்திரக்கட்சி இம்முறை தனித்து மே தினக் கூட்டத்தை நடத்தத் தீர்மானித்துள்ளது என அந்தக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நேற்று அதிரடியாக அறிவித்திருந்த சில மணி நேரங்களுக்குள் கொரோனா ஒழிப்புக்கான தேசிய செயல்பாட்டு மத்திய நிலையம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் மே தினக் கூட்டம் தொடர்பிலான முன்கூட்டிய நடவடிக்கைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மே தினக் கூட்டம் தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், கொரோனா ஒழிப்புக்கான தேசிய செயல்பாட்டு மத்திய நிலைய உறுப்பினர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நேற்று மத்திய நிலைய காரியாலத்தில் இடம்பெற்றது.

இப்பேச்சுவார்த்தையின் போது மே தினக் கூட்டத்தை நடத்தாமலிருக்க எடுத்த தீர்மானத்துக்கு அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் இணக்கம் தெரிவித்தனர்.

தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் பொது மக்கள் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாமல் பொறுப்பற்ற வகையில் செயல்பட்டதைக் காண முடிகிறது.

இதனால் அடுத்த நான்கு தொடக்கம் ஆறு வாரங்ளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கக் கூடும் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு விஷேட வைத்தியர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்

இவ்வாறான பின்னணியில் மே தினக் கூட்டத்தை ஒன்றிணைந்து நடத்துவதா? அல்லது தனித்து நடத்துவதா? என அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டு வந்தன.

மே தினக் கூட்டம் தொடர்பிலான பேச்சுவார்த்தை கொரோனா வைரஸ் ஒழிப்புச் செயல்பாட்டு நிலையத்தில் இடம்பெற்றது.

தற்போதைய சுகாதார காரணிகளைக் கருத்தில் கொண்டு இம்முறை மே தினக் கூட்டம், பேரணி ஆகியவற்றை நடத்தாமலிருப்பது அவசியம் என செயல்பாட்டு நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா விடுத்த கோரிக்கைக்கு அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளும் இணக்கம் தெரிவித்தனர். இதனடிப்படையில் மே தினக் கூட்டம் குறித்து அரசியல் கட்சிகள் ஏற்பாடு செய்திருந்த அனைத்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பொதுஜன பெரமுனவின் தீர்மானங்களுக்கு எதிராக பங்காளிக்கட்சிகள் செயல்பட முற்பட்டுள்ள நிலையில் கொரோனாவை காரணம் காட்டி மே தினக் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஒழிப்புக்கான தேசிய செயல்பாட்டு மத்திய நிலையம் ஊடாக ஆளும்கட்சியான பொதுஜன பெரமுன தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ள அதேவேளை பங்காளிக் கட்சிகளை தனிவழியில் செல்லவிடாது கட்டுப்படுத்தும் நோக்கில் புது வியூகம் வகுத்துள்ளது என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.